தேடுதல்

சிறைக்கம்பிகளுக்கிடையே நம்பிக்கையின் தளிர் சிறைக்கம்பிகளுக்கிடையே நம்பிக்கையின் தளிர்  

நேர்காணல் – சிறைப்பணி வாயிலாக மறைப்பணி

கைதிகளுக்கு ஆறுதலளித்து, கடவுளின் மன்னிப்பின் நம்பத்தகுந்த சான்றுகளாக மாற்றுங்கள். தனிமையை உணர்பவர்களைக் கைவிட்டுவிடாதீர்கள், அனைவருக்கும் மன்னிப்பு தேவை என்பதை உணரச் செய்யுங்கள் என்று வலியுறுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துப்படி 12 ஆண்டுகள் சிறைப்பணி ஆற்றுபவர் அருள்சகோதரி மரிய அக்சீலியா பொம்மி ம.ஊ.ச.
நேர்காணல் - அருள்சகோதரி அக்சீலியா பொம்மி ம.ஊ.ச.

மெரினா ராஜ் – வத்திக்கான்

தாயின் வயிற்றில் ஈரைந்து மாதங்கள் நாமெல்லாம் தங்கி, புது உயிராக இம்மண்ணிற்கு விடுதலை பெற்று வந்தோம். கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறர் உடைமையை விரும்பாதே என்று நம் இறைவன் நமக்கு கட்டளைகள் வழியாக நல்வாழ்வைப் போதிக்கின்றார். இருப்பினும் சில நொடி கோபமும் கவனமின்மையும் பலரது வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. எனவே தாங்கள் செய்கின்ற குற்றங்களின் காரணமாக பலர் தங்களது எதிர்கால வாழ்வை சிறைகளில் வாழ்கின்றனர். சிறைகள் கூட சில நேரங்களில் சிந்தை வளர்வதற்கு காரணமாக இருந்தாலும், செய்த குற்றம், செய்யாத குற்றம் என பலவற்றிற்காகவும் பலர் சிறைகளில் வாழ்கின்றனர்.

நான் சிறையில் இருந்தேன் என்னைக் காணவந்தாய் என்ற நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கிணங்க துறவிகளாக இருந்து கொண்டு தங்களது பொன்னான நேரத்தை சிறைக்கைதிகளும் அவர்களும் குடும்பத்தாரும் நல்வாழ்வு பெற பயன்படுத்துபவர் பலர். சிறைகளின் சுவர்களுக்குள் நற்செய்தியை எடுத்துச்செல்லும் பணியாளர்கள், புன்னகையுடனும், செவிமடுக்கும் இதயத்தின் சக்தியுடனும் மிக கடினமான சூழல்களுக்குள் நுழைகிறார்கள். பிறரின் சுமைகளை தங்கள் மீது ஏற்றி, அவர்களுக்காகச் செபிக்கின்றார்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்துவது போல, பல தன்னார்வலர்கள் சிறைக்கைதிகளின் நல்வாழ்விற்காகத் தங்களையே அர்ப்பணிக்கின்றனர்.

வறியவர்களைச் சந்திக்கும்போது, ஒருவர் தனது வறிய நிலையைப் பார்க்கிறார். எனவே கைதிகளுக்கு ஆறுதலளித்து, கடவுளின் மன்னிப்பின் நம்பத்தகுந்த சான்றுகளாக மாற்றுங்கள்.  தனிமையை உணர்பவர்களைக் கைவிட்டுவிடாதீர்கள், அனைவருக்கும் மன்னிப்பு தேவை என்பதை உணரச் செய்யுங்கள் என்று வலியுறுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துப்படி 12 ஆண்டுகள் சிறைப்பணி ஆற்றுபவர் அருள்சகோதரி மரிய அக்சீலியா பொம்மி.

மரியின் ஊழியர் சபையைச் சார்ந்த அருள்சகோதரி மரிய அக்சீலியா பொம்மி அவர்கள், கடந்த 12 ஆண்டுகாலமாக சிறைப்பணியினைச் செய்து வருகின்றார். பாளையங்கோட்டையில் நடைபெற்ற தமிழக சிறைப்பணி களப்பணியாளர்களுக்கான கூட்டம் என பல கூட்டங்களில் பங்கேற்று சிறைக்கைதிகளுக்கு பணியாற்றும் நபராக சிறந்து விளங்குகின்றார்.

சிறைக்கைதிகளை சந்தித்து ஆறுதலும், அவர்கள் மனம் திரும்பி வாழ வழிகாட்டுதலும் வழங்குவதோடு, அவர்களது குடும்பத்தாரையும் சந்தித்து வாழ்க்கை முன்னேற்றத்திற்கான பல செயல்களைச் செய்து வருகின்றார். சிறை இல்லவாசிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களின் பொருளாதார சூழ்நிலையை கண்டறிந்து குழந்தைகளின் படிப்பிற்கு உதவுதல், ஆற்றுப்படுத்துதல் பணி, கைதிகள் மனம் தெளிவு பெற இசை பயிற்சி வழங்கும் அருள்சகோதரர்களோடு இணைந்து அவர்களின் வாழ்வு வளம்பெற தன்னார்வலர்களோடு இணைந்து பல பணிகளைச் செய்து வருகின்றார்.

காலத்திற்கேற்றார் போல சீரும் சிறப்புமாக சிறைப்பணி ஆற்றி பல உள்ளங்களை உயர்த்தி வரும் சகோதரி அவர்களை மறைபரப்பு மாதமாகிய இந்த அக்டோபர் மாதத்தில் அவர்கள் ஆற்றும் சிறைப்பணி வாயிலாக மறைப்பணி பற்றி எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2024, 16:30