தேடுதல்

தமிழகக் கத்தோலிக்க இளையோர் ஞாயிறில் பங்குகொண்டோர் தமிழகக் கத்தோலிக்க இளையோர் ஞாயிறில் பங்குகொண்டோர் 

சமூக வாழ்வால் சான்று பகரும் இளையோர்

ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ ஓடுவர்; களைப்படையார் என்ற எசாய இறைவாக்கினரின் வார்த்தைகளைக் கருப்பொருளாகக் கொண்டு 21ஆவது தமிழக இளையோர் ஞாயிறானது அண்மையில் கொண்டாடப்பட்டது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இன்றைய இளைஞர்கள் தாங்கள் நம்பும் இளைஞர் இயேசுவுக்கும் அவர் முன்மொழிந்த இறையாட்சிக்கும் தங்கள் சமூக வாழ்வால் சான்று பகர்கின்றார்கள் என்றும், இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையில் களைப்படையாமல் தொடர்ந்து உறுதியோடு ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார் ஆயர் நசரேன் சூசை.

அண்மையில் நடைபெற்ற 21ஆவது இளையோர் ஞாயிறை முன்னிட்டு இளைஞர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றுமடலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் இளைஞர் பணிக் குழுவின் தலைவர் ஆயர் நசரேன் சூசை.

இளைஞர்களை முதிர்ந்த நம்பிக்கையாளர்களாக்கி, சமூக மாற்றத்தின் கூர்மையான கருவிகளாக உருவாக்கத் திருஅவை அழைப்பு விடுவிக்கின்றது என்றும், இளைஞர்கள் நலமான கிறிஸ்தவ நம்பிக்கையில் வேரூன்றி இறையாட்சிப் பணிகளைப் பல வடிவங்களில் பல பகுதிகளுக்கு இளைஞர் இயேசுவைப் போல் களைப்படையாமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் இளையோர்க்கான சுற்றுமடலில் ஆயர் நசரேன் வலியுறுத்தியுள்ளார்.

இளைஞர் ஞாயிறுக் கொண்டாட்டத்தில் வலியுறுத்தப்பட்டவைகள்

நம்பிக்கைத் தெளிவுடன் இறைவனின் அழைப்பைத் தெளிந்து தேர்ந்து, அந்த அழைப்பிற்கு நேர்நிலையில், 'இதோ வருகிறேன்' என்று பதில் கூறி, அதை நிறைவேற்றக் களைப்படையாமல் களம் கண்ட நாசரேத்து இளம்பெண் மரியா நம் அனைவருக்கும் முன்மாதிரியாகட்டும் என்று இளைஞர் ஞாயிறு கொண்டாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், இளைஞர்கள் ஆன்மீகம், தன்வளர்ச்சி இவற்றோடு நின்றுவிடாமல் சமூகப் பணிகளை இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள ஆயர் நசரேன் அவர்கள், இளைஞர்கள் செய்து வரும் எண்ணற்ற நற்பணிகள் குறித்து சுட்டிக்காட்டி பாராட்டியுள்ளார்.

இதுபோன்ற கொண்டாட்டங்கள் இளைஞர்கள் உடனான திருஅவையின் உடனிருப்பையும் திருஅவையின் இயக்கத்தில் இளைஞர்களின் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாக இக்கொண்டாட்டங்களில் பங்கு கொண்ட இளைஞர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தமிழக கத்தோலிக்க இளையோர் ஆற்றும் பணி

தமிழக கத்தோலிக்க இளைஞர்கள் யாருமில்லாத / பராமரிப்பு இல்லாத மூத்தோரைச் சந்தித்தல், அவர்களையும் அவர்கள் இடத்தையும் தூய்மை செய்தல், ஆடை வழங்குதல், உணவு சமைத்து அவர்களோடு உண்டு மகிழ்தல், பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள இளம் கத்தோலிக்க மாணாக்கர் இயக்கம் (YCS), இளம் மாணாக்கர் இயக்கம் (YSM) போன்றவற்றில் செயல்படுதல், போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

சிறப்பாக ஊட்டி மறை மாவட்ட இளைஞர்கள் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவி, தருமபுரி மறை மாவட்ட இளைஞர்கள் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி, மறைமாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளும் நடத்தியுள்ளன.

ஆண், பெண் இளைஞர்களுக்குத் தமிழ்நாடு திருஅவை வழங்கும் முன்னுரிமையை உறுதிப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் இளைஞர் ஞாயிறு கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஆகஸ்ட் முதல் ஞாயிறு மட்டுமல்லாமல் ஆகஸ்ட் மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 18 மறை மாவட்டங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  

ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ ஓடுவர்; களைப்படையார் என்ற எசாய இறைவாக்கினரின் வார்த்தைகளைக் கருப்பொருளாகக் கொண்டு 21ஆவது தமிழக இளையோர் ஞாயிறானது அண்மையில் கொண்டாடப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2024, 11:05