தேடுதல்

கடவுளின் உடனிருக்கும் பிரசன்னம்! கடவுளின் உடனிருக்கும் பிரசன்னம்!   (https://miro.medium.com/v2/resize:fit:1200/1*PmvLU2E3L9nPQ-R6tjfvmQ.jpeg)

விவிலியத் தேடல்: திருப்பாடல் 58-2, கடவுளின் உடனிருக்கும் பிரசன்னம்!

தாவீது அரசரின் வழியில், நமது சொல்லிலும் செயலிலும் நம்பகத்தன்மையை நமதாக்கி நானிலம் செழிக்க வாழ்வோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 58-2, கடவுளின் உடனிருக்கும் பிரசன்னம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘நீதியின் தேவன் நித்தமும் இருக்கின்றார்!' என்ற தலைப்பில் 58-வது திருப்பாடலில், 1 முதல் 5 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 6 முதல் 11 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவு செய்வோம். இப்போது அமைந்த மனதுடன் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். "கடவுளே, அவர்கள் வாயின் பற்களை நொறுக்கிவிடும்; ஆண்டவரே, அந்த இளஞ்சிங்கங்களின் கடைவாய்ப் பற்களை உடைத்துவிடும். காட்டாற்று நீர்போல அவர்கள் மறைந்தொழியட்டும்; அவர்கள் தம் வில்லை நாணேற்றியவுடன் அம்புகள் முறிந்து போகட்டும்!  ஊர்ந்து ஊர்ந்து தேய்ந்து போகும் நத்தைபோல் ஆகட்டும்; பிறந்தும் கதிரொளி காணாத பெண்வயிற்றுப் பிண்டம்போல் ஆகட்டும். முள் நெருப்பினால் உங்கள் பானை சூடேறுமுன்னே, பச்சையானதையும் வெந்துகொண்டிருப்பதையும் சுழற்காற்றினால் அவர் அடித்துக்கொண்டு போவார். தீயோர் தண்டிக்கப்படுவதை நேர்மையாளர் காணும்போது மகிழ்வர்; அவர்கள் தம் பாதங்களைப் பொல்லாரின் இரத்தத்தில் கழுவுவர். அப்போது மானிடர், ‘உண்மையிலேயே நேர்மையாளருக்குக் கைம்மாறு உண்டு; மெய்யாகவே பூவுலகில் நீதியுடன் ஆளும் கடவுள் ஒருவர் இருக்கின்றார்’ என்று சொல்வர்" (வச 6-11).  

