தேடுதல்

பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறும் நிகழ்வு பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறும் நிகழ்வு  

பொதுக் காலம் 30-ஆம் ஞாயிறு : புதுப்பார்வை தரும் புதுவாழ்வு!

நமது பாவ வாழ்விலிருந்தும், நம்மை முடக்கிப்போடும் இயலாமையிலிருந்தும், சவால்களைச் சந்திக்கப் பின் வாங்கும் அச்சத்தின் பிடியிலிருந்தும் விடுபட்டு புதுப்பார்வைப் பெற்று உறுதியான மனப்பான்மையுடன் இயேசுவைப் பின்பற்றுவோம்.
பொதுக் காலம் 30-ஆம் ஞாயிறு : புதுப்பார்வை தரும் புதுவாழ்வு!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I. எரே 31:7-9    II. எபி 5:1-6    III.  மாற் 10:46-52)

அதுவொரு மூன்றுமாடி கொண்ட குடியிருப்பு கட்டிடம். அதன் இரண்டாவது தளத்தில் ஒரு தம்பதியினர் ஒரு மகனுடன் வாழ்ந்து வந்தனர். அவன் பெயர் ஜான். அவன் சின்னப் பையன். அவனுக்கு ஏழு வயதுதான் இருக்கும். அந்தக் குடியிருப்புக் கட்டிடத்திற்கு அருகிலிருக்கும் ஒரு ஆங்கிலவழி பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். ஒருநாள் ஜானை வீட்டில் விட்டுவிட்டு ஏதோவொரு வேலையின் காரணமாக பெற்றோர் இருவரும் வெளியே சென்றனர். சில மணி நேரங்கள் கழித்து இல்லம் திரும்பிய அவர்களுக்குப் பேரதிர்ச்சிக் காதிருந்தது. காரணம், அந்தக் குடியிருப்புக் கட்டிடம் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. சற்று முன்னர்தான் தீப்பற்றியது என்ற விபரத்தை ஒருவர் அவரிடத்தில் கூறினார். தீயணைப்பு வண்டிக்காக அனைவரும் காத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது சிலர் மின்சாரக்கசிவு காரணம் என்றும் வேறுசிலர் காஸ் சிலிண்டர் வெடித்துததான் காரணம் என்றும் சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால் இதுவெல்லாம் அவர்களுக்கு முக்கியமில்லை, ஜான் உள்ளே இருக்கிறான் என்பதுதான் முக்கியம். "ஐய்யோ என் மகன் உள்ளே மாட்டிகிட்டான்... யாரவது போய் காப்பாத்துங்களேன்..." என்று தலையில் அடித்துக்கொண்டு கதறியழுதார் அவனது தாய். கீழ் தளம் முழுவதும் தீ பரவியிருந்ததால் தன் மகனைக் காப்பாற்ற முடியாமல் தந்தையும் கதறித்துடித்தார். எல்லோரும் ஜானை காப்பாற்றுவது எப்படி என்று கையைப்பிசைந்துகொண்டு நின்றவேளையில், மொட்டை மாடியிலிருந்து ஜானின் அலறல் கேட்டது. "அப்பா... நான் எப்படியோ தப்பித்து மொட்டைமாடிக்கு வந்துட்டேன். என்னைய எப்படியாவது காப்பாத்துங்க" என்று இன்னும் சப்தமிட்டு அழத்தொடங்கினான். அவனை உடனடியாக மீட்டாக வேண்டும். காரணம், இன்னும் சற்று நேரத்தில் தீ மளமளவென பரவி மொட்டைமாடிக்கும் வந்துவிடும். எனவே, செய்வதறியாது திகைத்த அவனது தந்தை கட்டிடத்தின் அருகே சென்று, "மகனே ஜான், கீழே குதி... அப்பா, நான் பிடித்துக்கொள்கிறேன்" என்று கத்தினார். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. என்னவென்றால், தீயிலிருந்து வெளிப்பட்ட புகை கட்டிடத்தைச் சுற்றிலும் பரவியிருந்ததால் அவனால் அப்பாவின் குரலைக் கேட்க முடிந்ததே தவிர, அவரைப் பார்க்க முடியவில்லை. “அப்பா.. உங்கள என்னாலப் பார்க்கமுடியல... நீங்க எந்தப் பக்கம் இருக்கீங்க…” என்று அலறியபடி கேட்டான் ஜான். அப்போது அவனுக்கு நேரெதிரே நின்றுகொண்டு, "மகனே, நீ என்னை பார்க்க முடிவில்லை என்றால் என்ன... நான் உன்னைப் பார்க்கிறேன்... எனவே அப்படியே பயப்படாமல் கீழே குதி" என்றார் தந்தை. அவனும் உடனே குதித்தான். தந்தையும் அவனைத் தாங்கிப்பிடித்துக் காப்பாற்றினார். அடுத்தநாள் இதைப்பற்றிய செய்தி எல்லா பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தது. அதில் "என்னால் அப்பாவை பார்க்கமுடியவில்லை... அப்பா என்னைப் பார்த்தார்... அதனால் உயிர் பிழைத்தேன் என்று ஜான் கூறியதே முக்கிய தலைப்புச் செய்தியாக அச்சிடப்பட்டிருந்தது.

