பொதுக் காலம் 24-ஆம் ஞாயிறு : தன்னை அறிந்தவரே தரணியாள்வர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. எசா 50: 5-9a II. யாக் 2:14-18 III. மாற் 8:27-35)
இன்று பொதுக் காலத்தின் 24-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் தன்னை அறிதல் மிகவும் அவசியமானது என்பதை வலியுறுத்துகின்றன. அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை தன்னை அறிந்தவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் மற்றவர்கள் அனைவரும் வீழ்ந்திருக்கிறார்கள் என்பதை வரலாறு நமக்கு எடுத்தியம்புகிறது. குறிப்பாக, மக்கள்மீது அக்கறைகொண்ட மன்னர்கள் இரவுநேரங்களில் மாறுவேடமிட்டு நகர்வலம் சென்று மக்கள் தன்னைக் குறித்தும் தனது ஆட்சி குறித்தும் என்ன நினைக்கிறார்கள், மக்களின் வாழ்வு மகிழ்ச்சிக்குரியதாக இருக்கின்றதா அல்லது வேதனை நிறைந்ததாக இருக்கின்றதா என்பதையெல்லாம் அறிந்துவந்து அதற்கேற்றவாறு தங்களின் ஆட்சிமுறையை மாற்றி அமைத்துக்கொண்டதை கதைகளில் படித்திருக்கிறோம். தன்னை அறிந்த மனிதரால்தான் தரணியாள முடியும். தன்னை அறிந்தவர்கள் மட்டுமே தனக்காக வாழாமல் பிறருக்காகவும் இந்தச் சமுதாயத்தின் மாற்றத்திற்காகவும் வாழ முடியும். காரணம், தன்னை அறிந்தவர்கள் துன்புறும் மனிதரின் துயர் அறிகிறார்கள். ஒருவர் தான் எதற்காக, எந்த வேலையைச் செய்வதற்காக இந்த உலகிற்கு வந்தோம் என்று தெளிவாக அறிந்துகொள்வதிலும், அதை முழுமையாக நிறைவேற்றி முடிப்பதிலும்தான் வாழ்வின் வெற்றி அடங்கியிருக்கிறது. உலகில் தன்னை அறிந்து இந்தத் தரணியையும் மக்களின் உள்ளங்களையும் ஆண்ட தலைவர்களில் ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர், காந்தியடிகள், ஜவர்ஹலால் நேரு, பெரியார், காமராஜர் கக்கன் ஆகியோர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். இன்று நம்மை ஆளும் தலைவர்கள் ஒவ்வொருவரும், தங்களைக் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேள்வி ஒன்றை எழுப்பினால் மக்களின் பதில் என்னவாக இருக்க முடியும் என்பதை அவர்கள்தாம் தீர்மானிக்க வேண்டும். ஒருவேளை நம் பாரத பிரதமர் மோடி தனது அமைச்சர்களைப் பார்த்து என்னைப் பற்றியும் எனது ஆட்சிபற்றியும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தனது மனசாட்சியைத் தொட்டு கேள்வி ஒன்றை எழுப்பினால் அவர்களின் பதில் என்னவாக இருக்க முடியும் என்பதை அவர்களைக் காட்டிலும் நாமே தீர்மானித்துவிடலாம். காரணம், அதன் பயனை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்திருக்கிறோம் அல்லவா? ஆக, ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் அனைவரும் நேரிய மனதுடன் தங்களை சுய விமர்சனத்திற்கு உட்படுத்திக்கொள்ளும்போது அது உண்மையான தலைமைத்துவத்தை மேன்மைப்படுத்துவதாக அமையும்.
