தேடுதல்

உக்ரைனில் உதவிகள் உக்ரைனில் உதவிகள்  (ANSA)

உக்ரைனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு Order of Maltaவின் உதவி

போரினால் உக்ரேனிய மக்கள் அடைந்துள்ள உளவியல் பாதிப்புகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை பற்றியும் எடுத்துரைக்கிறது கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

உக்ரைனில் இரஷ்யாவின்  பயங்கரமான  போரின் இரண்டு ஆண்டுகள் முழுவதும், Order of Malta   என்னும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு   மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும் ஆதரவளிப்பதற்கும் அதன் உறுதிப்பாட்டில் உறுதியாக உள்ளது.

அக்டோபர் 21 ஆம் தேதி, திங்களன்று, Order of Malta  என்னும் கத்தோலிக்க அமைப்பு, உக்ரைனுக்கான திருப்பீடத் தூதரகத்துடன் இணைந்து  போர்க்காலத்தில் உக்ரைனில் ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடி மற்றும்  Order of Maltaன்   ஆதரவு  என்ற தலைப்பில் ஒரு மாநாட்டை நடத்தியது.

உரோம் நகரில் நடைபெற்ற இம்மாநாடு மிகவும் முக்கியமானது என்றும், உக்ரைனுக்கும் திருப்பீடத்திற்கும் இடையிலான உறவின் 15 வது ஆண்டு  நிறைவை குறிக்கிறது என்றும் திருப்பீடத்திற்கான உக்ரைன் தூதுவர் Andrii Yurash அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உக்ரைனில் 1992  முதல்  அயராது தங்கள் மனிதாபிமான உதவிகளை  வழங்கி  வரும் இந்த  கத்தோலிக்க பிறரன்பு அமைப்பிற்கு நன்றி தெரிவித்த Andrii Yurash அவர்கள், 2022 ஆம் ஆண்டில் முழு அளவிலான இரஷ்ய படையெடுப்பிலிருந்து இந்த அமைப்பின் தேவை அதிகம் வளர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

போரினால் உக்ரைன் மக்கள் அடைந்துள்ள உளவியல் பாதிப்புகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை பற்றியும் எடுத்துரைத்தார்  கத்தோலிக்க பிறரன்பு

அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் Mohammed El Hajj.

உக்ரைன் நாட்டு மக்கள் சந்தித்து வரும் இந்த இக்கட்டான சூழல் ஒரு நீடித்த நெருக்கடி என்றும், உக்ரைன் நாட்டு மக்களுக்கு உளவியல் தேவைகள் மிகப்பெரிய அளவில் உள்ளன என்றும், இத்தேவைகள் அனைவரையும் பாதிக்கின்றன என்றும்  விவரித்தார் ஒருங்கிணைப்பாளர் .

2014ஆம் ஆண்டு  உக்ரைனில் மோதல்  தொடங்கியதைத் தொடர்ந்து, அந்நாட்டில் Order of Malta கத்தோலிக்க பிறரன்பு அமைப்பின்   பணி  தொடங்கியது என்றும்  ஆரம்பத்தில் மனநலம் மற்றும் உளவியல் உதவிகள் வழங்குவதில் இவ்வமைப்பு கவனம் செலுத்தியது என்றும் தெரிவித்தார் Mohammed El Hajj.

பிப்ரவரி 2022இல் முழு அளவிலான இரஷ்ய  படையெடுப்புக்குப் பிறகு, உளவியல் உதவிக்கு மேலதிகமாக, உணவு மற்றும் சுகாதார கருவிகள், தங்குமிடம், மருத்துவ உதவி போன்ற முக்கிய மனிதாபிமான உதவிகளை இந்த அமைப்பு வழங்கி வருகிறது என்றும் விவரித்தார் ஒருங்கிணைப்பாளர்.

ஏறக்குறைய பத்தாண்டு காலமாக நீடித்து வரும் மோதல்களால் உக்ரைன் மக்கள் அடைந்துள்ள பாதிப்புகளுக்கு, நீண்ட கால உளவியல் மற்றும் உணர்வுப்பூர்வமான ஆதரவு தேவை என்றும்,  மனநலப் பராமரிப்பின் தேவை ஏறத்தாழ  இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம் என்றும் கூறினார் Mohammed.

சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்ப பிறரன்பு கத்தோலிக்க அமைப்பு மேற்கொள்ளும்  முயற்சிகளை சுட்டிக்காட்டியதுடன், உக்ரைனின் 60 விழுக்காடு எரிசக்தி அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உக்ரைனின் எரிசக்தி தேவைகளை நிறைவுச் செய்வதே எங்கள் முக்கிய அவசரகால பணி என்றும் கூறினார் Mohammed El Hajj.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2024, 15:15