தேடுதல்

ஒளி தரும் விளக்கு ஒளி தரும் விளக்கு 

விடை தேடும் வினாக்கள் – ஒளிதனை மறைத்தல் இயலுமோ?

மரக்காலுக்குள் வைக்காமல், விளக்குத் தண்டின்மீது வைக்கப்படும் விளக்கே வீட்டை ஒளிமயமாக்குவதுபோல், ஒளியாக இருக்கும் நாமும் நம் திறமைகளை உலகறியச் செய்யவேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, நம்மை ஒளியாக எடுத்துரைத்து நம் பணி குறித்து இயேசு முன்வைத்த உவமையில் அவர் எழுப்பிய கேள்வி குறித்து இன்று சிந்திப்போம்.     

இயேசு அவர்களிடம், “விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின் மீது வைப்பதற்காக அல்லவா? வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார் (மாற் 4:21-23).

ஆதி மனித வரலாற்றில் விளக்கு முக்கியமானதொரு கண்டுபிடிப்பாகும். பாலஸ்தீனாவில் எண்ணெய் விளக்கு ஒலிவ எண்ணெயை எரிபொருளாகக் கொண்டிருந்தது. அதன் திரி சணல் நூலினால் ஆனது. களி மண்ணினால் செய்யப்பட்ட சாதாரண விளக்கை அறையில் ஒளியேற்றி, ஏழைப் பெண் ஒருவர் திராக்மா நாணயத்தைக் கண்டுபிடிப்பது பற்றி இயேசு கூறினார். உலகில் அனைத்து மக்களின் வாழ்விலும் இருள் களைந்து ஒளியேற்ற விளக்குச் சுடர் இணையற்றதொரு சாதனமாகியது. எனவே, ஒளியும், ஒளியைத் தரும் விளக்கும் பல நாகரீகங்களிலும் மனித வாழ்வினை ஒளிர்விக்கும் உள்ளொளியைக் குறிக்கும் அடையாளப் பொருட்களாகியமை புதுமைக்குரியதன்று. வாழ்வின் இணையற்ற இச்சாதனமாகிய விளக்கு, பின்னர் இஸ்ரயேலரின் சமயச் சடங்குகளில் முக்கிய இடத்தைப் பிடித்தது. எருசலேம் திருக்கோவிலில் நித்திய விளக்கு ஏற்றுதல் ஒரு முக்கிய புனிதச் சடங்காகக் கருதப்பட்டது. இது கடவுள் அருளும் நித்திய வாழ்வை அடையாளப்படுத்தியது. இன்று பல்வேறு சமயங்களில் ஒளியை அடையாளப் பொருளாக உபயோகிப்பதை நாம் காண்கின்றோம்.

