தேடுதல்

மன்னர் சவுல் தாவீதை கொல்ல முயலும் காட்சி மன்னர் சவுல் தாவீதை கொல்ல முயலும் காட்சி  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 59-1, துன்பத்திலும் தூயோராய் வாழ்வோம்!

நமது அன்றாட வாழ்வில், யார் நமக்கு என்ன தீங்கு செய்தாலும் அவர்களை வெறுக்காது அன்புசெய்யும் தூய இதயத்தைப் பெறுவோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 59-1, துன்பத்திலும் தூயோராய் வாழ்வோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘‘கடவுளின் உடனிருக்கும் பிரசன்னம்!!' என்ற தலைப்பில் 58-வது திருப்பாடலில் 6 முதல் 11 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து அத்திருப்பாடலை நிறைவு செய்தோம். இவ்வாரம் 59-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். 'பாதுகாப்புக்காக மன்றாடல்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 17 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. இந்தத் திருப்பாடல் குறித்து தியானிப்பதற்கு முன்பாக, எந்தச் சூழலின் பின்னணியில் இது எழுதப்பட்டது என்பதை அறிந்துகொள்வோம். சவுலுக்கும் தாவீதிக்கும் இடையேயான பிரச்சனைகளை நாம் தொடர்ந்து சிந்தித்து வருகின்றோம். மன்னர் சவுல் கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட முதல் அரசர். ஆனாலும் அவரிடம் விளங்கிய பேராசையும், தீய செயல்பாடுகளும் கடவுளுக்கு மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்தன. “சவுலை அரசனாக்கியதற்காக நான் வருந்துகிறேன். ஏனெனில், அவன் என்னை பின்பற்றாமல் விலகிவிட்டான். என் வார்த்தைகளின்படி நடக்கிவில்லை” என்று சாமுவேலிடம் கடவுள் கூறியபோது, சாமுவேல் மனம்வருந்தி இரவெல்லாம் ஆண்டவரிடம் மன்றாடினார் என்று பார்க்கின்றோம் (காண்க 1 சாமு 15:10-11). ஆனால் தாவீதை கடவுள் இஸ்ரயேல் மக்களின் அரசராக சவுலுக்குப் பதிலாகத் தெரிந்துகொண்டார் (காண்க 1 சாமு 16:13). கடவுள் தாவீதை இஸ்ரயேல் மக்களின் அரசராகத் தேர்வுசெய்துகொண்டாலும், அவர் அந்தப் பதவியை மன்னர் சவுலிடமிருந்து அபகரிக்க ஒருபோதும் விரும்பியதுமில்லை, முயற்சி செய்ததுமில்லை. ஆனால் மன்னர் சவுல்தான் தாவீதுமீது பொறாமைகொண்டு அவருக்கு சொல்லமுடியாத அளவிற்குத் துயரங்களையும் வேதனைகளையும் தந்தார் (காண்க. 1சாமு 19:9–10).

