அமைதிக்கு அழைப்புவிடுக்கும் திருத்தந்தைக்கு உக்ரைன் ஆயர் நன்றி
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
உக்ரேனிய மக்கள் மட்டுமல்ல உலகின் எல்லா கலாச்சார மக்களும் அவர்களின் வாழ்வு, மனித மாண்பு, நீதி, உண்மை, ஆகியவற்றிற்கு மதிப்பளித்து அமைதியுடனும், சுதந்திரத்துடனும் வாழ விரும்புகின்றனர் என்று உக்ரைனின் Kharkiv மறைமாவட்ட ஆயர் Pavlo Honcharuk அவர்கள் உக்ரேனிய மக்களின் உணர்வுகளை பிரதிபலித்தார்.
உக்ரேனிய மக்கள் குளிரால் இறந்து போக அனுமதிக்க வேண்டாம் என்றும், எப்போதும் மிகுந்த பாதிப்புள்ளாகும் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அக்டோபர் 13 ஞாயிறு அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மூவேளை ஜெபவுரையில், உலகளாவிய சமூகத்தை வலியுறுத்தியதை மேற்கோள் காட்டினார் ஆயர் Pavlo Honcharuk.
மேலும், திருத்தந்தையின் செபங்களுக்காகவும், உக்ரைன் குறித்த அவரது அக்கறைக்காகவும், அமைதிக்கான அவரது விண்ணப்பங்களுக்காகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார் ஆயர்.
இரஷ்ய இராணுவப் படைகள், உக்ரைனின் முக்கியமான கட்டிடங்களில் குண்டுகளை வீசுவதாலும், உக்ரேனிய நகரங்களை இருளில் மூழ்கடித்து, குளிரிலிருந்து காக்கும் வெப்பமூட்டும் அமைப்புகளை சேதப்படுத்தி அவைகளை செயலிழக்கச் செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாலும் முதியவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் எளிதில் இறக்க நேரிடும் என்று உக்ரைன் நகரமான கார்கிவ் நிலைமையை விவரித்தார் ஆயர் Honcharuk.
கடுமையான இந்த சூழலில் நாட்டில் பல மக்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றார்கள் என்று கூறிய ஆயர் அவர்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளைக் கொண்ட பெரும்பாலானக் குடும்பங்கள் வேறு எங்கும் செல்ல வழி இல்லாமல் கார்கிவ் நகரத்திலேயே தங்கியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
அவ்வாறு கார்கிவில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு உள்ளூர் நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இலவச போக்குவரத்து மற்றும் தற்காலிக வீடுகளை வழங்குவதன் மூலம் இயன்ற உதவிகளை செய்து வருகிறது என்றும், உதவிகள் வழங்க நிதி ஆதாரங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன என்றும், மக்கள் அனைத்தையும் இழந்து, தற்காலிக விடுதிகளில் வாழ்கிறார்கள் என்றும் வேதனை தெரிவித்துள்ளார் ஆயர் Honcharuk.
மேலும், குளிர் காலம் நெருங்கி வருவதால் மக்கள் பதட்ட நிலையில் உள்ளனர் என்றும், வெப்பமூட்டும் அமைப்புகளை இயக்குவதில் சிரமங்கள் ஏற்பட்டு நிலைமை இன்னும் கடினமானதாக மாறும் என்றும் கூறியுள்ளார்.
அதிகமான தாக்குதல்கள் இருக்கும் என்பதை அறிந்த கார்கிவ் நகரம், வருகின்ற கடுமையான மாதங்களை எதிர்கொள்ள பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது என்று மேலும் கூறினார் அவர்.
திருத்தந்தைக்கும், அன்பு, உண்மை, நீதி, நேர்மை ஆகியவற்றின் பக்கம் நிற்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஜெப உதவியை நாடியதுடன், இறைவன் விரைவில் வெற்றி அருள்வார் என்னும் நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் ஆயர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்