ஒரு தலைமைத் துறவியை சந்திக்க வந்த சீடர் ஒருவர் துறவியுடன் வெகு நேரம் பேசிக்கொண்டேயிருந்ததால், நேரம் கடந்து  நள்ளிரவில் தன் இல்லம் திரும்ப வேண்டியிருந்தது. நடு இரவில் செல்லும் சீடரிடம் ஒரு விளக்கை ஏற்றி கொடுத்தார் துறவி. ஆனால் அவர் வாசல் கதவை தாண்டும் முன்னரே அந்த விளக்கின் ஒளியை அணைத்துவிட்டார். அதற்கு காரணமாக சீடரை நோக்கி, “இரவல் வெளிச்சம் உனக்கு நெடுந்தூரம் துணைக்கு வராது. உன் விளக்கு உனக்குள்ளேயே இருக்கிறது. அது எரியாதவரை, இந்த விளக்கால் எந்தப் பயனும் இல்லை” என்று விளக்கினார். அதாவது, “உன் உள்ளத்திலுள்ள கடவுள் என்னும் ஒளியை நீ உணரும்போது உனக்கு வெளியே வெளிச்சம் தேவைப்படாது. உன் கையில் விளக்குத் தேவை என்றால், உன்னில் உறைந்துள்ள கடவுளை நீ அறியவில்லை என்று பொருள். வாழ்க்கை முழுதும் இதே இருள், இதே பாதை இருக்கத்தான் செய்யும். ஆனால் உன்னிலுள்ள கடவுள் என்னும் ஒளியின் துணைகொண்டு மட்டுமே உன் பயணத்தைத் தொடர முடியும்" என்றார். விளக்குடன் முன்னேறியவர்களை விட, உள்ளத்தில் கடவுள் என்ற ஒளியின் அனுபவத்தைப் பெற்றிருந்து முன்னேறியவர்களே அதிகம். ஒவ்வொருவருக்குள்ளும் இறைவனே என்றுமுள்ள ஒளியாக இருக்கின்றார். இறைவன் உறைந்துள்ள அந்த அகமே நமது விளக்கு. அதுதான் நமக்கு இறுதிவரை ஒளி தந்து வழி காட்டும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அந்த இறைவன் என்ற ஒளியை நாம் நமக்குள்ளே ஒளித்து வைத்தல் இயலாது, பிறருக்கும் அறிவிக்க வேண்டும். பிறரும் பயன்படும்படி நம்மிலிருந்து ஒளிர வேண்டும். இதைத்தான் இயேசு இன்று நமக்குச் சொல்கிறார். வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை, வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை என்று அவர் கூறுவது இதனைத்தான். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும் என்று முடிக்கிறார் இயேசு.

உலகம் இன்று நவீனமயமாக்கப்பட்டு வந்தாலும் கோவில்களில் விளக்கேற்றுவது என்பது அப்படியேத்தான் மாறாமல் இருக்கிறது. இந்து கோவில்களில் மண் அகல் விளக்கு, பஞ்சலோக விளக்கு, இரும்பு விளக்கு, வெள்ளி விளக்கு, குத்துவிளக்கு என்று பலவிதமான விளக்குகள். கிறிஸ்தவர்களுக்கோ மெழுகுதிரி ஏற்றல். மின்சார விளக்குகளின் வெளிச்சம் கண்ணைப் பறித்தாலும் இந்த விளக்கேற்றும் பழக்கத்தை நாம் தொடர்ந்து கொண்டிருப்பதேன் என்று சிந்தித்துள்ளோமா?. இது வெறும் பாரம்பரிய தொடர்ச்சி அல்ல, மாறாக, அர்த்தம் நிறைந்த நடைமுறை. விளக்கு ஏற்றுவதால் மிகப்பெரிய திருவருள் கிடைக்கும் என்பது ஐதீகம். விளக்கு ஏற்றுவதன் மூலம் ஒளி கிடைக்கிறது. நாம் நம்மைச் சுற்றியிருப்பவைகளை அதனதன் நிலையிலேயேக் கண்டுகொள்ள இந்த ஒளிதான் உதவுகிறது. எந்த ஒரு விளக்கின் ஒளியும் இருளை அகற்றுகின்றது, வெளிச்சத்தைத் தருகின்றது. அதை போலவேதான் வீட்டில் பூஜை அறையில் ஏற்றும் விளக்கும் ஒருவர் மனதில் உள்ள அறியாமை எனும் இருட்டை அகற்றி அந்த வீட்டில் உள்ளவர்களது வாழ்க்கையில் ஏற்படும் துயரம் மற்றும் துன்பங்கள் என்னும் இருட்டு பகுதி அகல வழி வகுக்கின்றது.

