தேடுதல்

தாக்குதலால் இடம்பெயரும் லெபனான் மக்கள் தாக்குதலால் இடம்பெயரும் லெபனான் மக்கள்  (ANSA)

லெபனானில் தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கு கிறிஸ்தவர் அடைக்கலம்

NGO அமைப்புக்கள், லெபனானின் பள்ளிகளில் அடைக்கலம் தேடியுள்ளோருக்கே உதவிகளை வழங்கும்வேளை, குடும்பங்களில் அடைக்கலம் தேடியுள்ளோருக்கு பெருமறைமாவட்டமே உதவி வழங்குகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

லெபனானின் கிழக்குப்பகுதியின் Baalbek நகரைச் சுற்றி இஸ்ராயேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்திவருவதால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு Beqaa பள்ளத்தாக்கில் வாழும் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் அடைக்கலம் கொடுத்துவருவதாக அப்பகுதி பேராயர் Hanna Rahmé அவர்கள் தெரிவித்தார்.  

ஏறக்குறைய ஐயாயிரம் பேருக்கு கிறிஸ்தவ இல்லங்களில் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளவேளை, மேலும் பல ஆயிரக்கணக்கானோருக்கு பள்ளிகளிலும், திருஅவைக்கு சொந்தமான கட்டிடங்களிலும் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக பேராயர் தெரிவித்தார்.

ஏற்கனவே 13 ஆயிரம் மக்கள் புலம்பெயர்ந்தவர்களாக மாறியுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் Deir El-Ahmar  நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து  மூன்று முதல் நான்கு குடும்பங்களுக்கு, அதாவது 30 முதல் 60 பேருக்கு  கிறிஸ்தவ குடும்பங்களால் அடைக்கலம் வழங்கப்பட்டு வருவதாகவும் உரைக்கும் மாரனைட் பேராயர் Rahmé  அவர்கள், அரசுசாரா உதவி அமைப்புக்கள், பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கே உதவிகளை வழங்கிவருவதாகவும், குடும்பங்களில் அடைக்கலம் தேடியுள்ள மக்களுக்கு பெருமறைமாவட்டமே உதவிகளை ஆற்றிவருவதாகவும் தெரிவித்தார்.

ACN எனப்படும் Aid to the Church in Need என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு தொடர்ந்து உணவு உதவிகளையும், போர்வைகள், படுக்கைகள் போன்றவைகளையும் வழங்கி வருவதாகவும், பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கியுள்ளதுடன் 1200 பேருக்கு மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளதாகவும் கூறினார் பேராயர் Rahmé. (ACN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 October 2024, 15:51