முதலாவதாக, "கடவுளே, அவர்கள் வாயின் பற்களை நொறுக்கிவிடும்; ஆண்டவரே, அந்த இளஞ்சிங்கங்களின் கடைவாய்ப் பற்களை உடைத்துவிடும்" என்கின்றார் தாவீது. இங்கே வாயின் பற்களை நொறுக்கிவிடும் என்று கூறும் தாவீதின் வார்த்தைகளில் எதிரிகள் அவருக்கு அளிக்கும் துயரங்களின் வேதனையை நம்மால் காண முடிகிறது. அந்தளவுக்கு அவர்களின் செயல்கள் தாவீதுக்குக் கோபத்தை வரவழைக்கக் கூடியதாக இருந்திருக்கின்றன என்பதைப் பார்க்கின்றோம். அதுமட்டுமன்றி, “ஆண்டவரே, எழுந்தருளும்; என் கடவுளே, என்னை மீட்டருளும்; என் எதிரிகள் அனைவரையும் கன்னத்தில் அறையும்! பொல்லாரின் பல்லை உடையும்!” (காண்க திபா 3:7) என்று ஏற்கனவே மூன்றாவது திருப்பாடலில் கூறியுள்ளார். மேலும் "அந்த இளஞ்சிங்கங்களின் கடைவாய்ப் பற்களை உடைத்துவிடும்" என்கிறார். காரணம், இரையை தனது நகங்களால் பற்றிப்பிடித்ததும் முதலில் சதையைப் தின்றபிறகு, பின்னர் கடினமான எலும்புகளையெல்லாம் தனது கடவாய்ப்பற்கள் கொண்டு சுக்குநூறாக உடைத்துத் தின்றுவிடும் வலிமை அந்த இளஞ்சிங்கங்களுக்கு உண்டு. அப்படியென்றால், தன்னை முழுவதுமாக தனது பெயரே இல்லாத அளவிற்கு ஒழித்துவிட நினைக்கும் தன் எதிரிகளின் செயல்களை எடுத்துக்காட்டும் விதமாகவே இவ்வாறு கூறுகின்றார் தாவீது என்பதைப் புரிந்தகொள்வோம். “அவர்கள் என்னைப் பின்தொடர்கின்றனர்; இதோ! என்னை வளைத்துக் கொண்டனர்; அவர்கள் என்னைத் தரையில் வீழ்த்துவதற்கு, வைத்த கண் வாங்காது காத்திருக்கின்றனர். பீறிப்போடத் துடிக்கும் சிங்கத்திற்கு அவர்கள் ஒப்பாவர்; மறைவிடத்தில் பதுங்கியிருக்கும் இளஞ்சிங்கத்திற்கு நிகராவர்" (காண்க திபா 17:11-12) என்றும், “அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்; இரைதேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள்” (காண்க. திபா 22:13) என்றும், வேறுசில திருப்பாடல்களிலும் தாவீது உரைப்பதையும் காண்கின்றோம். இதன்வழியாக, தனது எதிரிகளின் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் அவர்தம் கொடியதிட்டங்களையும் எடுத்துரைக்கும் ஒருவழியாக இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் தாவீது.

