தேடுதல்

சீடர்களுடன் இயேசு சீடர்களுடன் இயேசு 

விடை தேடும் வினாக்கள் : நன்மை செய்வதே முறை

சட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை மறந்துவிட்டு, சட்டத்தின் உட்பொருளையும் மறந்தால், சட்டமே ஒரு சர்வாதிகாரியாக மாறி மக்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்துவிடும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, இன்றைய நம் விடை தேடும் வினாக்கள் நிகழ்ச்சியில் ஓய்வு நாளில் இயேசு செய்த புதுமை தொடர்பாக எழுந்த கேள்வி குறித்து நோக்குவோம்.

இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்றபோது, அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும் நோக்குடன் அவரிடம், “ஓய்வுநாளில் குணமாக்குவது முறையா?” என்று கேட்டனர். அவர் அவர்களிடம், “உங்களுள் எவரும் தம் ஒரே ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்துவிட்டால் அதைப் பிடித்துத் தூக்கி விடாமல் இருப்பாரா? என்று கேட்கிறார் (மத் 12:11).

இந்த நிகழ்வு மத்தேயு நற்செய்தியில் காணப்படுகிறது என்றால், யோவான் நற்செய்தியிலோ, இயேசு யூதர்களை நோக்கி, “ஓய்வு நாளில் விருத்தசேதனம் செய்தாலும் ஓய்வு நாள் சட்டம் மீறப்படுவதில்லையானால், அதே ஓய்வுநாளில் நான் முழு மனிதனையும் நலமாக்கியதற்காக நீங்கள் சினம் கொள்வதேன்?” (வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள்) (யோவா 7:23) என்று கேள்வி கேட்கிறார்.

மத்தேயு நற்செய்தி பிரிவு 15ல், “நீங்கள் உங்கள் மரபின் பொருட்டுக் கடவுளின் கட்டளையை மீறுவது ஏன்? (மத் 15:3) என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

மேலும் லூக்கா நற்செய்தியில், ஓர் ஓய்வுநாளில் இயேசு வயல்வழியே செல்ல நேர்ந்ததையும், அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றதையும் காண்கிறோம். பரிசேயருள் சிலர், “ஓய்வுநாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?” என்று கேட்க, இயேசுவோ, “தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்த போது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா? அவர் இறை இல்லத்திற்குள் சென்று, குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?” என்று கூறுகிறார். மேலும் அவர்களிடம், “ஓய்வுநாளும் மானிடமகனுக்குக் கட்டுப்பட்டதே” என உரைக்கிறார் (லூக் 6:1-5).

நான்கு நற்செய்தி நூல்களிலும் ஒட்டுமொத்தமாக ஏழு இடங்களில் இயேசு ஓய்வுநாளில் குணப்படுத்திய நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன.

ஓய்வுநாளின்  ஓய்வு என்பதை புரிந்து கொள்வதற்கான திறவுகோல் எபிரேய வார்த்தையான சாபத் என்பதில் இருக்கிறது.

சாபத்தின் தோற்றம் இறைவன் இவ்வுலகை படைத்த காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. தொடக்க நூலில் நாம் பார்க்கிறோம், ‘அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்’(தொ.நூ. 2:2) என்று. இறைவன் சோர்வாக இருந்தார் மற்றும் அவருக்கு ஓய்வு தேவை என்று இங்கு அர்த்தமில்லை. மாறாக,  இறைவன் படைப்பில் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றியபோது, அவர் ஓய்ந்திருந்தார். அவர் தாம் படைத்தவற்றில் திருப்தியடைந்தவராக, தம்முடைய படைப்பின் மகத்துவங்களை நினைத்து மகிழ்ச்சியடைந்து, அவை நல்லது என்று கண்டார்.

