புனித பூமியில் அமைதி நிலவ பிரான்சிஸ்கன் சபை விண்ணப்பம்
ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்
புனித பூமியில் உள்ள இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள், தங்கள் உயிருக்கும், தங்கள் அன்புக்குரியவர்களின் உயிருக்கும் அச்சம் தெரிவித்து வரும் நிலையில், வத்திக்கான் செய்தியிடம் பேசிய புனித பூமியின் திருஅவை பொறுப்பாளர் அருள்பணி Francesco Patton அவர்கள் செபங்களுக்கான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் வத்திக்கான் செய்திகளிடம் பேசிய புனித பூமியின் திருஅவை துணை பொறுப்பாளர் அருள்பணி இப்ராஹிம் ஃபால்தாஸ் அவர்கள், ஏற்கனவே பள்ளிகள் திறக்க வேண்டாம் என்று உத்தரவு பெற்ற நிலையில், புனித பிரான்சிஸ் திருவிழாவிற்கான திருவழிபாட்டில் எருசலேமின் அனைத்து துறவிகளும் கூடியிருந்த போது, பலத்த ஒலியுடன் எருசலேமின் தெற்கே உள்ள இராணுவத் தளங்கள் குறிவைத்து தாக்கப்பட்டதைக் கண்டதாக தெரிவித்தார்.
போர்ச்சூழல் மிகுந்த இந்த இரவானது, தங்களுக்கு கவலை மிகுந்த இறைவேண்டலின் இரவாக இருக்கும் என்றும், இந்த பயங்கரமான போரால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்காக ஜெபிக்குமாறும் கேட்டுள்ளார் அருள்பணி Faltas.
ஜெருசலேமில் உள்ள அனைத்து பிரான்சிஸ்கன் துறவிகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டதுடன், போர் முடிவுக்கு வரவும், அமைதி திரும்பவும் இறைவேண்டல் செய்ய ஒன்றாக கூடியுள்ளனர் என்றும், போரின் முட்டாள்தனத்தை அமைதி பேச்சு வார்த்தை வெல்லும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் புனித பூமியின் பிரான்சிஸ்கன் துறவு சபையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹெஸ்புல்லாவுக்கும் இடையே வன்முறை அதிகரித்து வரும் நிலையில், புனித பூமியில் உள்ள திருஅவைத் தலைவர்கள் அமைதிக்காகவும், ஜெப உதவி வேண்டியும் குரல் எழுப்பியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமையன்று இஸ்ரேல் லெபனானை நோக்கி வானத்திலிருந்து குண்டுகளை வீசியதும், ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏறக்குறைய 200 ஏவுகணைகளை ஏவியதும் மத்தியக்கிழக்குப் பகுதியின் பதட்ட நிலைகளை அதிகரித்துள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்