தடம் தந்த தகைமை - மனம் மாறத் தேவையில்லாத.....
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் (லூக் 15:7) என்றார் இயேசு.
கடவுளின் கரைபுரண்டோடும் கரிசனைக்கான ஓர் எழிலான எடுத்துக்காட்டே இயேசு மொழிந்த காணாமற்போன ஆடு பற்றிய உவமை. இங்கே எண்ணிக்கையில் 99 ஆகச் சொல்லப்பட்ட பரிசேயர், மறைநூல் அறிஞர்களைவிட ஒன்றெனச் சித்தரிக்கப்பட்ட வரிதண்டுவோர், பாவிகள் மிகக் கரிசனைக்குரியவர்கள். ஏனெனில் அவர்கள் இழிவாக, இளக்காரமாகப் பார்க்கப்பட்டார்கள், நடத்தப்பட்டார்கள். அத்தகையோரையே இயேசு அருகழைத்து, அரவணைத்து, அன்பு விருந்து உண்டு மகிழ்ந்தார்.
மறைநூலும், சட்டங்களும் கற்றதனால் தாங்கள் நேர்மையாளர்கள், எனவே இயேசுவின் போதனைகள் கேட்டு மனம் மாறத் தேவையில்லை என்ற மேதாவித்தனத்தில் மூழ்கிக் கிடந்தது ஒரு கூட்டம். ஆனால் வாழ்விலும், தொழிலிலும் தவறிழைத்த எளியோர் இயேசுவை அணுகினர். அவருக்குச் செவிமடுத்தனர். புதுவாழ்வுக்குள் புகத் தயாராயினர்.
ஏனெனில் அவர்களுள் மனம் மாறுவதற்கான ஒரு தேடல் இருந்தது. அத்தேடல் இன்று நமக்கும் தேவை. அது பிறரை மாற்ற அல்ல, நாம் மாற. விண்ணகத்தின் நுழைவாயில் மனமாற்றமே.
இறைவா! இச்சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரும் மிக முக்கியமானவர் என்ற முனைப்போடு ஒவ்வொருவரையும் முன்னிறுத்திப் பணியாற்ற வலிமைதாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்