இருள் என்பது அறியாமையின் அடையாளம். ஒளி என்பது அறிவின் அடையாளம். மேலும், மின்சார விளக்குகள்போல் அல்லாமல், தீபத்தின் சுடர் எப்போதும் மேல் நோக்கியே எரியும். தீ அதனை தலைகீழாகப் பிடித்தாலும் அதன் சுடர் மேலோங்கியிருக்கும். மனிதனும் தனது சிந்தனைகளை மேல்நோக்கி இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் விளக்கேற்றும் வழிமுறையை மகான்கள் போதித்தார்கள். இதுமட்டுமல்ல, வீட்டில் ஏற்றபடும் தீபங்கள் வீட்டில் இருக்கும் தீயசக்திகளையும் மனதில் உள்ள குறைகளையும் நீக்கி நன்மையைத் தருகிறது என்கின்றனர். இறைவனை ஒளியாக வணங்குவது ஆன்மீக மரபு. ஞானத்தின் அடையாளமாகவும், முழுமையின் உருவாகவும் இருப்பது ஒளியே ஆகும்.

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது “ஒளி தோன்றுக!” என்று கூறியதிலிருந்து ஒளி எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றது, என்பதை நாம்  அறிவோம். இருளை அகற்றும் ஒளியாக இறைவன் நம் வாழ்வில் நம்மோடு பயணிக்கிறார் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. நாளும் நற்செயல்கள் செய்பவர்கள் அனைவரின் வாழ்விலும் இறைவன் என்றும் ஒளியாகத் திகழ்கின்றார். இதன் காரணமாகவே தாவீது இறைவனை நோக்கி ‘உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்’ என்று கூறுகின்றார். மேலும், “என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!” (திபா 119:105) என்றும் எடுத்துரைக்கின்றார். இயேசுவும், “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்”  (யோவா 8:12) என்று எடுத்துக்காட்டுவதுடன், நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள் (மத் 5:14-16) என்று கூறி, தாவீதின் வழியில் நம்மையும் ஒளியின் மக்களாக வாழ்வதற்கு அழைப்பு விடுக்கின்றார். திருவிவிலியம் தொடக்கத்தில் ஒளியைத் தந்த கடவுளை அறிமுகப்படுத்தியது போன்று, இயேசுவின் ஒளியை நமக்கு எடுத்துரைக்கும் திருவிவிலியத்தின் இறுதி அதிகாரத்திலும் அவர் நித்திய ஒளியைத் தருபவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார். ‘இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள் மீது ஒளிவீசுவார்’, (திருவெளிப்பாடு 22:5) என வாசிக்கிறோம்.

இன்னுமொன்றை நாம் தெளிவாகப் புரிந்துகொள்வோம். ‘ஒளி’ என்ற சொல்லைக் கேட்டதும், ‘இருள்’ என்ற சொல் தானாகவே நம் எண்ணத்தில் தோன்றும். மெழுகுதிரியோ, அகல் விளக்கோ, மின்சார விளக்கோ, எந்த வடிவத்தில் விளக்கு இருந்தாலும், அது தன்னையே அழித்துக் கொள்ளும்போதுதான் வெளிச்சம் தர முடியும். உலகிற்கு ஒளியாக இருப்பவர்களும் தங்களையே அழித்துக் கொள்ள முன்வர வேண்டும். தங்களையே விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், தங்களைச்சுற்றி இருப்பவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும். மரக்காலுக்குள் வைக்காமல், விளக்குத் தண்டின்மீது வைக்கப்படும் விளக்கே வீட்டை ஒளிமயமாக்கும். அதேபோல், உலகிற்கு ஒளியாக இருக்கும் நாமும் நம் திறமைகளை உலகறியச் செய்யவேண்டும். இப்படிச் செய்வது நம் திறமைகளுக்கு நாம் தரும் விளம்பரம் அல்ல, மாறாக, நமது திறமைகள் மூலம் பிறர் வாழ்வில் ஒளி சேர்ப்பதே நம் எண்ணம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமைப் பொறுப்பேற்ற 2013ஆம் ஆண்டு, La Civiltà Cattolica என்ற இதழுக்கு வழங்கிய நேர்காணலில், "எவ்வகையான திருஅவையை நீங்கள் கனவு காண்கிறீர்கள்?" என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, "போர்க்களத்தில் செயல்படும் ஒரு மருத்துவமனையைப் போல திருஅவையை நான் காண்கிறேன். அதிகமாக அடிபட்டு கிடக்கும் ஒருவரிடம், அவரது இரத்தக் கொழுப்பு (Cholesterol), இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு என்ன என்ற கேள்விகள் கேட்பது வீண். அவரது காயங்களை முதலில் குணமாக்கவேண்டும். பின்னர், ஏனையவை குறித்து நாம் பேசலாம். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதிலிருந்து திருஅவை தன் பணிகளைத் துவக்கவேண்டும்" என்று தெளிவாகக் கூறினார்.