இங்கு  ஓய்வின் தேவை வலியுறுத்தப்படுகிறது. இதனால்தான் அவர், இதை இஸ்ரயேலர்களுக்கு அவருடைய பத்து கட்டளைகளுள் ஒன்றாகக் கொடுக்கிறார். ஒவ்வோர் ஏழு நாட்களில் ஒரு நாள், இஸ்ரயேலர்கள் தங்கள் கடின உழைப்பிலிருந்து ஓய்வெடுக்க வேண்டும், அதே நாளில் தங்கள் வேலைக்காரர்களுக்கும் மிருகங்களுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. மக்கள் தங்கள் வேலைகளிலிருந்து ஓய்வெடுக்கவும், ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு புதிதாகத் தொடங்கவும் சாபத் நாள் நிறுவப்பட்டது. இந்த ஓய்வு நாள் புனித நாளாக கருதப்படவேண்டியது. திருப்பெயரை வீணாகச் சொல்லாதே, கொலை செய்யாதே, மோக பாவம் செய்யாதே,  களவு செய்யாதே, பொய் சாட்சி சொல்லாதே, பிறர் தாரத்தை விரும்பாதே, பிறர் உடைமையை விரும்பாதே என்ற எதிர்மறையான கட்டளைகளுக்கு மத்தியில்,  ஓய்வு நாளை புனித நாளாக அனுசரி என்ற உடன்பாட்டு கட்டளையை பின்பற்றுவதின் மூலம் மற்ற கட்டளைகளை நிறைவேற்றத் தேவையான பலனை அடையலாம் என்பதையும் நாம் உணரவேண்டும்.

யூதர்களின் ஓய்வு நாள் அனுசரிப்பை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஓய்வுநாள் அன்று சமைத்தலும் வேலை செய்வதற்கு ஒப்பானது என்பதால், வெள்ளிக்கிழமையே யூதர்கள் சனிக்கிழமைக்கான உணவைத்தயாரித்து வைத்தார்கள். சனிக்கிழமை உணவை இலேசாக சூடுபடுத்திக்கொள்ளலாம்.

உயிர் ஆபத்தில் இருந்தால் மட்டுமே ஓய்வுநாளில் குணமாக்குவது நியாயம் என்பதாக யூத மதத்தலைவர்கள் நம்புகிறார்கள். உதாரணமாக, ஓய்வுநாளில் எலும்பு முறிவை சரி செய்து பொருத்துவதோ அல்லது ஒரு சுளுக்குக்கு கட்டுப்போடுவதோ நியாயமில்லை என்பதாக அவர்கள் கற்பிக்கிறார்கள். சில சமயங்களில் சட்டங்கள் எதற்காக எழுந்தன என்பதை மனிதர் மறந்துவிடுகின்றனர். சட்டங்கள் வகுக்கப்படும்போது அவை மனிதருக்கு நலம் பயக்கும் என்னும் எதிர்பார்ப்போடுதான் உருவாக்கப்படுகின்றன. கால இட சூழ்நிலைகள் மாறும்போது சட்டங்கள் தங்கள் பொருளை இழந்துவிடுவதுண்டு; அல்லது சட்டத்தின் உட்பொருளை மக்கள் மறந்துபோய்விடுகின்ற ஆபத்து உண்டு. இதைத்தான் பலவேளைகளில் இயேசு நமக்குச் சுட்டிக்காட்டுகிறார். இயேசு யூத சமயத்தில் காணப்பட்ட பல சட்டங்களை ஏற்றுக்கொண்டார். எடுத்துக்காட்டாக, திருச்சட்டத்தில் முதன்மையான கட்டளை எது என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது இயேசு இணைச்சட்ட நூலையும் லேவியர் நூலையும் மேற்கோள் காட்டி, ''கடவுளை அன்புசெய்வதும் அடுத்திருப்போரை அன்புசெய்வதும்'' முதன்மையான கட்டளை என்றுரைத்தார் (காண்க: மத்தேயு 22:34-40). எனவே, இயேசு சட்டத்தில் பல வகைகளும் படிகளும் நிலைகளும் இருப்பதைக் காட்டுகிறார். ஆனால் சட்டத்தின் உட்பொருளை மறந்துவிட்டால் சட்டமே ஒரு சர்வாதிகாரியாக மாறி மக்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்துவிடும் என்பதையும் விளக்குகிறார்.

இயேசு தன்னுடைய இறையாட்சிப் பணியை செயல்வழிக் கற்றல் முறையிலேயே செயல்படுத்துவதை அறிகிறோம். ஓய்வுநாளில் குணமாக்குவது தவறில்லை என்பது மட்டுமல்ல, தேவையானது என்னும் இறையாட்சிப் பாடத்தை இந்தச் செயல்வழிக் கற்றல் வழியே இயேசு தம் சீடருக்கும் பிறருக்கும் கற்றுத் தருகிறார்.  எதற்கெடுத்தாலும் சட்டத்தை மேற்கோள் காட்டுகின்ற மனிதர்கள் சட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதைச் சில வேளைகளில் மறந்துவிடுகிறார்கள், அல்லது வேண்டுமென்றே மறைத்துவிடுகிறார்கள். இயேசுவோ, மனிதருக்கு நன்மை செய்வதற்குக் காலம் நேரம் பார்க்கலாகாது எனவும், எந்த தருணத்திலும் நாம் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் எனவும் கற்பிக்கிறார்.