தாவீது கோலியாத்தைக் கொன்றொழித்ததிலிருந்து அவர்மீது சவுல் காழ்ப்புணர்வும் வெறுப்புணர்வும் கொள்ளத் தொடங்கினார். தாவீதைக் கொல்ல வேண்டுமென்று தன் மகன் யோனத்தானிடமும் தம் அலுவலர் எல்லோரிடமும் சவுல் தெரிவித்தார். ஆனால், சவுலின் மகன் யோனத்தான் தாவீதின் மீது மிகுதியாக அன்பு கொண்டிருந்ததால் அவருடைய நற்குணங்களை எல்லாம் தன் தந்தைக்கு எடுத்துச்சொல்லி அதைத் தடுத்தார். யோனத்தானின் வார்த்தைகளைக் கேட்ட சவுல் “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! அவன் கொலை செய்யப்படமாட்டான்” என்று உறுதியளித்தார். மறுபுறம் இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லி யோனத்தான் தாவீதைத் தேற்றினார். ஆகவே, சவுலின் தீய செயல்களையெல்லாம் மறந்தவராக மீண்டும் தாவீது புறப்பட்டு பெலிஸ்தியருடன் போரிட்டு அவர்களில் மிகுதியானோரை வெட்டி வீழ்த்தினார். இதனால் தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மன்னர் சவுல், மீண்டும் தாவீதுமீது வன்மம்கொண்டு அவரைப் பழிதீர்க்க எண்ணினார். அவர் தம் வீட்டில் ஈட்டியுடன் வீற்றிருக்க, தாவீது யாழ் எடுத்து மீட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது சவுல் தாவீதை ஈட்டியால் சுவரோடு சேர்த்துக் குத்த முயன்றார். ஆனால், சவுலின் குறியிலிருந்து அவர் விலகினதால் சவுலின் ஈட்டி சுவரில் பாய்ந்தது. அன்றிரவே தாவீது அங்கிருந்துத் தப்பியோடினார். ஆனாலும் தாவீதை சவுல் விட்டபாடில்லை. உடனே சவுல் தாவீதை அவர் வீட்டில் கண்காணித்து மறுநாள் காலையில் கொன்றுவிடுமாறு காவலர்களை அனுப்பினார். ஆனால், தாவீதின் மனைவி மீக்கால் அவரிடம் உண்மை நிலையை எடுத்துச் சொல்லி அவரைக் காப்பாற்றினார் (காண்க 1 சாமு 19:11–18) என்பதையும் நம்மால் காணமுடிகிறது.

ஒட்டுமொத்த இந்தத் திருப்பாடலையும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதற்பகுதியில் தனது எதிரிகள்  மிகவும் கெட்ட மனிதர்கள், மனிதத்தன்மை அற்றவர்கள், தீங்கிழைக்கக் கூடியவர்கள், இறைநம்பிக்கையற்றவர்கள் (வ. 1-7) என்று கடவுளிடம் எடுத்துக்காட்டி அவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாக்குமாறு இறைவேண்டல் செய்கிறார். இரண்டாம் பகுதியில், அவர் தனது எதிரிகளின் அழிவைக் குறித்து முன்னறிவிக்கின்றார். இறுதியில் தனது பேரன்பும், கேடயமும், கவசமுமாய் விளங்கும் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து, இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் (வச. 8-17). இப்போது இத்திருப்பாடலில் 1 முதல் 5 வரையுள்ள இறைவசனங்களைக் குறித்துத் தியானிப்போம். முதலில் இறை ஒளியில் அவ்வார்த்தைகளை வாசிப்போம். “என் கடவுளே! என் எதிரிகளினின்று என்னை  விடுவித்தருளும்; என்னை எதிர்த்து எழுவோரிடமிருந்து எனக்குப் பாதுகாப்பளித்தருளும். தீமை  செய்வோரிடமிருந்து எனக்கு விடுதலை அளித்தருளும்; கொலைவெறியரிடமிருந்து என்னைக் காத்தருளும். ஏனெனில், அவர்கள் என்னைக் கொல்வதற்காகப் பதுங்கியுள்ளனர்; கொடியவர் என்னைத் தாக்கத் திட்டமிட்டுள்ளனர்; நானோ, ஆண்டவரே! குற்றம் ஏதும் இழைக்கவில்லை; பாவம் ஏதும் செய்யவில்லை; என்னிடம் குற்றமில்லாதிருந்தும், அவர்கள் ஓடிவந்து என்னைத் தாக்க முனைகின்றனர்; என்னை எதிர்கொள்ளுமாறு எழுந்தருளும்; என்னைக் கண்ணோக்கும், படைகளின் கடவுளாகிய ஆண்டவரே! நீர் இஸ்ரயேலின் கடவுள்! பிற இனத்தார் அனைவரையும் தண்டிக்க எழுந்துவாரும்; தீங்கிழைக்கும் அந்தத் துரோகிகளுள் எவருக்கும் இரக்கம் காட்டாதேயும்” (வச 1-5)

