தேடுதல்

இயேசு தனது சீடர்களுக்குப் படிப்பினைகள் வழங்குகின்றார் இயேசு தனது சீடர்களுக்குப் படிப்பினைகள் வழங்குகின்றார்   (https://christian.net/wp-content/uploads/2024/02/when-were-the-apostles-empowered-to-begin-the-mission-of-jesus-1708180246.jpg)

பொதுக் காலம் 25-ஆம் ஞாயிறு : தன்னை இழக்கத் துடிப்பவரே தலைவர்!

ஆட்சி பீடங்களில் அமர்வதற்கு முன்பு அமைந்த மனமுடன் ஆண்டவர் இயேசுவுக்குரிய பணிகளில் ஈடுபடுவோம். நாம் ஆற்றும் நற்பணிகள்தாம் நம்மைத் தலைவர்களாக உயர்த்தும்.
பொதுக் காலம் 25-ஆம் ஞாயிறு : தன்னை இழக்கத் துடிப்பவரே தலைவர்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. சாஞா 2:17-20    II. யாக் 3:16- 4:3    III.  மாற் 9:30-37)

இன்று பொதுக் காலத்தின் 25-ஆம் ஞாயிறைக் கொண்டாடுகின்றோம். இன்றைய வாசகங்கள், யார் பெரியவர் என்று எழும் கேள்விக்குச் சரியான பதிலை வழங்குகின்றன. முதலில் ஒரு கதையுடன் நமது மறையுரைச் சிந்தனைகளைத் தொடங்குவோம். ஆதியூரில் இரண்டு புலவர்கள் வாழ்ந்து வந்தனர். ஒருவர் வேலப்பகவி மற்றவர் சந்திரகவி. இருவரிடமும் எப்போதும் போட்டியும் பொறாமையும் குடிகொண்டிருந்தன. புலவர்களிடம் போட்டி இருக்கலாம். ஆனால் பொறாமை இருக்கலாமா? கூடாதல்லவா? இது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆகவே, அவர்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் சண்டையிட்டுக் கொள்வர். ஒருநாள் வேலப்பர் வெளியில் கிளம்பினார். அதை அறிந்த சந்திரரும் வேலப்பர் எங்கோ செல்கிறார், எதற்காக இருக்கலாம் என்று எண்ணியவாறு அவரைப் பின் தொடர்ந்தார். சந்திரகவி தன்னை பின் தொடர்வதை அறிந்த வேலப்பரும் நடையை விரைவாக்கினார். ஆனாலும் சந்திரகவி விடுவதாய் இல்லை. பொழுதோ சாய்ந்துவிட்டது. அச்சமயம் எதிரே ஒரு சத்திரம் காணப்பட்டது. சத்திரம் என்பது ஒரு தங்குமிடம். இது அக்காலத்தில் வழியிடங்களில் வழிப்போக்கர்கள் தங்கி பசியாறி களைப்பு நீங்கி செல்ல உதவும். இங்கு இலவசமாக உணவும் வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இச்சத்திரங்களை அரசர்களும் செல்வந்தர்களும் கட்டிவைத்துப் பராமரித்து வந்தனர். அத்தகைய ஒரு சத்திரத்தில் தங்குவற்கு வேலப்பர் முடிவெடுத்தார். சத்திரத்தின் உள்ளே நுழைந்தார். அவரைத் தொடர்ந்து சந்திரரும் நுழைந்தார். இவர்கள் இருவரைப் பற்றி ஓரளவுக்கு கேள்விப்பட்டிருந்த அந்தச் சத்திரத்து பராமரிப்பாளர் இருவரையும் வரவேற்று உபசரித்தார். “வாருங்கள் புலவர்களே! வாருங்கள்! உங்கள் வருகையால் இச்சத்திரம் புகழ் அடைந்தது. அமருங்கள்” என்று ஆசனம் கொண்டு வந்து தந்தார். “பலே! புலவர்களே என்று அழைத்தாயே இங்கு நான் ஒருவன் தானே புலவன்! வேறு எவனை அப்படி அழைத்தாய்?” என்று வேலப்பர் கேட்க சத்திரக்காரர் விழித்தார். அப்போது சந்திர கவி, ”உம்மை நீரே புலவன் என்று பெருமை