இன்றைய உலகிலும் ஏழை எளியவர்க்கும் தாழ்த்தப்பட்டோர்க்கும் எதிராக இருக்கின்ற சட்ட திட்டங்களைக் கேள்விக்கு உள்ளாக்குகின்ற மனிதரைப் பார்த்து அமைதி காக்கின்ற போக்கு நிலவுவதை நாம் பார்க்கிறோம். அநீதியான அமைப்புகளை மாற்றியமைத்து மனித வாழ்வை மேம்படுத்துகின்ற அமைப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடாமல் அமைதி காக்கின்றோம். நமக்கேன் வம்பு என ஒதுங்கிப் போகிறோம். மனிதனை அடிமைப்படுத்தும் அர்த்தமில்லாத சட்டங்களையும் சம்பிரதாயங்களையும் குறித்து ஒருமுறையேனும் நாம் கேள்வியெழுப்பியிருக்கிறோமா?. மக்களுக்கு குணமளிப்பது ஓய்வுநாளை மீறியதாகாது என்பது இயேசுவின் கொள்கை. ஓய்வுநாள் மனிதருக்கேயன்றி மனிதர் ஓய்வுநாளுக்கல்ல என்பது அவருடைய போதனை.

பரிசேயர்கள் ஓய்வு நாளை, சுமை விதிமுறைகளின் நாளாக மாற்றினர். நம்மை அனைத்து தளைகளிலிருந்தும் மீட்க வந்த இயேசுவோ, மனிதநேயப் பணிகளையும், இறைபணிகளையும் ஓய்வு நாளில் செய்யலாம் என்கிறார். மனிதத்தையும், மனித மாண்புகளையும் பின்னுக்குத் தள்ளி மனிதாபிமானத்தை மரணிக்கச் செய்யும் சட்டங்களைச் சாடுகிறார்.

உடல், உள்ள ஓய்வுக்காக ஏற்படுத்தப்பட்ட ஓய்வு நாள் அதன் உள்நோக்கங்களைத் தொலைத்து ஆதிக்கவாதிகளின் அதிகாரச் செலுத்துதலின் நாளாக உருமாற்றப்பட்டது. எந்த ஒரு சட்டமானாலும் அது சமூகத்தில் வாழும் மனிதருக்கு உதவுவதாக, வழிகாட்டுவதாக, பாதுகாப்பு வழங்குவதாக, உரிமைகளை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும். அதேவேளையில் சட்டத்தின் பெயரால் சமூக நீதி மிதிபடுகையில், மனித மாண்பு மாய்கையில் அச்சட்டம் குப்பைத் தொட்டிக்குள் இட வேண்டியதே.

இஸ்ரயேல் மக்களிடையே எழுந்த ஓய்வு நாள் கடைபிடித்தல் நல்லெண்ணங்களை உள்ளடக்கிய நன்முயற்சிகள். நாளடைவில் இந்நற்பார்வை நலிந்து ஓய்வு நாள் வெறும் சட்ட நாளாக்கப்பட்டது. இதனால் மனிதமும், மனித மாண்புகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

ஓய்வு நாளில் குணமளித்த செயல், ஓய்வு நாள் சட்டத்தை மீறியதாகாது என்பது

பரிசேயர்களுக்கும் தெரியும். அவர்களுக்கு அது தெரியும் என்பதும் இயேசுவுக்கு தெரியும். ஏனெனில் தங்கள் உடல்நிலை சரியில்லாத ஓய்வு நாளின் போது அந்த நாட்களில் இருந்த மருத்துவர்களிடம் எல்லாருமே சென்றிருப்பார்கள். நாட்காட்டியைப் பார்த்து குணமாக்குபவர் அல்ல இயேசு. அவர் எப்போதெல்லாம் பிரச்சனையுள்ளவர்களை கண்டு மனதுருகினாரோ அப்போதெல்லாம் அவர்களை குணமாக்கினார். அதைத்தான் நாமும் செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2024, 15:36