இந்த ஐந்து இறைவசனங்களிலும் எதிரிகள், தீமை செய்வோர், கொலைவெறியர், கொடியவர் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் தாவீது. அப்படியென்றால், மன்னர் சவுலை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல தாவீது இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை, மாறாக, அவருடன் உடன்பயணித்த படைவீரரக்ள், அவருக்குத் தவறான ஆலோசனை வழங்கியவர்கள், தன்னை மறுதலித்தவர்கள், காட்டிக்கொடுத்தவர்கள் எல்லாரையும் குறிப்பிட்டுச் சொல்லத்தான் இம்மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார் என்பது தெரிகிறது. அதுமட்டுமன்றி, அவர்களைத் துரோகிகள் எனக் குறிப்பிட்டு, “அவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டாம் கடவுளே!” என்றும் முறையீடு செய்கின்றார். இங்கே ‘பிறஇனத்தார்’ என்ற ஒரு சொல்லைக் குறிப்பிடுகின்றார் தாவீது. பெலிஸ்தியர் போன்ற இஸ்ரேல் இனத்தை சாராதவர்களைக் குறிப்பிட அவர் இந்த வார்தையைப் பயன்படுத்தியிருக்கலாம். தாவீது, மன்னர் சவுலின்மீது உண்மையான அன்புகொண்டிருந்தார். அவரை ஒருபோதும் எதிர்த்தெழவில்லை. இரண்டுமுறை அவரைக் கொல்லும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தும்கூட அவர் அதை செய்யவில்லை என்பதை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகக் கூறலாம். குறிப்பாக, முதல்முறை சவுலைக் கொல்லாதுவிட்ட தாவீது அவருடன் மேற்கொள்ளும் உரையாடல் நம் நெஞ்சங்களை அப்படியே வருடுகின்றன. ஒவ்வொரு கிறிஸ்தவரும் கண்டிப்பாக இந்தப் பகுதியை அடிக்கடி வாசித்து, மனதில் நிறுத்தி தியானித்து அதனை வாழ்வாக்க முயன்றோம் எனில், உண்மையிலேயே நமது வாழ்வு இனிமையானதாக இருக்கும். இப்போது அப்பகுதியை வாசிப்போம்.

அதன்பின், தாவீது எழுந்து குகையிலிருந்து வெளியேறிச் சவுலைப் பின் தொடர்ந்து, “அரசே, என் தலைவரே!” என்று அழைத்தார். சவுல் பின்புறம் திரும்பிய போது தாவீது தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கினார். பின்பு, தாவீது சவுலை நோக்கி, “‘தாவீது உமக்குத் தீங்கு செய்யத் தேடுகிறான்’ என்று சொல்லும் மனிதனின் வார்த்தைகளை நீர் கேட்கலாமா? இதோ! குகையில் ஆண்டவர் என்னிடம் ஒப்புவித்தார் என்பதை இன்று உம் கண்களே கண்டன; உம்மைக் கொல்ல வேண்டுமெனச் சிலர் என்னை வற்புறுத்தினார்கள்; ஆனால், ‘அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பெற்றவர்; என் தலைவருக்கு எதிராக நான் கை ஓங்கக் கூடாது’ என்று சொல்லி நான்தான் உம்மைக் காப்பாற்றினேன். என் தந்தையே, பாரும்! என் கையிலிருக்கும் உம் மேலங்கியின் தொங்கலைப் பாரும். உம்மைக் கொல்லாமல் உம் மேலங்கியின் தொங்கலை மட்டும் அறுத்து எடுத்துள்ள என் செயலைப் பார்த்தாலே என்னிடம் யாதொரு குற்றமோ துரோகமோ இல்லையென்பதை நீர் அறிவீர்! நீர் என் உயிரைப் பறிக்கத் தேடினாலும், உமக்கெதிராக நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. உமக்கும் எனக்கும் ஆண்டவர் நடுவராய் இருப்பாராக! என்பொருட்டு ஆண்டவரே உமக்கு நீதி வழங்கட்டும்; ஆனால், உமக்கு எதிராக என் கை எழாது. முன்னோரின் வாய்மொழிக்கேற்ப, ‘தீயோரிடமிருந்தே தீமை பிறக்கும்’. ஆதலால்’ உம் மேல் நான் கைவைக்க மாட்டேன். இஸ்ரயேலின் அரசர் யாரைத் தேடிப் புறப்பட்டார்? யாரைப் பின் தொடர்கிறீர்? ஒரு செத்த நாயை அன்றோ? ஒரு தெள்ளுப் பூச்சியை அன்றோ? ஆண்டவர் நடுவராயிருந்து உமக்கும் எனக்கும் நீதி வழங்குவாராக! அவரே எனக்காக வழக்காடி உம் கையினின்று என்னை விடுவிப்பாராக!” (காண்க 1சாமு 24:9-15) என்றார். ஆக, தாவீதின் இந்த வார்த்தைகளைக் கேட்கும் நமக்கே உள்ளம் உருகுகிறது என்றால், சவுலின் உள்ளத்தை அவை எப்படித் உருக்கியிருக்க வேண்டும் என்பதை இக்கணம் எண்ணிப் பார்ப்போம்.  

