தடம் தந்த தகைமை : மொர்தக்காய், அரசி எஸ்தரின் உதவியை நாடல்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் அறிந்த மொர்தக்காய் தம் ஆடைகளைக் கிழித்து சாக்கு உடை அணிந்து, சாம்பல் பூசிக்கொண்டு, வெளியே நகரின் மையத்திற்குச் சென்று ஓலமிட்டு, மனங்கசிந்து அழுதார். அரச வாயிலுள் சாக்கு உடை அணிந்து எவரும் நுழையக்கூடாது என்பதால் அவர் வாயில் வரை சென்றார். மன்னரின் வார்த்தையும் நியமமும் எந்தெந்த மாநிலங்களை அடைந்தனவோ, அங்கெல்லாம் இருந்த யூதரிடையே பெரும், புலம்பலும், நோன்பும், கண்ணீரும், அழுகையும் விளங்க, அனைவரும் சாக்கு உடை அணிந்து சாம்பல் பூசிக் கொண்டனர்.
எஸ்தரின் செவிலியரும் அண்ணகர்களும் வந்து இவற்றை அவரிடம் சொல்ல, அரசி பெரிதும் வாடித் துடித்தார். மொர்தக்காய் சாக்கு உடை களைந்து, நல்லாடை அணிந்து கொள்ளும்படி ஆடைகளை அவர் அனுப்பி வைத்தார். அவரோ அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. எஸ்தருக்குப் பணிபுரியும்படி மன்னரால் நியமிக்கப்பட்டிருந்த அண்ணகர் அத்தாக்கை அவர் அழைத்து, மொர்தக்காயின் அவலநிலைக்குக் காரணம் யாதென அறிந்து வருமாறு அனுப்பினார். அத்தாக்கு அரச வாயிலுக்கு எதிரே நகர்ச் சந்தியில் இருந்த மொர்தக்காயிடம் சென்றார்.
மொர்தக்காய் தமக்கு நேரிட்ட அனைத்தைப் பற்றியும், யூதரை அழிக்கும்படி அரச கருவூலத்தில் சேர்ப்பதற்காக ஆமான் வாக்களித்த வெள்ளி பற்றியும் அவருக்குத் தெரிவித்தார். மேலும், சூசானில் பிறப்பிக்கப்பட்ட நியமத்தின் ஒரு நகலை எஸ்தரிடம் காட்டும்படி கொடுத்து, அவர் மன்னனிடம் சென்று மன்றாடி, அவர் முன்னிலையில் தம் மக்களுக்காகப் பரிந்து பேசுமாறு வேண்டினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்