இரண்டாவதாக, "காட்டாற்று நீர்போல அவர்கள் மறைந்தொழியட்டும்; அவர்கள் தம் வில்லை நாணேற்றியவுடன் அம்புகள் முறிந்து போகட்டும்!  ஊர்ந்து ஊர்ந்து தேய்ந்து போகும் நத்தைபோல் ஆகட்டும்; பிறந்தும் கதிரொளி காணாத பெண்வயிற்றுப் பிண்டம்போல் ஆகட்டும்" என்று கூறுகின்றார் தாவீது அரசர். காட்டாற்று வெள்ளம் என்பது எப்போதும் நிலையாய் இருக்காது. திடீரென்று தோன்றி திடீரென்று மறைந்துவிடும். ஆகவே, தன்னை துன்புறுத்தும் தனது எதிரிகளும் இவ்வாறு ஒருநாள் மறைந்துபோவர் என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே "காட்டாற்று நீர்போல அவர்கள் மறைந்தொழியட்டும்" என்கின்றார் தாவீது. அடுத்து, நாணேற்றப்பட்ட அம்பு எப்போதும் குறிபார்த்து தாக்கத் தாயாராக இருக்கும். அந்த நேரத்தில் அது முறிந்துபோனால் அதனை எய்திடத் தயாராக இருக்கும் அந்த மனிதரின் மனநிலை எப்படி இருக்கும்? அந்நிலையில், அவர் தோற்றுப்போன மற்றும் தொங்கிப்போன முகத்துடன் இருப்பார் அல்லவா? அவ்வாறே தன்னைத் தாக்கத் தயாராக இருக்கும் தனது எதிரிகளின் கொடிய எண்ணங்களும், அவர்களின் தாக்குதல் முயற்சிகளும் ஒன்றுமில்லாமல் போய்விட வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே, "அவர்கள் தம் வில்லை நாணேற்றியவுடன் அம்புகள் முறிந்து போகட்டும்!" என உரைக்கின்றார் தாவீது. அடுத்தபடியாக, நத்தை எப்படி ஊர்ந்து போகும் என்பதும், ஒரு கட்டத்தில் அது தேய்ந்து அதன் ஓடுகள் உடைந்து விடும் என்பதும், நாம் வாழ்வில் பார்க்கும் ஒன்றுதான். அதுமட்டுமன்றி, ஊர்ந்து ஊர்ந்து செல்லும் நத்தை வழியில் ஏதாவது ஓர் ஆபத்தை சந்திக்க நேர்ந்தால், அதனால் விரைவாக ஓடி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது. மாறாக, அது தனது எதிரியிடம் அகப்பட்டு அழிந்து போய்விடும். அத்தகையதொரு நிலை தனது எதிரிகளுக்கும் ஏற்படவேண்டுமென இறைவனிடம் முறையிடும் விதமாக, "ஊர்ந்து ஊர்ந்து தேய்ந்து போகும் நத்தைபோல் ஆகட்டும்" என்கின்றார் தாவீது. அதன்பின்னர், "பிறந்தும் கதிரொளி காணாத பெண்வயிற்றுப் பிண்டம்போல் ஆகட்டும்" என்று கூறுகின்றார் தாவீது. இங்கே பிண்டம் என்பது சிசுவைக் குறிக்கிறது, இந்த வார்த்தை சற்று கடினமான ஒன்றுதான். அதற்குக் காரணம், ஒரு தாய் தனது கருவில் குழந்தை ஒன்றை கருத்தாங்கி 10 மாதங்கள் அதனைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து பிரசவ வலிகள் அத்தனையையும் தாங்கி பெற்றெடுகிறார். இத்தகையதொரு சூழலில், அக்குழந்தை பிறந்த சில மணித்துளிகளிலேயே சூரிய ஒளியைப் பார்க்காமல் இறந்துபோனால் அந்தத் தாயின் மனநிலை எப்படி இருக்கும்? மேலும் அப்பெண்ணின் உறவினருக்கும் அண்டை வீட்டாருக்கும் இது எத்தனை பெரிய துயரத்தைக் கொடுக்கும்? குறிப்பாக, அவளது கணவர் வீட்டார் அப்பெண்ணை எப்படியெல்லாம் தரம்தாழ்ந்து பேசுவார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். இங்கே இப்படிப்பட்ட வார்த்தைகளைத் தாவீது கூறுவதால் அவர் பெண்மையைப் புரிந்துகொள்ளவில்லை என்று நாம் அர்த்தம் கொள்ளக்கூடாது. மாறாக, அப்படிப்பட்ட நிலையில் ஒரு பெண் அனுபவிக்கும் துயரங்களையும் வலிகளையும் அவர்தம் எதிரிகளும் அனுபவிக்க வேண்டும் என்பதை மனதிற்கொண்டே அவர் இப்படி கூறியிருக்க வேண்டும்.   

