தேடுதல்

இந்திய பூர்வீகக் குடியினத்தோர் போராட்டம் இந்திய பூர்வீகக் குடியினத்தோர் போராட்டம்  (ANSA)

பாலஸ்தீனிய குழந்தைகளுடன் இந்திய எழுத்தாளரின் ஒருமைப்பாடு

கொடுமைக்கு எதிராக குரல் எழுப்பாதோரின் விருதுகளை மறுத்துவருவதன் வழி, அனைத்து துன்புறும் மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிக்கும் இந்திய எழுத்தாளர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

காசாவில் அமெரிக்க அரசின் ஆதரவு பெற்ற இஸ்ராயேலின் தாக்குதலால் பாதிக்கப்படும் பாலஸ்தீனியக் குழந்தைகளுடன் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும்விதமாக, அமெரிக்காவோடு தொடர்புடைய ‘Room to Read’ என்ற உயரிய விருதை வாங்க மறுத்துள்ளார் இந்திய எழுத்தாளர் Jacinta Kerketta.  

இந்திய பூர்வீகுடியினைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞரும், சமூக நடவடிக்கையாளருமான Jacinta Kerketta அவர்கள், மணிப்பூர் ஆதிவாசிகளின் உரிமைகள் மீறப்பட்டதற்கு தன் எதிர்ப்பை வெளிக்காட்டும்விதமாக கடந்த ஆண்டும் இத்தகையதொரு விருதை ஏற்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

USAID என்ற அமெரிக்க அமைப்போடு தொடர்புடைய இந்த விருதினை வாங்க மறுத்த இந்திய எழுத்தாளரின் செயல், அமெரிக்க ஆதரவுடைய போரால் உயிரிழக்கும் பாலஸ்தீனிய குழந்தைகளுடன் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் ஒரு துணிச்சல் மிக்க செயல்பாடு என்றார் பாட்னாவின் இயேசுசபை அருள்பணியாளர் பிரகாஷ் லூயிஸ்.

பாலஸ்தீனக் குழந்தைகளுடன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதில் எழுத்தாளர் Kerkettaவின் உறுதிப்பாட்டை கடந்த ஆண்டு, மற்றும் இந்த ஆண்டு விருது மறுப்பு நிகழ்வுகள் காட்டுகின்றன என மேலும் கூறினார் இயேசு சபை அருள்பணியாளர்.

இந்தி மொழி எழுத்தாளரான Kerketta அவர்கள் ஜார்க்கண்ட் பகுதியின் பூர்வீகக்குடி இனத்தில் 1983ஆம் ஆண்டு பிறந்து, ஆதிவாசிகளின் தனித்தன்மை, இந்தியாவின் கட்டமைக்கப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு, பாலின வன்முறைகள், குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு, சமூகங்கள் கட்டாயமாகக் குடிபெயர வைக்கப்படும் நிலைகளுக்கு எதிர்ப்பு என பல்வேறு துறைகளில் தன் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார்.

இந்தியாவின் பழங்குடி இன மக்களுக்காக மட்டுமல்ல, மாறாக, உலகில் துன்பங்களை அனுபவிக்கும் அனைத்து மக்களுடன் தன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதன் ஒரு பகுதியாகவே, கொடுமைக்கு எதிராக குரல் எழுப்பாதோரின் விருதுகளை அவர் மறுத்துவருகிறார் என்றார் இயேசு சபை அருள்பணியாளர் பிரகாஷ் லூயிஸ். (Asia news)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2024, 15:21