இந்தச் சிந்தனைகளை உள்வாங்கியவர்களாக இப்போது நற்செய்திக்குள் செல்வோம். இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கையை மிகச் சுருக்கமாகக் கொடுத்துள்ளார் நற்செய்தியாளர் மாற்கு. மேலும் இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கையை ஒத்தமை நற்செய்தியாளர்கள் மூவருமே கொடுத்துள்ளனர் (காண்க. மத் 16:13-20; லூக் 9:18-21). மாற்கு தனது முழு நற்செய்தியையும் இயேசுவின் கலிலேயப் பணி, இயேசுவின் எருசலேம் பணி என இரண்டு பிரிவுகளாகக் கொடுத்துள்ளார். இயேசு தனது கலிலேயப் பணியை முடித்துக்கொண்டு எருசலேம் பணிக்கு செல்வதற்கு முன்பாக இந்தவொரு நிகழ்வு இடம்பெறுகிறது. தனது கலிலேயப் பணியின்போது அவர் நிகழ்த்திய அருளடையாளங்கள், மக்களிடம் பெற்ற நன்மதிப்புகள், சந்தித்த எதிர்ப்புகள், சீடர்களை இருவர் இருவராகப் பணிக்கு அனுப்பியபோது வழங்கிய படிப்பினைகள், அவர்கள் பெற்ற குழும மற்றும் தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் இரண்டு கேள்விகளைத் தனது சீடர்களிடம் எழுப்புகின்றார் இயேசு. முதலில், “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று அவர் எழுப்பிய கேள்விக்கு, “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்” என்று பதில்மொழி தருகின்றனர். அஞ்சாநெஞ்சமுடன் போதித்து, ஏரோதின் தவற்றைச் சுட்டிக்கட்டி தன் தலையையே கொடுத்து உண்மைக்குச் சான்றுபகர்ந்த திருமுழுக்கு யோவான்தான் மீண்டும் இயேசுவின் உருவில் வந்துள்ளார் என்று மக்கள் நம்பினர். அடுத்து பழைய ஏற்பாட்டில் வெகுதிறமையாகப் படிப்பினைகளை வழங்கி பல்வேறு வல்ல செயல்களை ஆற்றிய எலியா இயேசுவின் வடிவில் வந்துள்ளதாக சிலர் எண்ணினார். மேலும், இறைவாக்கினர்களான எசாயா, எரேமியா போன்றோர் மக்களிடையே அதிகமாகப் பேசப்பட்டனர். ஆகவே இவர்களில் ஒருவராக இயேசு இருக்கலாம் என்றும் சிலர் கருதினர். இதன் அடிப்படையில்தான் சீடர்கள் இயேசுவுக்கு இத்தகையதொரு பதிலை வழங்குகின்றனர்.
ஆனால் இயேசு, இந்த முதல் கேள்வியில் காட்டிய ஆர்வத்தைவிட இரண்டாவது கேள்வியில் அதிக ஆர்வம் காட்டுவதைப் பார்க்க முடிகின்றது. அதாவது, “நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா” என்று உரைக்கின்றார். இயேசுவின் இந்தக் கேள்விக்குச் சற்றும் யோசிக்காமல் பதில்மொழி தருகின்றார் பேதுரு. அதேவேளையில், அவர் மெத்த படித்த அறிவாளியும் அல்ல. ஆனால் இயேசுவுடன் தான் பெற்ற அனுபவத்தைக் கொண்டு இந்தப் பதிலைத் தருகின்றார் பேதுரு. மேலும் தான் எதிர்பார்த்த பதில் கிடைத்துவிட்டதால் திருப்தியடையும் இயேசு, தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாகக் கூறுகிறார். தான் வீரதீர செயல்களையும் அற்புதங்களையும் ஆற்றவந்த சக்திமானாகவோ அல்லது சூப்பர் ஹீரோவாகவோ மக்களும் தனது சீடர்களும் எண்ணிவிடக் கூடாது என்பதாலேயே இந்தக் கண்டிப்பான கட்டளையை இடுகின்றார் இயேசு.
