தேடுதல்

பெத்லகேமில் இயேசு பிறந்த இடத்தின் கோவில் பெத்லகேமில் இயேசு பிறந்த இடத்தின் கோவில்  (AFP or licensors)

புனித பூமியில் சுற்றுலா குறைவும், ஏழ்மை அதிகரிப்பும்

பலர் நல்ல வருங்கால வாழ்வைத் தேடி வெளியேறுவதால், பாலஸ்தீனப் பகுதியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்துவருவதாக பாலஸ்தீனிய அமைச்சர் கவலை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

புனித பூமியில் சுற்றுலாப் பயணிகளின் வருகையின்மையால் பெத்லேகம் மற்றும் யெருசலேம் பகுதியில் வாழும் மக்கள் பொருளாதார ரீதியாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏழ்மை பரவலாகக் காணப்படுவதாகவும் கவலையை வெளியிட்டார் பாலஸ்தீனத்தின் சுற்றுலா மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்துறையின் அமைச்சர் Hani al-Hayek.

பாலஸ்தீனப் பகுதியில் இடம்பெறும் போர் மோதல்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகையை நிறுத்தியுள்ளதாகவும், பலர் நல்ல வருங்கால வாழ்வைத் தேடி சொந்த நாட்டைவிட்டு வெளியேறுவதால், பாலஸ்தீனப் பகுதியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்துவருவதாகவும் தன் வருத்தத்தை வெளியிட்டார் அவர்.

குண்டுகளும் ஏவுகணைகளும் ஒரு பக்கம் மக்களை நசுக்கிக்கொண்டிருக்க, மறுபக்கமோ ஏழ்மை மக்களை தன் கோரப்பிடியில் வைத்திருக்கிறது என்ற அமைச்சர் Hani al-Hayek அவர்கள், சுற்றுலாத்துறையை நம்பியிருக்கும் பாலஸ்தீனிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளையில், பாலஸ்தீனியர்கள் இஸ்ராயேலுக்குள் சென்று வேலைச் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் மேலும் துயர்கள் பெருகிவருவதாக கவலையை வெளியிட்டார்.

காசா, வெஸ்ட் பேங்க், மற்றும் லெபனோன் மீது இஸ்ராயேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதால் சுற்றுலாப் பயணிகள் வழி கிட்டும் பாலஸ்தீனியப் பகுதியின் வருவாய் இழப்பு ஒவ்வொரு நாளும் 25 இலட்சம் டாலர் எனவும், குறைந்தபட்சம் 12,000

சுற்றுலாப்பயண ஏற்பாட்டாளர்கள் வேலையின்றி இருப்பதாகவும் கூறினார் பாலஸ்தீனிய அமைச்சர்.

கிறிஸ்தவ கோவில்களுடனும் கிறிஸ்தவ சமுதாயத்துடனும் பாலஸ்தீனிய அரசு மிக நெருங்கிய ஒத்துழைப்பைக் கொண்டுள்ளதாகவும், பாலஸ்தீனத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுள் 70 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள் என்பதால் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பும் முக்கியமானது என மேலும் கூறினார் அமைச்சர் Hani al-Hayek.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2024, 14:18