தேடுதல்

இயேசு கிறிஸ்து இயேசு கிறிஸ்து   (Dmitry Kalinovsky)

தடம் தந்த தகைமை - ஞானம் மெய்யானது

வாழ்வை வடிவமைக்கும் வழிமுறைக்கான உந்துணர்வே ஞானம். அது கடவுளிடமிருந்து பெறும் வல்லமை. கடவுள் மனிதரோடு கொள்ளும் செயற்பாட்டு நிலை.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று, (லூக் 7:35) என்றார் இயேசு.

வாழ்வை வடிவமைக்கும் வழிமுறைக்கான உந்துணர்வே ஞானம். அது கடவுளிடமிருந்து பெறும் வல்லமை. கடவுள் மனிதரோடு கொள்ளும் செயற்பாட்டு நிலை. நன்மை தீமையைப் பகுத்துணர்ந்து நல்வழி செல்லச் சொல்லும் பேரறிவே ஞானம். வாழ்வின் ஆழத்திற்குச் செல்லவும், நீதியின் பாதையில் பயணிக்கவும், கண்ணிய மனதோடு செயல்படவும் ஊக்கமூட்டும் உயிர் கலந்த உணர்வே ஞானம். அதையே உலகம் காலாகாலமாகத் தேடிக்கொண்டிருந்தது. அத்தேடல் இயேசு கால சமூகத்துள் பஞ்சமாகிப் போனது.

பழைய ஏற்பாட்டில் இறைவல்லமையாகப் பார்க்கப்பட்ட ஞானம் புதிய ஏற்பாட்டில் புதுப் பரிமாணம் ஏற்றது. அந்த ஞானம் இயேசுவே (1 கொரி 1:30). இயேசுவை ஏற்காதவர்கள் ஞானத்தை எதிர்த்தனர் எனலாம். ஏனெனில் எளிமையாய், எதார்த்தமாய், ஏழையர் தோழராய், எதையும் இறைவிழிகளால் பார்க்கும் அவரை ஏற்றுக் கொள்ளாத சமூகம் ஞானமிழந்து முரண்பட்டு நின்றது. நன்மையை, நல்லவரை ஏற்றலும் எதிர்நோக்குடன் வாழ்தலும் மெய்ஞானம். ஞானம் அன்பில் கனியும்.

இறைவா! உம்மிடமிருந்து பெறும் ஞானத்தை நற்செயல்களால் தானமாக்கும் மனம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 October 2024, 16:36