சரி, இயேசுவைக் குறித்த உண்மையான மெசியா என்ற கருத்து வெளிப்பட்டுவிட்டது. அப்படியென்றால், அந்த உண்மையான மெசியாவின் முடிவு எப்படி இருக்கும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக, “மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்” என்று அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்குகிறார். அதாவது, துன்புறும் மெசியா குறித்த கருத்தை இங்கே உட்புகுத்துகின்றார் இயேசு. அதுவும் தனது இலட்சிய சாவைக் குறித்து மூன்று முறை கற்பிப்பதாக ஒத்தமை நற்செய்தியாளர்கள் மூவருமே எடுத்துக்காட்டுகின்றனர். இதைத்தான், 'ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்' என்று துன்புறும் மெசியா குறித்த இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்கைப் பார்க்கின்றோம்.
மேலும் 'மனிடமகன்' என்று இயேசு தன்னையே அழைத்துக்கொள்வதையும் இங்கே நம்மால் காணமுடிகிறது. 'மனிடமகன்' என்ற சிறப்புப் பெயரின் பொருள் என்ன? இதுகுறித்து தானியேல் நூலில் காணமுடிகின்றது அதாவது, மனித உருகொண்ட ஒருவர் அனைத்துலகின் மீதும் ஆட்சிபுரிய இறைவனிடமிருந்து அதிகாரம் பெறுகிறார் (காண்க. தானி 7:13), தனது இறைமாட்சிமைக்கு எதிரான தீய சக்திகளை ஒழிப்பதில் அவர் ஈடுபடுவார் (வச.11), அதன் விளைவாக அதிகாரமும் மேன்மையும் அவருக்கு வழங்கப்படும் (வச.14). ஆக, இந்த மானிடமகன் மக்கள் சார்பாக மக்களின் விடுதலைக்காகப் போராடுவார் என்று கருத்து இந்த வார்த்தைகளில் வெளிப்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில்தான், இயேசு தன்னை 'மனிடமகன்' என்று தன்னை அழைத்துக்கொள்கிறார் என்பது ஒப்பிட்டு நோக்கத்தக்கது. மக்களோடு தம்மையே முழுமையாக இணைத்துக்கொண்டு, அவர்களின் நலன்களுக்காகத் தம்மையே அர்ப்பணித்த இயேசு 'மானிட மகன்' என்ற தகுதிக்கு உரியவர் என்பதை இந்த வார்த்தையின் வழியாக எடுத்துக்காட்டுகிறார் மாற்கு. இயேசு தன்னைப்பற்றி தாம் விரும்பி அறிமுகம் செய்துகொள்ளும் ஒரே பெயர் மானிட மகன் என்பதுதான் (காண்க. மாற் 20:10; 8:31; 9:9; 9:12; 9:31; 10:33,45; 13:26; 14:62). இயேசு மக்களோடு இணைந்துள்ள நிலை, அவர்தம் விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்துள்ள நிலை, இதன் விளைவாகத் துன்பங்களை ஏற்கும் நிலை, இறுதியாக, வெற்றிவீராக உயிர்த்தெழும் நிலை என நான்கு நிலைகளை இந்த 'மனிடமகன்' என்ற சொல் தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் காரணமாகத்தான், “மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்” என்று சீடர்களிடம் எடுத்துக்காட்டுகின்றார் இயேசு.
