தேடுதல்

இயேசுவைக் குறித்து திருமுழுக்கு யோவானின் சான்று இயேசுவைக் குறித்து திருமுழுக்கு யோவானின் சான்று 

தடம் தந்த தகைமை - மேலான சான்று எனக்கு உண்டு

நன்மைக்கான பயணத்தில் துணிந்து நடப்பவர்களே நன்மனிதர். அவரது வாழ்வே உலகத்திற்கான உன்னத சான்று. உண்மையிலும் நன்மையிலும் வேரூன்றியவர் சாதிப்பார், சரித்திரமாவார்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

யோவான் பகர்ந்த சான்றைவிட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும். (யோவா 5:36)

‘தூய ஆவி இறங்கி யார் மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்’ என உணர்ந்திருந்த யோவான் அந்த அரும்நிகழ்வைக் கண்டார். இயேசுவை ‘இறைமகன்’ எனச் சான்றும் பகர்ந்தார் (யோவா 1:34). ஆனால் யோவானை ஏற்காத அச்சமூகம் அவரது சான்றையும் ஏற்கவில்லை. அவர் சான்றுரைத்த இயேசுவையும் ஏற்கவில்லை. அச்சான்றுகளை விட மேலான இயேசுவின் அர்ப்பணச் செயல்களையும் ஏற்கவில்லை.

உண்மையும், உறுதியான ஊக்கமும் உடையவர்கள் எப்போதும் தன் கடமையில் கருத்தாயிருப்பார்கள். இயேசுவின் சொற்களும் செயல்களும் அவற்றை மெய்ப்பித்துக் கொண்டிருந்தன. யார் ஏற்றாலும் எதிர்த்தாலும் நன்மைக்கான பயணத்தில் துணிந்து நடப்பவர்களே நன்மனிதர். அவரது வாழ்வே உலகத்திற்கான உன்னத சான்று. நேயச் செயல்களால் தந்தைக்குச் சான்று பகர்ந்த இயேசுவின் மனநிலை நம்முள்ளும் வாழ்கிறது. அதைச் செயலாக்கிச் சான்றாவதே நமதான சவால். உண்மையிலும் நன்மையிலும் வேரூன்றியவர் சாதிப்பார், சரித்திரமாவார்.

இறைவா! நான் எதனை செய்தாலும் அதில் எதுவும் பிறர்க்கான தீங்காய் அமையாதிருக்க அருள் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2024, 09:30