பீற்றி கொள்ளாதீர் அவர் என்னைத் தான் புலவர்களே என்று அழைத்தார். என்னுடன் வந்தமையால் உங்களையும் புலவன் என்று தவறாக எண்ணிக் கொண்டு விட்டார் போலும்” என்று ஏளனமாக சிரித்தபடி ஆசனத்தில் அமர்ந்தார். “அடேய்! உனக்கு அறிவிருக்கிறதா! நீ புலவனா! நான் உன்னை விட வயதில் மூத்தவன். நான் நின்றிருக்க நீ என் முன் அமர்வதா? இது நியாயமா இவனுக்குப் போய் ஆசனம் அளித்தீரே” என்று சத்திரக்காரரிடம் குறைபட்டுக் கொண்டார் வேலப்பர். “வயது முதுமையால் அறியப்படுவது அல்ல, அறிவினால் அறியப்பட வேண்டும். அப்படி பார்த்தால் நான் உன்னைவிட வயதில் பெரியவன்! இதை அறியாமல் உளரும் நீயும் புலவனா?” என்றார் சந்திரகவி. “யாரைப் பார்த்து அப்படிக் கூறுகிறாய்? நான் உன்னைவிட வயதில் மட்டுமல்ல அறிவிலும் அனுபவத்திலும் மூத்தவன். வயதை முதுமையை கொண்டுதான் கணிப்பார்கள் அறிவைக் கொண்டு அல்ல. இதுகூட அறியாத அறிவில்லாதவன் நீ” என்று வேலப்பர்! சரமாரியாகத் தாக்கினார் “வேலப்பரே,  நீரே ஒத்துக் கொண்டு விட்டீர் நான் அறிவில் ஆதவன் என்று நன்றி நன்றி!” என்றார் சந்திரகவி! “அறிவில் ஆதவனா! அப்புறம் எப்படி மதி உன்னிடம் வந்தது மூடனே” என்று வேலப்பர் கேட்டார். “வேலப்பரே வீணாக எதற்கு என்னை ஏசுகிறீர்கள் நான் மதியிருப்பதால்தான் உங்களிடம் பணிவாகப் பேசிக்கொண்டு இருக்கிறேன். பிறரை ஏசுவதுதான் பெரியோருக்கு அழகா? அனுபவத்தில் பெரியவரான தங்களுக்கு அது கைவரப் பெற்றிருக்கிறதோ! இனியும் என்னை திட்டுவதை விட்டு வேலையை பாருங்கள்” என்றார் சந்திரகவி! “என் வேலையை பார்க்க எனக்குத் தெரியும். நீ ஏன் என்னை தொடர்ந்து வந்தாய்? அதை சொல்?” “என் கால் என் வழி நான் வந்தேன் இது ஒன்றும் உங்கள் சொத்து அல்லவே அபகரிக்க” என்றார் சந்திரகவி. இவ்வாறு இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக்கொண்டு தங்களுக்குள் யார் பெரியவன் என்று மோதிக் கொண்டனர். பொறுமையிழந்த சத்திரக்காரர், “ஐயா கவிஞர்களே கொஞ்சம் உங்கள் சண்டையை நிறுத்துகிறிர்களா?” என்று குரல் கொடுத்தார். “என்ன?” என்று இருவரும் அவரை நோக்கினர். “ஐயா புலவர்களே உங்களுக்குள் யார் பெரியவன் என்ற தகறாருக்கே இடமில்லை! பெரியோருக்கு அழகு அடக்கமாயிருத்தல்! தான் தான் பெரியவன் என்று அவர்கள் பறை சாற்றிக் கொள்ளமாட்டார்கள். நீங்கள் பறைசாற்றிக் கொள்கிறீர்கள். அத்துடன் உங்களிடம் அடக்கம் இல்லை அகந்தைதான் உள்ளது ஆகவே நீங்கள் இருவரும் சிறியவர்கள்தான்! உங்கள் சண்டையை நிறுத்திவிட்டு ஓய்வெடுங்கள்” என்றார். சத்திரக்காரர் பேசியதைக் கேட்டு புலவர்கள் இருவரும் வெட்கித் தலைகுனிந்தனர். தங்கள் சண்டையை நிறுத்திவிட்டு அமைதியாயினர். இதனைத்தான், "செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்"  (குறள் - 26) என்ற குறளில் பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும் என்று கூறுகின்றார் வள்ளுவர்.

தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சண்டை அல்லது விவாதம் இன்று நேற்று தொடங்கியது அல்ல, மாறாக, அது பழைய ஏற்பாட்டின் காலத்திலேயே தொடங்கிவிட்டது என்பதை நமது திருவிவிலியத்தில் அறிகின்றோம். முதலில் இது காயின்-ஆபேலுக்கு இடையில் தொடங்கியது. அதன் பின்னர், ஏசா-யாக்கோபு, யோசேப்பு -அவரது புதல்வர்கள் என்று வளர்ந்தது. உச்சகட்டமாக மனிதர்கள் உயந்தவர்களா அல்லது கடவுள் உயர்ந்தவரா என்று எழுந்த விவாதத்தில் பாபேல் கோபுரம் சிதைந்துபோனது. இப்படியாக, நீயா நானா என்று வளர்ந்த போட்டி தனி மனிதர், குடும்பம், சமூகம், அரசியல் பொருளாதாரம் என விரிந்து இன்று பிரமாண்டமாக வளர்ந்துள்ளதைப் பார்க்கின்றோம். குறிப்பாக, யார் பெரியவர் என்ற போட்டி தற்போது துறவு வாழ்வில் அதிகமாகக் கோலோச்சுவதைப் பார்க்கின்றோம். மனித வாழ்வை பெரிதும் ஆக்கிரமித்துள்ள இந்தப் போட்டி மனிதத்தை சிதைத்து அதனைக் கூறுபோட்டிருப்பதையும் காண்கின்றோம். இந்தப் போட்டிதான் உலகின் பல்வேறு நிலைகளிலும் சண்டைச்சரவுகள், மோதல்கள், போர்கள், கலவரங்கள், பயங்கரவாதம், தீவிரவாதம், பொருளாதார நெருக்கடி போன்றவற்றைத் தோற்றுவித்திருக்கிறது. இவைகளே, மக்களை நிர்கதியற்றவர்களாகவும், இடம்பெயர்ந்தோராகவும், புலம்பெயர்ந்தோராகவும் உருமாற்றியிருக்கிறது என்பது எவ்வளவு கவலைக்குரியது! இவர்களைத்தான் பொல்லார் என்றும் ஞானமற்றோர் என்றும் வரையறை செய்கிறது இன்றைய முதல் வாசகம். பொல்லாதவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொள்வதாவது: அவர்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்; முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்; பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார் "நீதிமான்களது கனிவினைக் கண்டுகொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம். இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்; ஏனெனில், தங்கள் வாய்மொழிப் படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்’" என்று கூறும் பொல்லாரின் வார்த்தைகளை நமக்கு எடுத்தியம்புகிறது. ஆக, நீதிமான்கள் அதிகாரம், பணம், புகழ் ஆகியவற்றைக் காட்டிலும், கடவுளைத் தேடக்கூடியவர்களாகவும், அவருக்கு உகந்தவற்றை அதாவது, உண்மை, நீதி, நேர்மை,  பிறரன்பு, சேவை ஆகியவற்றை செய்யக்கூடியவர்களாகவும் இருப்பர் என்றும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இதனைத்தான், "பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ் செயல்களும் நடக்கும். விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும், அது அமைதியை நாடும்; பொறுமை கொள்ளும்; இணங்கிப் போகும் தன்மையுடையது; இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது; நடுநிலை தவறாதது; வெளிவேடமற்றது. அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது. உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; போராசை கொள்கிறீர்கள்; அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள்" என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் எடுத்துக்காட்டுகிறார் புனித யாகப்பர். குறிப்பாக, மனிதர்களுக்கிடையே போட்டிகள் சண்டை சரவுகள் ஏற்படுவதற்குக் காரணம், 'சிற்றின்ப நாட்டங்கள்' என்று வலியுறுத்திக் கூறுகின்றார். இங்கே 'சிற்றின்ப நாட்டங்கள்' என்பது உடல் சார்ந்தது மட்டுமன்று, மாறாக, உள்ளமும் அறிவும் சார்ந்ததாகவும் இருக்கின்றது. ஏனென்றால், சிற்றின்ப நாட்டங்கள் என்பது பணம், பதவி, அதிகாரம், செல்வாக்கு, புகழ், போட்டிகள், சண்டை சச்சரவுகள் ஆகிய எல்லா உலகக் காரியங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது என்பதையும் புரிந்துகொள்வோம்.