போர்க்களமாக மாறியிருக்கும் இன்றைய உலகில், திருஅவையின் உறுப்பினர்களாகிய நாம் ஒவ்வொருவரும், வெறுப்பென்ற இருளில் மூழ்கியிருப்போருக்கு நல்வழி காட்டும் ஒளியாகவும், காயப்பட்டிருக்கும் உலகை நலம்பெறச் செய்யும் உப்பாகவும் திகழவேண்டும். வாழ்க்கை, நமக்கு பல சவால்களையும் பின்னடைவுகளையும் கொடுக்கிறது, நாம் அனைவரும் சில இருண்ட நாட்களையும் புயல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இருப்பினும் நாம் அதிலேயே மூழ்கிப் போய்விடுவதில்லை, அமுங்கிப் போய்விடுவதில்லை. இறைவன் தன் ஒளியைப் பாய்ச்சி நமக்கு வழிகாட்டுகிறார்.

இயேசுவைப்பற்றி தன் நற்செய்தியின் துவக்கத்திலேயே அறிமுகப்படுத்தும் புனித யோவான், “அவரிடம் வாழ்வு இருந்தது. அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது (யோவான் 1:4) என்கிறார். மேலும், “அவர் அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி”(யோவான் 1:9) என உரைக்கிறார். மரக்காலுக்குள் வைக்காமல், விளக்குத் தண்டின்மீது வைக்கப்படும் விளக்கே, வீட்டை ஒளிமயமாக்கும். அதேபோல், உலகிற்கு ஒளியாக இருக்கும் நாமும், நம்மைச் சுற்றியுள்ள இருள் எவ்வளவுதான் கருமையாக இருந்தாலும், அதை நீக்க முன்வரவேண்டும். இருளில் வாழும் பிறர் வாழ்வில் ஒளி சேர்ப்பதே நம் எண்ணம். ஒளியாக வாழ்வதென்பது, தனக்குள் தானே நிறைவுகண்டு, தன்னிலையிலேயே தங்கிவிடும் வாழ்வு அல்ல. மரக்காலுக்குள் வைக்கப்படாமல், விளக்குத் தண்டின் மீது வைக்கப்படும் விளக்கே, "வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளிதரும்" என்றும் இயேசு கூறியுள்ளார்.

அந்த ஒளி நமக்குள் இருப்பதை உணர்ந்து விளக்கை தூண்டுவோம். முதலில் இறை ஒளி நம்மில் ஒளிரட்டும். அதன்வழி, துயருறும் மனிதர் வாழ்வில் நாமும் வழிகாட்டும் ஒளிச்சுடர்களாய் ஒளிர்ந்திடுவோம். ஒளியாகிய கடவுளிடமிருந்து நாம் ஒளி பெறுவதால், அவ்வொளியை பிறருக்கு ஆற்றும் நற்செயல்கள் வழியாக ஒளிரச் செய்வோம்.

நீங்கள் உப்பாக, ஒளியாக இருக்க வேண்டும் என்றோ, உப்பாக, ஒளியாக மாறுங்கள் என்றோ இயேசு கூறவில்லை. "நீங்கள் உப்பாக, ஒளியாக இருக்கிறீர்கள்" என்று நமக்கு நமது பணியை நினைவுபடுத்துகிறார். புரிந்துகொண்டு முன்னோக்கி நடைபோடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 October 2024, 15:56