தேடுதல்

உயிர்ப்பு ஞாயிறு தாக்குதலில் இறந்தோருக்கு நினைவஞ்சலி உயிர்ப்பு ஞாயிறு தாக்குதலில் இறந்தோருக்கு நினைவஞ்சலி  (ANSA)

இலங்கை அதிபர்: 2019 உயிர்ப்பு ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கிட்டும்

இலங்கை தாக்குதல்களுக்குப் பின்னர் இன்னும் தீவிரமான சமூகப் பேரழிவைத் தடுக்க உதவிய அருள்பணியாளர்களுக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார் அரசுத்தலைவர்.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

2019ஆம் ஆண்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களை,  கொழும்பு,  Katuwapitiyaல் உள்ள புனித செபஸ்தியார் தேவாலயத்தில் சந்தித்தார் இலங்கையின் புதிய அதிபர் Anura Kumara Dissanayake.

சந்திப்பின் போது 16 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 258 பேர் கொல்லப்பட்ட அந்த துயரமான நாளில் தாக்குதல் நடந்த இடத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று கூறிய அதிபர் Kumara Dissanayake  அவர்கள், விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு, இவ்வாறான துயரச் சம்பவங்கள் நாட்டில் மீண்டும் நடைபெறாதிருக்க  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  வலியுறுத்தினார். பின், உயிரிழந்தோரின் நினைவிடத்தில்  மலரஞ்சலி செலுத்தினார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள் கவலைகளையும் சிரமங்களையும்  அதிபருடன் பகிர்ந்து கொண்டனர்.

நடைபெற்ற  அதிபர்  தேர்தலில் மக்களின் தீர்மானத்தில்  ஆதிக்கம்  செலுத்திய முக்கிய காரணிகளில் ஒன்று உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற  தாக்குதல்களில் நீதி கிடைக்கும் என்ற மக்களின் நம்பிக்கையும் ஒன்றாகும்  என்று தெரிவித்த அதிபர் அவர்கள், தாக்குதல் தொடர்பாக மக்கள் தேடும் நீதி மற்றும் நியாயத்தை வழங்குவதே தனது குறிக்கோள் என கூறியதுடன் அதற்கான  முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

வெளிப்படைத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற  விசாரணையை உறுதி செய்யுமாறு அவர் பொதுமக்கள் பாதுகாப்பிற்கான அமைச்சகத்தின்  செயலருக்கு  அறிவுறுத்தினார்.

தாக்குதல்களுக்குப் பின்னர் இன்னும் தீவிரமான சமூகப் பேரழிவைத் தடுக்க உதவிய அருள்பணியாளர்களுக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார் அரசுத்தலைவர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கொழும்பு உயர் மறை  மாவட்டப்  பேராயர், கர்தினால் Malcolm Ranjith அவர்கள், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருமாறு  ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவைக்கு வேண்டுகோள் விடுத்தபோதிலும், எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை என்பதை வலியுறுத்தினார்.

அதிபர் Kumara Dissanayake அவர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்திய கர்தினால், இலங்கை மக்கள், புதிய அதிபர் மீதும் அவருடைய நேர்மையின் மீதும்  வைத்துள்ள நம்பிக்கையையும் எடுத்துரைத்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்களை பொறுப்பேற்க  வைத்து  நீதி வழங்குவதாக அதிபர் Kumara Dissanayake அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார் கர்தினால் மால்கம் இரஞ்சித்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 October 2024, 16:44