பொதுக் காலம் 30-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் நாம் பெறவேண்டிய புதுப் பார்வை குறித்து பேசுகின்றன. இப்போது முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம். ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்: யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்; மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்; முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்; ‘ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்!’ என்று பறைசாற்றுங்கள். இதோ! வடக்கு நாட்டிலிருந்து அவர்களை நான் அழைத்து வருவேன்; மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களுள் பார்வையற்றோரும் காலூனமுற்றோரும் கருவுற்றோரும் பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்; பெரும் கூட்டமாய் அவர்கள் இங்குத் திரும்பி வருவர். அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்; ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில், நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை. இன்றைய முதல் வாசகம் அடிமைத்தனத்தில் உழன்ற மக்களை விடுதலை வாழ்வுக்கு, அதாவது, கடவுள் அவர்களின் மூதாதையருக்குக் கொடுத்த நாட்டிற்கு மீண்டும் கூட்டி வருவதாக கொடுக்கும் வாக்குறுதியின் பின்னணியில் அமைந்துள்ளது. இருளிலிருந்து ஒளிக்கும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை வாழ்வுக்கும், தீமையிலிருந்து நன்மைக்கும், சாவிலிருந்து வாழ்வுக்கும் அம்மக்களை அழைக்கும் நம்பிக்கை செய்தியாக அமைகிறது இது. இங்கே, இருள்நிறைந்த வாழ்விலிருந்து ஒளிநிறைந்த வாழ்வுக்கு என்பது பார்வையற்ற நிலையிலிருந்து புதுப்பார்வை பெறும் நிலைக்கு என்றும் நாம் பொருள் கொள்ளலாம். மேலும் இங்கே, கடவுள் புனிதப்படுத்தும் பணியையும், புதுப்பார்வை அளிக்கும் பணியையும் செய்வதைப் பார்க்கின்றோம். அதுமட்டுமன்றி, பார்வை பெறுதல் என்பது நமது பழைய பாவ வாழ்விலிருந்து கடந்து புதிய வாழ்விற்குள் நுழைவது என்பதால், கிறிஸ்தவர்களாகிய நமக்கு இது மிகவும் முக்கிமானதாகக் கருதப்படுகிறது. இதைத்தான் புனித பவுலடியாரின் மனமாற்றத்திலும் பார்க்கின்றோம். ஆண்டவரால் தடுத்தாட்கொள்ளப்பட்டு பார்வை இழந்து தமஸ்கு நகரில் இருந்த சவுலலிடம் செல்லும் அனனியா என்னும் சீடர், “சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வை அடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார்” என்றார். உடனே அவருடைய கண்களிலிருந்து செதிள்கள் போன்றவை விழவே அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார் (காண்க திப 9:17-18). இங்கே பார்வை பெறுதலும் திருமுழுக்குப் பெறுதலும் புதுவாழ்வு மற்றும் பணிவாழ்வின் அடையாளமாக அமைகின்றன. மேலும் அகிரிப்பா அரசர் முன்னிலையில் தனது நிலையை விளக்கி தான் பெற்ற இறையழைத்தல் குறித்து பேசும் புனித பவுலடியார், "உன் மக்களிடமிருந்தும், பிற இனத்தவரிடமிருந்தும் நான் உன்னை விடுவிப்பேன்; பிற இனத்தவரிடமே உன்னை அனுப்புவேன். நீ அவர்களை இருளிலிருந்து ஒளிக்கும், சாத்தானின் அதிகாரத்திலிருந்து கடவுளிடத்துக்கும் திரும்புமாறு அவர்கள் கண்களைத் திறக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெற்றுக்கொள்வார்கள்; என்னிடம் நம்பிக்கை கொண்டு தங்களைத் தூயோராக்கிக் கொண்டவர்களோடு உரிமைப்பேறு அடைவார்கள்" (காண்க திப 26: 17-18) என்று இயேசு தன்னிடம் கூறியதாகச் சான்று பகர்கின்றார். இதன் அடிப்படையில்தான், இத்தகையதொரு புனிதப்படுத்தும் தலைமைப் பணிக்கு அழைக்கப்பட்டவர்களின் பணியை இன்றைய இரண்டாம் வாசகத்தில் எடுத்துக்காட்டுகின்றார் புனித பவுல். "தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார். அவர் தாமே வலுவின்மைக்கு ஆளாயிருப்பதால், அறியாமையில் இருப்போருக்கும் நெறி தவறி நடப்போருக்கும் பரிவு காட்டக் கூடியவராயிருக்கிறார். அவர் மக்களுடைய பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்துவது போல, தம் வலுவின்மையின் பொருட்டுத் தமக்காகவும் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார். மேலும், யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை. ஆரோனுக்கு வந்தது போன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வர வேண்டும்"  என்ற அவரது வார்த்தைகள் அவரின் கருத்தைத் தெளிவுபடுத்துகின்றன.

