தேடுதல்

இரக்கச் செயல்கள் வழி நோன்பு இரக்கச் செயல்கள் வழி நோன்பு  (ANSA)

விடை தேடும் வினாக்கள் – மணமகன் உடனிருக்கும்போது துக்கம் ஏன்?

கடவுளின் உடனிருப்பை நாம் உணர்ந்து வாழும் போது துக்கம் கொண்டாடத் தேவையில்லை. ஏனெனில் அவருடைய உடனிருப்பு நம்மை வழிநடத்தும். துன்பத்தையும் சவால்களையும் தாங்கும் சக்தியைத் தரும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? (மத் 9:15) என்பது இயேசு கேட்கும் கேள்வி.

அன்பு நெஞ்சங்களே, மத்தேயுவை தன்னைப் பின்பற்ற அழைத்து அவர் வீட்டில் வரி தண்டுபவர்களுடனும், பாவிகளோடும் உணவருந்துகிறார் இயேசு. பரிசேயர்களோ,  இயேசுவின் சீடர்களிடம், “உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?” என்று கேட்கின்றனர். அதற்கு நெத்தியடியாக இயேசு,” ““நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை” என்ற பதிலை வழங்கி அவர்களை புரிய வைக்கிறார். இத்தகைய ஒரு பின்னணியில்தான் நாம் இன்று நோக்க உள்ள பகுதி வருகிறது.

யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்” என்றார்.

இயேசு கிறிஸ்து, நோன்பிருக்க ஒரு காலம் உண்டு என்று சொல்லி அவர்களுக்கு பதிலடி தருகிறார். யோவானின் சீடர்களும் பரிசேயர்களும் வாரம் இருமுறை நோன்பிருந்து வந்தார்கள். இப்படி அவர்கள் மேற்கொண்ட நோன்பு, பெரும்பாலும் மக்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டன. ஆண்டவர் இயேசு இத்தகைய வெளிவேடத்தை கடுமையாக எதிர்த்து வந்தார். அதோடு இப்பகுதியில், எப்போது நோன்பிருக்கவேண்டும், எத்தகைய மனநிலையோடு நோன்பிருக்கவேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றார். ஆகவே, உண்மையான நோன்பு என்பது வெளி அடையாளங்களில் அல்ல, ஒருவர் மற்றவருக்குச் செய்யும் இரக்கச் செயல்களிலேயே அடங்கி இருக்கின்றது என்பதை இயேசு நமக்குத் தெளிவாக எடுத்துச் சொல்கிறார்.

இயேசு யோவானின் சீடர்க்குச் சொல்கின்ற பதிலில் இரண்டு உண்மைகள் அடங்கியிருக்கின்றன. ஒன்று, இயேசு இவ்வுலகிற்குத் துக்கத்தை அல்ல, மகிழ்ச்சியைக் கொண்டு வந்தார் என்பதாகும். இயேசுவின் பிறப்பின்போது, வானதூதர் இடையர்களுக்குத் தோன்றுகின்றபோது, “எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவிக்கிறேன்” (லூக் 2:10) என்று சொல்கின்றார். அதைப் போன்று இயேசு தன்னுடைய சீடர்களோடு இருக்கின்றபோது, “என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவுபெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்” என்கிறார் (யோவா 15:11). இதன்மூலம் இயேசு இவ்வுலகிற்கு துக்கத்தை அல்ல, மகிழ்ச்சியைக் கொண்டுவந்தார் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

அடுத்ததாக, இயேசு யோவானின் சீடர்களிடம் சொல்வதிலிருந்து நாம் அறிந்துகொள்ளும் உண்மை, நோன்பிருப்பதற்கு என்று ஒருகாலம் இருக்கின்றது. அந்தக் காலத்தில் அதைச் செய்தால் போதும் என்பதாகும். யூதர்கள் பல காரணங்களுக்காக நோன்பிருந்தாலும், முக்கியக் காரணமாக இருந்தது மெசியாவின் வருகைக்காக நோன்பிருந்ததுதான். இந்த உண்மையை உணராமல்தான் நோன்பை ஒரு சடங்காகச் செய்தார்கள். ஆகையால், நாமும் நோன்பிருக்கும்போது, அதன் அர்த்தத்தை உணர்ந்து செய்கின்றபோது தான் அதற்கான ஆசிரைப் பெறமுடியும்.

நோன்பு இருப்பது என்பது இன்றைக்கு ஒரு கலாச்சாரமாக மாறி வருகின்றது. மதரீதியாக இன்றைக்கு காவி உடுத்தி, விரதமிருந்து, நடை நடைந்து திருத்தலங்களுக்கு செல்லுவது என்பது நடைமுறையாகி வருகிறது. விரும்பியதை பெற்றுக் கொள்ள நேர்ச்சை என்ற பெயரில் கூட நோன்பிருந்து வருவது வழக்கமாகி உள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது, இந்த நோன்பின் காலம் அர்த்தம் இழந்து போகின்றதோ என கேட்கத் தோன்றுகின்றது.

