தேடுதல்

கர்தினால் லூயிஸ் ரபேல் சாக்கோ கர்தினால் லூயிஸ் ரபேல் சாக்கோ  (AFP or licensors)

கர்தினால் சாக்கோ : மத்திய கிழக்கில் அமைதி முயற்சிகள் தாமதம்

மத்திய கிழக்கில் போரிடும் துருப்புக்களிடையே நடுநிலையாளராகச் செயல்படுவதில் அனைத்துலக சமுதாயம் பலவீனமானதாகத் தெரிவதால், பலவீனமான மக்களே துன்புறுகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மத்திய கிழக்குப் பகுதியில் இடம்பெறும் மோதல்களில் பகுத்தறிவு வாதத்திற்கு செவிமடுக்காமையும், பொறுப்புணர்வுகளை ஏற்காமையும் இருப்பதால் அப்பாவி பொதுமக்களே இதன் விளைவுகளை அனுபவிப்பதாக கவலையை வெளியிட்டார் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் ரபேல் சாக்கோ.

மத்தியக்கிழக்குப் பகுதியின் வன்முறைகளையும் உயிரிழப்புக்களையும் தடுப்பதற்கான முழு பொறுப்புணர்வும் அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளின் தலைவர்களுக்கு இருக்கின்றபோதிலும், பன்னாட்டு சமுதாயத்தின் உதவியும் இதில் தேவைப்படுகின்றது என்ற கர்தினால், பன்னாட்டு சமுதாயத்திடம் இருந்து விண்ணப்பங்களும் சமரச முயற்சிகளும் இடம்பெறுகின்றபோதிலும்,  அமைதிக்கான முன்னேற்றம் தோல்வியையேக் கண்டுவருகிறது என்று மேலும் தெரிவித்தார்.   

உரோம் நகரில் உலக ஆயர் மாமன்றத்தில் பங்குபெற்றுவரும் கர்தினால் சாக்கோ அவர்கள், மத்தியக்கிழக்கு நிலைகள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இவ்வாறு கூறினார்.

மத்திய கிழக்கில் போரிடும் துருப்புக்களிடையே நடுநிலையாளராகச் செயல்படுவதில் அனைத்துலக சமுதாயம் பலவீனமானதாகத் தெரிவதாகவும், முந்தய காலத்தைப்போல் தற்போது ஒரு சரியான உலக ஒழுங்குமுறை இடம்பெறவில்லை எனவும், மதிப்பீடுகளும் சரியான கொள்கைகளும் இன்றி வாழும் உலகில் பலவீனமான மக்களே அதிகத் துன்பங்களை அனுபவிப்பதாகவும் தன் கவலையை வெளியிட்டார் கர்தினால் சாக்கோ.

இன்றைய உலகின் பிரச்சனைகளும் மோதல்களும், பேச்சுவார்த்தைகள், அரசியல் அணுகுமுறை, மற்றும் வன்முறையற்ற வழிகள் வழியாக தீர்வுகாணப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தலைவர்.

மத்திய கிழக்குப்பகுதி பல காலமாகவே அமைதியின்றி இருப்பதைக் குறித்து பன்னாட்டு சமூகம் அக்கறை கொள்ளவேண்டும் என்ற கர்தினால், அனைத்து வன்முறை ஆதாரங்களையும், போர் மற்றும் ஆயுதங்களைக் கைக்கொள்வதையும் விட்டொழிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.

போரால் பொருளாதாரம், சுற்றுச்சூழல், காலநிலை, உணவு தயாரிப்பு போன்றவை பெருமளவில் பாதிக்கப்பட்டுவருவது குறித்த கவலையையும் வெளியிட்டார் கர்தினால் சாக்கோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 October 2024, 16:55