இன்றைய நற்செய்தியில், பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறும் நிகழ்வு நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற ஒத்தமை நற்செய்தியாளர்கள் இருவருமே இப்பகுதியைக் கொடுத்துள்ளனர் (காண்க. மத் 20:29-34; லூக் 18:35-43). கலிலேயாவில் இயேசு தனதுப் பணியைத் தொடங்கியபோது, நோயாளர்களுக்கு நலமளிக்கும் செயலை செய்யத் தொடங்குகிறார். கெனசரேத்து பகுதியில், படுக்கையில் கொண்டுவரப்பட்ட நோயாளர்களுக்கெல்லாம் நலமளிக்கின்றார். மேலும் 'அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொதுவிடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்' (6:56) என்று மாற்கு பதிவுசெய்கின்றார். இச்செயல்கள் வழியாக இயேசு தனது மெசியாத்தன்மையை வெளிப்படுத்துகின்றார். அதுமட்டுமன்றி, பார்வையற்றவருக்குப் பார்வை அளிக்கும் செயலை இரண்டுமுறை இயேசு நிறைவேற்றுவதாகக் கூறுகின்றார் மாற்கு. முதலாவதாக, கலிலேயப் பகுதியான பெத்சாய்தாவில் பார்வையற்ற ஒருவருக்கு நலமளிக்கிறார் இயேசு (காண்க. மாற் 8:22-26). இரண்டாவதாக, இப்போது எருசலேம் செல்லும் வழியில் எரிக்கோவில் திமேயுவின் மகன் பர்த்திமேயுவுக்குப் பார்வை அளிக்கிறார். பார்வையற்றோர் பார்வை பெற இயேசு ஆற்றிய வல்ல செயல்கள் இரண்டும், சீடர்களும் இயேசுவின் வல்லமையால் மட்டுமே நம்பிக்கை (விசுவாச) பார்வை பெறமுடியும் என்பதைக் காட்டுகின்றது. அதாவது, தங்களின் சொந்த பலத்தால் இயேசுவை அறிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் இயலாது, மாறாக, அவர்மீது கொள்ளும் ஆழமான நம்பிக்கையால் மட்டுமே அது சாத்தியமாகும் என்பதை இந்நிகழ்வுகள் இரண்டும் எடுத்துக்காட்டுகின்றன. மேலும் இயேசு எருசலேமை அடைவதற்கு இன்னும் 15 மைல்தூரமே இருந்த நிலையில், அவர் அங்குச் சந்திக்கவிருக்கின்ற பல எதிர்ப்புகள், ஏமாற்றங்கள், துன்ப துயரங்கள் அனைத்திலும் அவருடன் உடனிருக்க இந்த நம்பிக்கை பார்வையே அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதையும் இந்த நலமளிக்கும் நிகழ்வு வழியாக தனது சீடர்களுக்கு எடுத்துக்காட்டுகிறார்.  

