மருத்துவர் துணையோடு தற்கொலையை அனுமதிக்கும் சட்டப்பரிந்துரை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலைகளை அனுமதிக்கும் சட்டப் பரிந்துரை, இங்கிலாந்தின் பிரபுக்கள் அவைக்குச் சென்று பின்னர் மக்களவையின் ஆய்வுக்கு வரவுள்ளதையொட்டி, அது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் இருக்க அனைவரும் ஒன்றிணைந்து செபிக்குமாறு இங்கிலாந்து ஆயர் ஒருவர் அழைப்புவிடுத்துள்ளார்.
இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தற்கொலைக்கு ஆதரவான சட்டப் பரிந்துரை இம்மாதம் 16ஆம் தேதி ஆய்வுக்கு வரவுள்ள நிலையில் இச்சட்டப் பரிந்துரைக் குறித்து தன் கவலையை வெளியிட்ட இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையின் வாழ்வுக்கான அவையின் தலைவர், ஆயர் John Sherrington அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்கொலைக்கு ஆதரவளிக்கும் சட்டம் நிறைவேற்றப்படாமல் இருக்க அனைவரும் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்யுமாறு அழைப்புவிடுத்துள்ளார்.
தற்கொலைச் செய்ய விரும்புவோருக்கு மருத்துவ உதவிகளை வழங்கி அவர்கள் மரணத்தைத் தழுவ சட்டபூர்வ அனுமதியைத் தரவேண்டும் என இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் Kim Leadbeater அவர்கள் முன்வைத்த சட்டப் பரிந்துரை தற்போது ஆய்வுக்கு எடுக்கப்பட உள்ள நிலையில், இதை தங்கள் பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் உதவியுடன் எதிர்க்க வேண்டும் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மக்களுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது தலத்திருஅவை.
தற்கொலைகளை மருத்துவர் உதவியுடன் நிறைவேற்றும் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது மனித வாழ்வின் மாண்பையும் புனிதத்துவத்தையும் குறைத்து மதிப்பிடுவதாக இருக்கும் என்றார் ஆயர் Sherrington.
வாழ்வின் கடைசி காலத்திலிருப்போர் நம்பிக்கையுடனும் பாசத்துடனும் வாழும் வகையில் அவர்கள் மீது அக்கறையும் அன்பும் செலுத்துவதன் வழி அவர்கள் தற்கொலை எண்ணங்களை கைவிட நாம் உதவ முடியும் என்ற ஆயர், அரசியல் தலைவர்கள் எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னரும் ஞானத்தாலும் கருணையாலும் வழிநடத்தப்படவேண்டும் என செபிப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.
மற்றவர் உதவியுடன் நிறைவேற்றப்படும் தற்கொலைகளுக்கு சட்டபூர்வமாக அனுமதி வழங்குவது எத்தகைய ஆபத்துக்களைக் கொணரும் என்பது குறித்து மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய கிறிஸ்தவர்களின் கடமையையும் வலியுறுத்தினார் ஆயர் Sherrington.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்