ஆனால் இயேசுவின் இந்தச் சொற்களை பேதுருவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான், அவர் இயேசுவைத் தனியே அழைத்துச்சென்று அவரைக் கடிந்துகொள்வதைப் பார்க்கின்றோம். காரணம், பேதுரு இயேசுவை அதிசயங்களையும் அற்புதங்களையும் ஆற்றும் சூப்பர் ஹீரோவாகப் பார்த்திருக்கலாம். மேலும் தாவீதைப்போல அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்யவிருக்கும் மிகப்பெரும் அரச மெசியாவாக அவரை எண்ணியிருக்கலாம். அதனால்தான் இத்தகையதொரு எதிர்ப்பைத் தெரிவிக்கின்றார் பேதுரு. அதேவேளையில், உண்மை மெசியாவுக்கு (துன்புறும் மெசியா) எதிரான கருத்தாக இது ஒலிப்பதால் பேதுருவை நோக்கி, “என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில், நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்று கடிந்துகொள்கின்றார் இயேசு. இங்கே 'சாத்தானே' என்று அவர் கூறுவதற்குக் காரணம் என்ன? பொதுவாக, சாத்தானின் கொள்கைகள் இறையாட்சிக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது. அதாவது, இலட்சியம், போராட்டம், பாடுகள், தியாக மரணம், விடுதலை (உயிர்ப்பு) ஆகிய இயேசு வாழ்ந்து காட்டிய விழுமியங்களுக்கு முரணானது. இதனை இயேசுவின் பாலைநில சோதனையில் பார்க்கின்றோம். இதன் காரணமாகவே 'சாத்தான்' என்ற வார்த்தையை இவ்விடத்தில் பயன்படுத்துகின்றார் இயேசு. அடுத்து அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்” என்று உரைக்கின்றார். ஆக, இறையாட்சியின் விழுமியங்களுக்காக இலட்சிய சிலுவையைத் தூக்கிக்கொண்டு, அவரைப் பின்பற்றி தங்களின் இன்னுயிரைக் கையளிக்க முன்வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார். இந்த அழைப்பை சீடர்களுக்கு மட்டுமல்லாது மக்களுக்கும் வழங்குகிறார். இங்கே பணிக் குருத்துவமும் பொதுக் குருத்துவமும் இறையாட்சிப் பணியில் ஒன்றிணைத்து உழைக்க வேண்டும் என்பதை இயேசு பகிரங்கமாகக் குறிப்பிடுகிறார் என்பதையும் நாம் புரிந்துகொள்வோம்.
ஆக, இயேசுவின்மீது நம்பிக்கைகொண்டு அவரது இறையாட்சிக்காக உழைப்பவர்கள், தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை செயல்வடிவில் காட்ட வேண்டும் என்று திருத்தூதர் யாக்கோபும் வலியுறுத்துகின்றார். இதனை, “ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, “நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்;” என்பாரென்றால் அதனால் பயன் என்ன? அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்" என்று எடுத்துக்காட்டுகின்றார்.
இன்றைய நம் உலகில் ஏழை எளியோருக்காக உழைப்பதாகவும், அவர்கள்மீது எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் எல்லோரும் பார்க்கும் வண்ணம் தம்பட்டமடித்துக்கொண்டு, அவர்களின் பொருள்களையும் இருக்கின்ற கொஞ்சநஞ்ச பணத்தையும், நிலபுலன்களையும் கொள்ளையடிப்பதைப் பார்க்கின்றோம். ஆனால் அதேவேளையில், ஏழைகளுக்கு உதவும் எத்தனையோ நல்லுள்ளம் கொண்டவர்கள் தாங்கள் சொல்வதைச் செயலில் காட்டுவதைப் பார்க்கின்றோம். எல்லாமே விளம்பரமயமாகிப்போன இன்றைய உலகில் 90 விழுக்காட்டு செயல்கள் போலியாகிவிட்டன என்பதே நிதர்சனமான உண்மை. இந்த நிலை மாறவேண்டுமெனில் நமது நம்பிக்கைகளும் எண்ணங்களும், வாக்குறுதிகளும் செயல்வடிவம் பெற வேண்டும். நமதாண்டவர் இயேசு சொன்னதைச் செய்தார். செய்யபோவதைச் சொன்னார். தன்னை அறிந்த அவர், தனது செயல்களில் உண்மையான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார். ஆகவே நமது அன்றாட கிறிஸ்தவ வாழ்வில், நமது செயல்கள் வழியாக நமது நம்பிக்கையை வெளிப்படுத்தி நற்செய்திக்காக நம் உயிரை இழக்கும் இயேசுவின் உண்மைச் சீடர்களாக ஒளிர்வோம். இயேசுவைப் போன்று நம்மை நாமே சுய ஆய்வுக்கு உட்படுத்துக்கொண்டு தன்னை அறிந்த தலைவர்களாக இத்தரணியை ஆள்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்