தடம் தந்த தகைமை - அவர் இறைவாக்கினர் என்பதால்....
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார்,(மத் 10:40,41) என்றார் இயேசு.
ஏற்புடைமைக்குள் நுழைவது எளிதானதன்று. ஒருவரை ஏற்பது என்பது அவரை மட்டுமன்று, அவரது பின்புலத்தையும் ஏற்பதற்கு ஒப்பாகும். அவ்வாறு ஏற்றால் மட்டும் போதாது, அவரோடு ஒன்றித்துப் பயணிக்க வேண்டும். தம்மை அனுப்பியவரை ஏற்கும் எவராயினும் அவர் இயேசுவையே ஏற்கிறார் எனச் சொல்லும் அவரது வார்த்தை, தம்மைப்
பின்தொடர்வோருக்கு அவர் அளிக்கும் மாட்சியாகும். சீடர்களை முதன்மைப்படுத்தும் இயேசுவின் உயர்ந்த உள்ளம் உண்மையிலேயே வானிலும் மேலானது.
அவ்வாறே, கடவுளின் சார்பாக இறைவாக்குரைப்பவரையும், கடவுளை மட்டுமே நம்பி நேர்வழி நடப்பவரையும் ஏற்பவர் இறைவனின் ஆசிக்குரியவர். நாம் ஒவ்வொருவரும் கடவுளின் பதிலாள். கடவுள் விரும்புவதைச் செய்வதே நம் வாழ்வின் தலையாய பணி. அவ்வாறு பெறும் ஒவ்வொரு பணியையும் ஆழ்ந்த அன்புணர்வோடும், அர்ப்பணத்தோடும் செய்கையில் இறைமை நமக்குள் நிறைந்துள்ளது என்பதையே நாம் வெளிப்படுத்துகின்றோம். நாம் கீழ்நோக்கியே பார்த்துக் கொண்டிருந்தால் ஒருபோதும் வானவில்லை இரசிக்க முடியாது.
இறைவா! எனைச் சூழ வாழும் எல்லார் வழியாகவும், எல்லாவற்றின் வழியாகவும் நீர் வெளிப்படுகின்றீர். உம்மைப் பார்க்க, பழக, பணியாற்ற என் அகக் கண்களைத் திறந்திடும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்