போராட்டங்கள், சலுகை, சம்பள உயர்வு என பல காரணங்களுக்காக உண்ணாநோன்பிருப்பது உண்டு. தன்னை அழகுபடுத்திக் கொள்ள, ஜவுளிக்கடை கண்காட்சி பொம்மையைப் போல தங்களை மாற்றிக் கொள்ள இன்று பல பேர், குறிப்பாக பெண்கள் நோன்பிருப்பது உண்டு. கேட்டால், டயட்டில் இருக்கிறேன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். மருத்துவர்கள் சொல்லிக்கூட சிலர் பலவற்றை தவிர்ப்பது உண்டு. இதையெல்லாம் நாம் இன்று நோக்க உள்ள உண்ணா நோன்பிற்குள் அடக்க முடியாது.

கிறிஸ்தவர்கள் எப்போது நோன்பிருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். தவக்காலத்தில் சிலர் நாற்பது நாட்கள் ஒருவேளை உணவுண்டு நோன்பிருப்பர். பலர் வெள்ளிக்கிழமைகளில் நோன்பிருப்பர். பலர் நாற்பது நாட்களும் புலால் உணவை தவிர்ப்பர். புனித வாரத்தின் ஏழு நாட்களும் நோன்பிருப்பவர்களும் உள்ளனர். பாடுகளின் காலத்தில் நோன்பிருப்பது, நம்முடைய பாவங்களை எண்ணி நம்மை அடக்கியாளவும், பாவத்திற்கு பரிகாரம் செய்து கொள்வதற்கும், இதனால் வரும் பொருளாதாரத்தை மற்றவர்களோடு பரிமாறிக் கொள்வதற்கும் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

யூதர்கள் சாக்கு உடை உடுத்தி, சாம்பலில் உட்காருவதையும், தங்களை ஒடுக்கிக் கொள்வதையும் நோன்பென நினைத்து வந்தார்கள். பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் அரசர்களும், மக்களும், கால்நடைகளும் நோன்பு இருந்ததாக நாம் வாசித்திருக்கிறோம். குறிப்பாக, அரசர்கள் தங்கள் அரசாடைகளைக் கிழித்துக்கொண்டவர்களாய் சாக்கு உடை உடுத்தி உண்ணா நோன்பிருந்து கடவுளை நோக்கி மன்றாடினர் என பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. யோனாவின் மொழிகளைக் கேட்டு நினிவே மக்கள் நோன்பிருந்த நிகழ்வுகளெல்லாம் நமக்கு புதிதல்ல. இத்தகைய நோன்புகள் மனமாற்றத்தைக் குறிக்கின்றன. இந்த மனமாற்றங்கள் எல்லாம் எப்போது நடைபெறும் என நாம் ஆழ்ந்து சிந்தித்தோமெனில் கடவுளை விட்டு நாம் விலகிவிட்டோம் என்று நம் ஆழ் மனம் உணரும் தருணத்தில்தான் நிகழ்கிறது. அதன் விளைவாக, ஒப்புரவுக்காக நாம் நோன்பு இருக்கிறோம்.

ஆனால், இயேசுவோ, "மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்பொழுது அவர்களும் நோன்பு இருப்பார்கள்." என்ற ஒரு பதிலை, தன்னுடைய சீடர்களைக் குறை கூறிய யோவானின் சீடர்களுக்குக் கூறுகிறார். இவ்வார்த்தைகள் வழி நாம் அறிய வருவது யாதெனில், கடவுளின் உடனிருப்பை நாம் உணர்ந்து வாழும் போது துக்கம் கொண்டாடத் தேவையில்லை. ஏனெனில் அவருடைய உடனிருப்பு நம்மை வழிநடத்தும். துன்பத்தையும் சவால்களையும் தாங்கும் சக்தியைத் தரும் என்பதாகும். நாம் அவருடைய உடனிருப்பை உணராமல் நம் பலவீனங்களால் அவரைப் பிரியும் போது துக்கம் நம்மைத் துரத்தும். அச்சமயங்களில் ஆழ்மன வருத்தத்தோடு நாம் இருக்கும் நோன்பு நம்மை மீண்டும் அவரோடு இணைக்கும். வெறும் சடங்கிற்காகவும் கடமைக்காகவும்  நாம் இருக்கும் நோன்பு அர்த்தமற்றது என்பதை இயேசு தெளிவாக இங்கு ஒரு சிறு உவமை வழி விளக்குகிறார்.