அதனால்தான் தாவீதின் இந்த வார்த்தைகளைக் கேட்கும் மன்னர் சவுல் அப்படியே இடிந்துபோகிறார். இப்படிப்பட்ட நல்லவனுக்கா நான் தீங்குசெய்ய எழுந்தேன் என்று உள்ளம் குத்துண்டவராக, தாவீதுக்கு எப்படிப் பதில்மொழி தருகிறார் பாருங்கள். தாவீது இவ்வாறு சவுலிடம் பேசி முடித்தபின் சவுல், “என் மகன் தாவீதே! இது உன் குரல்தானா!” என்று சொல்லி உரத்த குரலில் அழுதார். அவர் தாவீதிடம், “நீ என்னிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; ஆனால், நானோ உனக்குத் தீங்கு செய்தேன். ஆண்டவர் என்னை உன்னிடம் ஒப்புவித்திருந்தும் நீ என்னைக் கொல்லவில்லை. இதனால் நீ எனக்கு நன்மையே செய்து வந்திருப்பதை இன்று நீ வெளிப்படுத்தியிருக்கிறாய். ஏனெனில், ஒருவன் தன் எதிரியைக் கண்டபின் அவன் நலமுடன் செல்ல அனுமதிப்பானா? இன்று நீ எனக்கு செய்த நன்மைக்கு ஈடாக ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக! இதோ, நீ திண்ணமாய் அரசனாவாய் என்றும் இஸ்ரயேலின் அரசை நீ உறுதிப்படுத்துவாய் என்றும் இப்பொழுது நான் அறிகிறேன். ஆதலால், எனக்குப் பின்வரும் என் வழிமரபை நீ வேரறுப்பதில்லை என்றும் என் தந்தை வீட்டாரிலிருந்து என் பெயரை அழிக்கமாட்டாய் என்றும் ஆண்டவர் மேல் எனக்கு ஆணையிட்டுக் கூறு” என்றார். (காண்க 1 சாமு 24:8-21).  

இறுதியாக, “நானோ, ஆண்டவரே! குற்றம் ஏதும் இழைக்கவில்லை; பாவம் ஏதும் செய்யவில்லை; என்னிடம் குற்றமில்லாதிருந்தும், அவர்கள் ஓடிவந்து என்னைத் தாக்க முனைகின்றனர்; என்னை எதிர்கொள்ளுமாறு எழுந்தருளும்; என்னைக் கண்ணோக்கும், படைகளின் கடவுளாகிய ஆண்டவரே!” நீர் இஸ்ரயேலின் கடவுள்! என்று கூறுகிறார். தாவீதின் இந்த வார்த்தைகள் மன்னர் சவுலுக்கு எதிராக எழாத அவருடைய நல்ல மனதையே காட்டுகிறது. ஆகவே, நமது அன்றாட வாழ்வில், யார் நமக்கு என்ன தீங்கு செய்தாலும் அவர்களை வெறுக்காது அன்புசெய்யும் தூய உள்ளத்தை நமக்கு வழங்கிடுமாறு இந்நாளில் இறைவனிடம் வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2024, 08:28