பர்த்திமேயு பார்வை பெறும் நிகழ்வின் சிறப்பு என்னவென்றால், அவருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம்தான். “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தியது, பேசாதிருக்கும்படி அனைவரும் அவரை அதட்டியது, அவரின் அபயக்குரல் கேட்டு இயேசு அவரைத் தன்னிடம் அழைத்தது,  உடனே தம் மேலுடையை எறிந்து விட்டு அவர் குதித்தெழுந்து இயேசுவிடம் ஓடி வந்தது, “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று இயேசு அவரிடம் அன்பொழுக கேட்டது, அதன்பின்னர் அவர் நலம்பெற்றது ஆகிய அனைத்தும் அவருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. இயேசுவின் மெசியாத்தன்மை, வல்லமை, அன்பு, அக்கறை, கரிசனை, பரிவிரக்கம் யாவும் ஒருசேர வெளிப்படுவதையும் இங்கே நாம் பார்க்க முடிகின்றது. குறிப்பாக, இங்கே முக்கியமானதொரு விடயத்தை நாம் கவனிக்க வேண்டும். அது என்னவென்றால்,  பார்வையற்றிருந்த பர்த்திமேயு பார்வை பெற்றதும் அவர் இயேசுவைப் பின்தொடர விரும்பிய செயல்தான். ஆக, இயேசுவை மனவுறுத்தியுடன் நாம் பின்பற்ற வேண்டுமெனில் நாமும் புதுப்பார்வை பெறவேண்டும். ஆனால் இயேசுவின் சீடர்களிடம் இந்த மனவுறுதி இறுதிவரை வரவில்லை. இது இயேசுவுக்கு எவ்வளவு மனவேதனையைத் தந்திருக்கவேண்டும்? இதே மனநிலையைத்தான் இஸ்ரயேல் மக்களிடமும் பார்க்கின்றோம். கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு எவ்வளவோ கற்பித்தும் கூட, அவர்கள் கற்றுக்கொள்ளாத மக்களாகத்தான் இருந்தார்கள். அதனால்தான், “செவிடரே, கேளுங்கள்; குருடரே, கவனமாய்ப் பாருங்கள். குருடாய் இருப்பவன் எவன்? என் ஊழியன்தான்! செவிடாய் இருப்பவன் எவன்? நான் அனுப்பும் தூதன் தான்! எனக்கு அர்ப்பணிக்கப்பட்டவன் போல் குருடன் யார்? ஆண்டவரின் ஊழியன்போல் பார்வையற்றவன் யார்? பலவற்றை நீ பார்த்தும், கவனம் செலுத்தவில்லை; உன் செவிகள் திறந்திருந்தும் எதுவும் உன் காதில் விழவில்லை” (காண்க எசா 42:18-20) என்று கடவுள் உரைப்பதைப் பார்க்கின்றோம். உயிர்த்த ஆண்டவரும் எம்மாவு சீடர்களை வழியில் சந்தித்தபோது, “அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா!” என்று கடிந்துகொள்ளும் இயேசு, இறுதியாக அப்பத்தை பிடும்போது, அவர்களின் மனக்கண்களைத் திறக்கச் செய்து, தன்னை அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளச் செய்கிறார். மேலும் அந்நேரமே அவர்கள் எருசலேமிற்குப் புறப்பட்டுச் சென்று தாங்கள் பெற்ற புதுப்பார்வைக் குறித்து அவர்களிடத்தில் அறிவித்ததையும் காண்கின்றோம் (காண்க. லூக் 24:25,30-32). அவ்வாறே உயிர்த்த ஆண்டவரைக் காணும் அனைத்துச் சீடர்களும் புதுப்பார்வை பெறுகின்றனர். இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பின்பு அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர் (காண்க. மாற் 16:20).

ஆகவே, நமது பாவ வாழ்விலிருந்தும், நம்மை முடக்கிப்போடும் இயலாமையிலிருந்தும், சவால்களைச் சந்திக்கப் பின் வாங்கும் அச்சத்தின் பிடியிலிருந்தும் விடுபட்டு புதுப்பார்வைப் பெற்று உறுதியான மனப்பான்மையுடன் இயேசுவைப் பின்பற்றுவோம். பெற்ற புதுப்பார்வையை, புதுவாழ்வை பிறருடன் பகிர்ந்துகொள்வோம். இதுவே நமது இறைவாக்குப் பணியாகட்டும். இவ்வருளுக்காக இந்நாளில் இறையேசுவிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2024, 09:30