மக்களைப் பிளவுபடுத்தும் தலைவர்களை கண்டிக்கும் கென்ய ஆயர்
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
அரசியல் தலைவர்களின் பிளவு ஒரு துர்மாதிரிகையான செயல், அவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும், நாட்டின் ஒற்றுமையின்மையை ஊக்குவிக்கின்றனர் என்று கென்ய ஆயர் பேரவையின் தலைவரும், Kisumu உயர் மறைமாவட்டத்தின் பேராயருமான Maurice Muhatia Makumba அவர்கள் கூறினார்.
Subukia மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்ற தேசிய செப நாள் மறையுரையில் இதனைக் குறிப்பிட்ட பேராயர் மகும்பா அவர்கள், கென்ய அரசியல் தலைவர்கள் இறைவனிடமிருந்து வரும் ஒன்றிப்பின் கொடையை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, பிரிவினையை வெளிப்படுத்தி, மக்களைப் பிளவுபடுத்துகின்றனர் என்று கண்டித்ததாகவும் FIDES செய்தி நிறுவனம் தெரிவித்தது.
விலை உயர்வு, வேலையின்மை, வரிவிதிப்பு உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் பொருளாதார வளர்ச்சியை, அரசியல் தலைவர்கள் தங்கள் பிரிவினை வாதங்களால் மேலும் பாதிப்படைய வைக்கின்றனர் என்றும் பேராயர் கூறினார்.
மேலும், இறைவன் அரசியல் தலைவர்களின் இதயங்களையும் மனதையும் தொட வேண்டும் என்றும், மக்கள் தங்களிடம் என்ன கேட்கிறார்கள் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், தங்கள் சுயநலத்திற்காக நாட்டைப் பிளவுபடுத்தாத, ஒன்றிணைக்கக்கூடிய நல்ல தலைவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
பேராயர் மகும்பா அவர்களுடைய கருத்துக்களின் பின்னணி, அரசின் உயர்மட்டத்தில் இருப்பவர்களிடையே கடுமையான பிளவுகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டுவதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 1 அன்று, துணை குடியரசுத்தலைவர் ரிகாதி கச்சாகுவாவை பதவி விலக்க வேண்டும் என ஆளும் கூட்டணிக் கட்சி ஒன்றின் உறுப்பினரால் 11 குற்றச்சாட்டுகள் கொண்ட நடைமுறை துவக்கப்பட்டது.
துணை அரசுத்தலைவர் கச்சாகுவாவுக்கும் அரசுத்தலைவர் வில்லியம் ரூடோவுக்கும் இடையில் பல மாதங்களாக நீடித்த சர்ச்சையில் இது அண்மையில் ஏற்பட்ட நடவடிக்கை என்று FIDES செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவருக்கு கீழ்ப்படியாமை, தேசிய ஒருமைப்பாடு மீதான தாக்குதல், ஊழல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் போன்றவை இந்த 11 குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்