தேடுதல்

இயேசு கிறிஸ்து இயேசு கிறிஸ்து  

தடம் தந்த தகைமை - என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்

படைப்போடும், விடுதலைப் பயணத்தோடும் கடவுளின் பணி முடிவடைந்துவிட்டது. இனி நாம்தான் எல்லாவற்றையும் கண்காணிக்க வேண்டுமென்ற கர்வப் போக்கு யூதர்களிடம் மிதமிஞ்சி இருந்தது.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல் நலமற்றவருக்கு ஓய்வு நாளில் நலம் கொடுத்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்திட, இயேசுவோ, ‘என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன்’ (யோவா 5:17) என பதிலளித்தார்.

யூதர்களுக்கு இயேசுவின் மீதான கோபம் அடுக்கடுக்காக ஏறிக்கொண்டிருந்தது.  நலமிழந்தவரைக் குணப்படுத்தியது, அதுவும் ஆலயத்தில். படுக்கையைத் தூக்கிக்கொண்டு நடக்கச் சொல்லியது, அதுவும் ஓய்வுநாளில், மீண்டும் அவரைச் சந்தித்துப் பாவம் தவிர்த்த வாழ்வுக்கு வழிகாட்டியது, அதுவும் பாவியிடத்தில். கடவுளைத் தந்தை என்று உறவு கொண்டாடியது, கடவுளோடு தன்னை இணைத்துப் பேசியது, என எல்லாமே சட்ட மீறலாகப் பார்க்கப்பட்டதேயொழிய நன்மையாக எதையும் கருதவில்லை.

படைப்போடும், விடுதலைப் பயணத்தோடும் கடவுளின் பணி முடிவடைந்துவிட்டது. இனி நாம்தான் எல்லாவற்றையும் கண்காணிக்க வேண்டுமென்ற கர்வப் போக்கு யூதர்களிடம் மிதமிஞ்சி இருந்தது. எனவே இயேசுவின் சொல்லாடலும், செயலாற்றலும் அவர்களுக்குள் எரிச்சலை மூட்டின. கடவுள் அன்றும் இன்றும் என்றும் செயல்படுபவர். அவரது செயல்திறனை எவராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதே நிஜம். நம் நினைவுகளைவிட வார்த்தைகள் வெகு சக்தி வாய்ந்தவை.

இறைவா! நீர் என்னுள் இருந்து செயலாற்றுகிறீர். உம்முள் நானுமிருந்து செயலாற்ற வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2024, 15:11