இன்றைய நற்செய்தியில் யார் பெரியவர் என்ற கேள்விக்குப் பதில்மொழி தருகின்றார் இயேசு. “மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று கூறி, தம் சாவை இரண்டாம் முறை முன்னறிவிக்கும் அதேவேளை, சீடர்கள் தங்களுள் பெரியவர் யார் என்பதைப் பற்றி ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வருகின்றனர். இதனை மனதில் அறிந்தவராக, “வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?” என்ற கேள்வியை அவர்களிடம் எழுப்புகின்றார் இயேசு. ஏனென்றால் இந்தப் போட்டியில் அவர்களின் மதியீனம் வெளிப்பட்டதை அறிந்துகொள்கின்றார். மேலும் இயேசு தன் சாவை இரண்டாம்முறை அறிவிக்கும் இந்நிலையில், அவர் பெறப்போகும் பாடுகள் அவரின் மெசியாத்தன்மையை எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் இதனைப் புரிந்துகொள்ளாத அவரது சீடர்கள், தங்களுக்குள் யார் பெரியவர் என்ற பிற்போக்குத்தனமான விவாதத்தை மேற்கொள்வதைப் பார்க்கின்றோம். இந்த விவாதத்தில் அவர்களின் சுயநலம், பதவிமோகம், போட்டிமனப்பான்மை ஆகிய இவ்வுலகத்திற்குரிய மூன்று கூறுகள் வெளிப்படுகின்றன. ஆனால் அதேவேளையில், எந்தத் துன்பத்தையும் அனுபவிக்காமல், எத்தகைய வாழ்க்கைச் சவால்களையும் ஏற்கத் துணியாமல், ஆட்சி அதிகாரங்களையும் பதவிகளையும் மட்டுமே நாடும் சீடர்களின் உளப்பாங்கை நன்கு ஆய்ந்தறிந்தவராக அவர்களுக்குப் படிப்பினைகளை வழங்குகின்றார் இயேசு.

“ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்ற வார்த்தைகள் வழியாக, ஒருவன் தலைவனாக விரும்பினால் அவன் முதலில் கடைநிலை ஊழியராக இருந்து தனது பிறரன்பு பணிகள் வழியாக அத்தகையதொரு உயர் நிலையை அடையட்டும் என்று அறிவுறுத்துகின்றார் இயேசு. மேலும் தலைமைத்துவம் என்பது பணியையும் பணிவையும் முதன்மைத்துவமாகக் கொண்டிருக்க வேண்டும்  என்றும் வலியுறுத்துகிறார். அதனால்தான், “மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்ற வார்த்தைகளைக் கூறி, தனது பாடுகளும் மரணமும் பணிவாழ்வின் விளைவுகள் என்பதையும் விளக்குகிறார். அதாவது, அனைத்து மக்களுக்கும் தொண்டாற்றத் தம்மையே கையளிக்கப் போவதன் விளைவுதான் அவருக்கு நிகழவிருக்கும் பாடுகளும் மரணமும் என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்துகின்றார். பணிகள் வழியாகப் பாடுகள், பாடுகள் வழியாகத்தான் இறைமகிமை என்பதை உணர்த்தும் விதமாகவே, “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்று உரைக்கின்றார். அடுத்து, அவர் ஒரு சிறுபிள்ளையை அவர்கள் நடுவில் நிறுத்தி, "இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்” என்கின்றார். இது பிறரன்பு செயல்கள் வழியாக பிற இனத்தவர், சமரியார், வரிதண்டுவோர், பாவிகள், போன்றோர் மீது அவர் காட்டிய பரிவிரக்கத்தை வெளிப்படுத்துகிறது. பொதுவாக, எந்தவொரு குழந்தையும் எல்லோரிடமும் எவ்வித வேறுபாடும் காட்டாமல்தான் பழகத் தொடங்கும். எல்லாரையும் தனது உறவுகளாக ஏற்றுக்கொள்ளும். தன்னிடம் இருப்பதை எல்லோருக்கும் பகிர்ந்துகொடுக்கத் தொடங்கும். இத்தகையதொரு மனப்பான்மை உண்மையான பணியாளர்களாகிய தலைவர்களிடமும் தழைத்தோங்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே இதனைக் கூறுகின்றார் இயேசு. ஆகவே, ஆட்சி பீடங்களில் அமர்வதற்கு முன்பு அமைந்த மனமுடன் ஆண்டவர் இயேசுவுக்குரிய பணிகளில் ஈடுபடுவோம். நாம் ஆற்றும் நற்பணிகள்தாம் நம்மைத் தலைவர்களாக உயர்த்தும் என்பதை உணர்ந்து வாழ்வோம். இவ்வருளுக்காக இயேசுவிடம் இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2024, 13:30