மூன்றாவதாக, “முள் நெருப்பினால் உங்கள் பானை சூடேறுமுன்னே, பச்சையானதையும் வெந்துகொண்டிருப்பதையும் சுழற்காற்றினால் அவர் அடித்துக்கொண்டு போவார்" என்கின்றார் தாவீது. இப்போதெல்லாம் பானைகள் அதிகம் பயன்பாட்டில் இல்லை. ஆனாலும் அதன் பின்னணியில் தாவீதின் இந்த வார்த்தைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நான் என் அன்னையுடன் பலமுறை பானை வாங்குவதற்காகச் சந்தைக்குப் போயிருக்கின்றேன். அப்போது அதனை நான் நேரிடையாகவும் பார்த்திருக்கிறேன். அதாவது, பானையை வாங்குவதற்கு முன்பு அதனைக் கையில் எடுத்துத் தட்டிப் பார்ப்பார் என் அன்னை. பல பானைகளை எடுத்து அதனைச் இப்படிச் செய்து பார்ப்பார். இதன் பொருள் என்ன? ஒரு பானையை எடுத்து அதனைத் தட்டிப் பார்க்கும்போது அதிலிருந்து ஒருவிதமான ஓசை எழும்பும். அதனைக்கொண்டு அந்தப் பானை நன்றாக சுடப்பட்ட பானையா, அல்லது சுடப்படாத பானையா என்பதை தெரிந்துகொள்வார். காரணம், சுடப்படாத பானை விரைவில் உடைந்துபோகும். எனது அன்னை மட்டுமல்ல பானை வாங்கப்போகும் எல்லா பெண்களும், ஏன் சில ஆண்களும் கூட இப்படித்தான் தட்டிப் பார்த்து வாங்குவர். அப்படி பல பானைகள் சரியாக நெருப்பில் வேகவில்லை அல்லது சுடப்படவில்லை என்றால், அவற்றை வியாபாரம் செய்யும் அந்த வியாபாரிக்குப் பெருத்த நட்டம் ஏற்படும் அல்லவா? இதுவொருபுறம் இருக்கட்டும். மறுபுறம் பானை செய்யும் மனிதர் ஒருவர் பானைகளை நெருப்பில் சூடாகிக்கொண்டே இருக்கும் வேளை, பச்சையான மற்றும் வெந்துகொண்டிருக்கும் பானைகளைத் திடீரென ஏற்படும் சுழற்காற்று அடித்துக்கொண்டு போனால் அந்த மனிதருக்கு எப்படி இருக்கும்? அவர் மனது என்ன பாடுபடும்? இதனையெல்லாம் நன்கு மனதில் உணர்ந்தவராக, தனது எதிரிகளுக்கும் இப்படிப்பட்டதொரு இக்கட்டான நிலை ஏற்பட வேண்டும் என்று இங்கே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் தாவீது.

இறுதியாக, ஒருவர் தனது தீயவர்களால் அல்லது எதிரிகளால் பல்வேறு சூழல்களில் மிகவும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டு, ‘எனது வாழ்வே அவ்வளவுதான்... இனி நான் ஒருபோதும் இதிலிருந்து தப்பவே முடியாது...’ என்ற நிலை ஏற்பட்டு அவரது உள்ளம் கலக்கமடைகின்றது என்று வைத்துக்கொள்வோம். அத்தகையதொரு நிலையில் தனது எதிரிகள் கடவுளால் வீழ்த்தப்படும்போது அவருடைய உள்ளத்தில் மகிழ்ச்சி எந்தளவுக்குக் கரைபுரண்டோடுமோ அதே அளவு மகிழ்ச்சியை தானும் அடைவேன் என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே, "தீயோர் தண்டிக்கப்படுவதை நேர்மையாளர் காணும்போது மகிழ்வர்; அவர்கள் தம் பாதங்களைப் பொல்லாரின் இரத்தத்தில் கழுவுவர். அப்போது மானிடர், ‘உண்மையிலேயே நேர்மையாளருக்குக் கைம்மாறு உண்டு; மெய்யாகவே பூவுலகில் நீதியுடன் ஆளும் கடவுள் ஒருவர் இருக்கின்றார்’ என்று சொல்வர்" என்று கூறி இந்தத் திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது.

ஆகவே, தாவீதை அரசரைப் போன்று நெருக்கடியான வேளைகளில் கடவுளிடம் நம்மை முழுமையாக ஒப்படைப்போம். நாம் தூங்கினாலும் நம்மைத் தூங்காமல் விழித்திருந்து காக்கும் கடவுளுக்குத் தெரியும் நமது தேவைகள் என்னவென்று. நமக்கு முன்பும் நமக்குப் பின்பும் ஆயிரம் எதிரிகள் நம்மைத் துரத்தினாலும், கண்ணின் மணியெனக் காக்கும் கடவுள் நம்முடன் இருக்கின்றார் என்ற நம்பிக்கையில் நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் இறைஞ்சுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 September 2024, 13:19