ஆண்டவராகிய கடவுளும் நம்மிடம்,  வெளிப்புற அடையாளங்கள் அல்ல, ஒருவர் மற்றவருக்குச் செய்யும் இரக்கச் செயல்களே உண்மையான நோன்பு என்று எடுத்துரைக்கின்றார். உண்மையான நோன்பின் வெளிப்பாடான இரக்கச் செயல்கள் என்ன என்று நோக்க நாம் பழைய ஏற்பாட்டைக் கொஞ்சம் புரட்ட வேண்டியிருக்கும்.

“ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணாநோன்பின் நாளாகத் தெரிந்து கொள்வது? ஒருவன் நாணலைப் போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும் ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கின்றீர்கள்? கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு! பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! (எசாயா 58:5-7) என்கிறார் கடவுள்.

உண்மையான நோன்பு, ஜெபம் என்பது வறியவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து, அவர்களை மனித மாண்போடு நடத்துவதுதானே ஒழிய ஜெபத்தை தவறாது சொல்லிக்கொண்டிருப்பது அல்ல.

ஒரு குடும்பத்தில் ஐந்து சகோதரர்கள் இருந்தார்கள். இதில் மூத்த சகோதரருக்கு மற்ற சகோதரர்கள் சரியில்லை, சரியாக இறைவனிடம் வேண்டுவதில்லை என்ற வருத்தம் இருந்துகொண்டே இருந்தது. ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். அவரைச் சந்தித்த அந்த மூத்த சகோதரர், “சாமி! என்னுடைய நான்கு சகோதரர்களும் என்னைப் போன்று சரியாக இறைவனிடம் வேண்டுவதுமில்லை, பக்தியாக இருப்பதுமில்லை. அவர்களை நல்ல வழிக்குக் கொண்டுவருவதற்கு நான் என்ன செய்யவேண்டும்” என்று பணிவோடு கேட்டார். அவர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அந்த துறவி, “மகனே! நான் சொல்வதை மிகக் கவனமாகக் கேள். நீ இப்படி, ‘அவர் இறைவனிடம் மன்றாடவில்லை’, ‘இவர் இறைவனிடம் மன்றாடவில்லை’ என்று அடுத்தவரைப் பற்றிக் குறை கூறிக்கொண்டிருப்பதற்குப் பதில் நீ இறைவனிடம் மன்றாடாமல் இருப்பதே நல்லது” என்றார்.

இந்த நிகழ்வில் வரும் மூத்த சகோதரரைப் போன்று இன்றைக்கும் பலபேர் தாங்கள் நல்லவர்கள், ஒழுக்க சீலர்கள் என்று காட்ட விரும்பி, மற்றவர்களைக் குறைகூறிக் கொண்டிருக்கின்றார்கள். யோவானின் சீடரும் பரிசேயரும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் நோன்பிருக்கலாம் அல்லது இருந்திருக்கலாம். அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால், அவர்கள் இயேசுவிடம், “உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை? என்று கேட்பதுதான் வியப்பாக இருக்கின்றது. இது ஒருவிதத்தில், யோவானின் சீடர்கள் தங்களுடைய விருப்பத்தை இயேசுவின் சீடர்கள்மீது சுமத்துவதாக இருக்கின்றது.

திருமுழுக்கு யோவானின் சீடர்கள் பரிசேயர்களைப்போல யூத வழக்கப்படி திங்கள், வியாழன் நாட்களில் நோன்பு கடைபிடித்தனர். அதை உள்ளரங்கமாக அன்றி வெளியரங்கமாக தலைமேல் சாம்பல் பூசி, அதை முகமெல்லாம் வழியச்செய்து, சோக முகத்தோடு நடமாடி வந்தனர். இவ்வெளிவேடச் சடங்குத்தனச் சீர்கேட்டை இயேசு ஆதரிக்கவில்லை (மத் 6:16-18) வழக்கமாக, யூத சமூகத்தில் ஆண்டின் பாவப் பரிகார நாளில், குடும்பத்தில் இறப்பு நிகழ்ந்தால், நாட்டில் பொதுச் சேதங்கள் ஏற்பட்டால், இயற்கைச் சீற்றங்களின் கோரப்பிடியில், இறை இரக்கத்தைப் பெறும் நோக்கில் நோன்பு கடைபிடிக்கப்பட்டது. இயேசுவின் வருகையும் வாழ்தலும் திருமண விழாவிற்கு ஒப்பானது. மெசியா எனும் இயேசுவே இங்கு மணவாளன். திருமண வீட்டில் நோன்பு இருப்பது இழுக்கு.

நோன்பு என்பது உள்ளமுருகி, உடல் வருத்தி, உணர்வு அடக்கிச் செய்யும் ஓர் ஒடுக்க நற்செயல். அச்செயலோ  சடங்கு சம்பிரதாயங்களுள் முடங்கிப்போனது. இறைவனோடு ஒப்புரவை கொண்டு வராத, மற்றும் பிறரன்பு நடவடிக்கைகளைத் தூண்டாத எந்த நோன்பும் பயனற்றதே, வெளிவேடமே.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2024, 14:18