தடம் தந்த தகைமை - யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல; நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன். யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு; நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள். (யோவா 5:34,35)
மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை (லூக் 7:28) என இயேசுவால் உயர்த்திச் சொல்லப்பட்ட திருமுழுக்கு யோவான் இன்று அதே இயேசுவால் சுடர்விடும் விளக்கு எனச் சித்தரிக்கப்படுகின்றார் (யோவா 1:35). யோவான் நகரம் துறந்த ஒரு பாலைவனத் துறவி. இயேசுவுக்கு முந்தைய இறைவாக்கினர். இயேசுவைத் திருமுழுக்காட்டியதோடு ‘கடவுளின் ஆட்டுக்குட்டி’ (யோவா 1:36) எனச் சுட்டியவர். தம் சீடர்களை இயேசுவுக்குத் தானமாக்கியவர். ஒரு நீதி நேசர். அஞ்சா நெஞ்சினர்.
நல்லவரை, நல்லவற்றைப் பாராட்டாமலிருப்பது பாவம். இக்கருத்து இயேசுவின் எண்ணத்துள் கருக்கொண்டிருந்தது. எனவேதான் தன் நெருங்கிய உறவாம் யோவானின் நீதிச் செயல்பாடுகளைக் கண்ணுற்று அவரை ‘விளக்கு’ என விளக்கினார். ஆனால் ஆதிக்கம் கோலோச்சி, நீதி எனும் விதையைப் புதைத்தது. புதைக்கப்பட்ட அவ்விதை முளைத்து விருட்சமாகி நிற்பதுவே இறையாட்சி. அதன் ஒவ்வொரு கனியும் நாம் ஒவ்வொருவருமே.
இறைவா! இப்பூமிக்குள் உம்மால் அனுப்பப்பட்ட நானும் ஒரு சுடராய் ஒளிர எண்ணெயாய் உம் வரம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்