தேடுதல்

சீடர்களுடன் இயேசு சீடர்களுடன் இயேசு 

விடை தேடும் வினாக்கள் - உள்புற மற்றும் வெளிப்புறத் தூய்மை

தூய்மை என்பது வெளியிலிருந்து வருவதல்ல, மாறாக, உள்ளார்ந்த விதத்தில் மனமாற்றம் பெற்று, நம் செல்வத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும்போது உருவாவது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, இன்றைய நம் ஒலிபரப்பில், மனிதனின் உள்புற மற்றும் வெளிப்புறத் தூய்மை குறித்து இயேசு கேட்கும் கேள்வியை நோக்க உள்ளோம்.

அக்காலத்தில் இயேசு பேசிக்கொண்டிருந்தபோது பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவு அருந்தும்படி அவரைக் கேட்டுக்கொண்டார். அவரும் போய்ப் பந்தியில் அமர்ந்தார். உணவு அருந்துமுன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார். ஆண்டவர் அவரை நோக்கிக் கூறியது: ``பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன. அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா! உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்'' (லூக்கா 11: 37-41)

அழுக்கு என்பது ஒருமுறை சுத்தம் செய்வதால் முற்றிலுமாக மறைந்துவிடுவதில்லை. சுத்தம் செய்யச் செய்ய அது படிந்துகொண்டுதான் இருக்கும். அதற்காக எவரும் சுத்தம் செய்யாமல் விடுவதில்லை. நம் உடலிலும் உள்ளத்திலும் எப்போதும் அழுக்குப்படிந்து கொண்டேதான் இருக்கிறது. உடல் சுத்தம் இல்லா நிலையிலும் மனச்சுத்தம் அத்தியாவசியமானது. ஆனால் மனச்சுத்தம் இல்லா நிலையில் உடல் சுத்தம் அழுக்குதான். மனச்சுத்தமின்றி உடல் சுத்தத்தை பேணி ஒழுகுவதால் எந்த அழுக்கும் விலகுவதில்லை. அறச்சுத்தம் நம் மனதில் நிரம்பினால் மட்டுமே நம் உடல் அழுக்காகத் தெரிந்தாலும் அது தங்கமென மின்னும். இதைத்தான் இயேசு இங்கு கூறவருகிறார்.

உணவு அருந்துமுன் சட்டப்படி கைகழுவாத இயேசுவை லூக்கா ''ஆண்டவர்'' எனவும், சட்டத்தைத் துல்லியமாகக் கடைப்பிடித்த பரிசேயரை இயேசு ''அறிவிலிகளே'' எனவும் அழைப்பது நமக்கு முரண்பாடாகத் தோன்றலாம். ''அறிவிலி'' என்னும் சொல்லுக்கு விவிலியத்தில் ''தீயவர்'' என்றும் ''கடவுளை மறுப்பவர்'' என்றும் பொருளுண்டு.

பரிசேயர் பிறரிடமிருந்து கொள்ளையடித்த செல்வத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்தால் அவர்கள் ''தூய்மையடைவார்கள்'' என இயேசு குறிப்பிடுகிறார். தூய்மை என்பது வெளியிலிருந்து வருவதல்ல, மாறாக, உள்ளார்ந்த விதத்தில் மனமாற்றம் பெற்று, நம் செல்வத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும்போது  உருவாவது. சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டும் என்றால் நாம் அடிப்படையான விதத்தில் மாற்றம் பெற வேண்டும் என்பதை இங்கு உரைக்கிறார் இயேசு..

ஒருமுறை தங்கள் பேராசிரியரை அணுகிய மாணவர்கள், தங்களுக்கு வாழ்வு ரொம்பவே கசக்கின்றது, நிறைய அழுத்தங்களோடு விடுதலையின்றி தவிப்பதாகச் சொன்னார்கள். போராசிரியர் எல்லாருக்கும் காபி போட்டு வெவ்வேறு வடிவங்களில் இருந்த வண்ண வண்ணக் கோப்பைகளில் கொணர்ந்து பரிமாறினார். விதவிதமாய் இருந்த கிண்ணங்களைக் கண்ட மாணவர்கள் கவர்ச்சிகரமான கிண்ணங்களை தேர்ந்தெடுத்தனர். பேராசிரியர் கேட்டார், கிண்ணத்திலா, இல்லை கிண்ணத்திற்குள் உள்ளே உள்ள காபியிலா சுவையிருக்கிறது, என்று. வாழ்வு என்பது கிண்ணமா அல்லது கிண்ணத்திற்குள் உள்ளவையா என்பதுதான் இயேசுவும் கேட்கும் கேள்வி. வெளிப்புறத்தில் அக்கறைக் காட்டும் நாம், அந்த வெளிப்புறத்தையும் மின்ன வைக்கும் உள்புறத்தில் அக்கறைக் காட்டுவதில்லை என்பதுதான் இங்கு இயேசுவின் ஆதங்கம். வாழ்வு என்பது கிண்ணத்திற்கு உள்ள காபியை போன்றது. கிண்ணங்கள் பயன்படுத்தி விட்டு ஓரமாக ஒதுக்கிவைக்கப்படுபவை. உள்ளே இருப்பது தான் களைத்தவனுக்கு ஊக்கம் தரும், மற்றும் உறவை வளர்க்கும்.

மனசிலே அழுக்குப் படியாமல் அதை அவ்வப்போது தேய்த்துக் கழுவிக் குளிப்பாட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அதனால்தான் ஞானிகள், மனச் சுத்தம், உள்ளத் தூய்மைதான் மிக மிக முக்கியம். அது இல்லாமல் உடம்பும், உடுப்பும் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும் பயனேயில்லை என்கிறார்கள். வள்ளுவரும், புறந் தூய்மை நீரான் அமையும் அகந் தூய்மை வாய்மையால் காணப்படும் என்கிறார்.

இயேசு இங்கு, உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும், என்கிறார்.

நிச்சயமாக நல்லதைச் செய்பவன் எவனும் தீய நிலையை அடையவே மாட்டான் அவனுக்கு இம்மையிலும் அழிவு இல்லை; மறுமையிலும் அழிவு இல்லை, என பகவத் கீதையும் உரைக்கிறது.

மனதில் நாம் சுத்தமாக இருந்தால், அனைத்தும் சுத்தமாக இருக்கும். தூய்மையாக இருக்கும் மனது பிறரை அன்பு கூரும், பிறர் தவறுகளை மன்னிக்கும், பிறர் துயர் கண்டு இரங்கும். அனைத்து நற்செயல்களின் ஊற்றிடம் தூய்மையான மனது. இதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தவர்கள், அடுத்த தலைமுறையை அதற்கேற்றாற்போல் தயாரிப்பார்கள்.

இதனால்தான், நாம் வரலாற்றைக் கூர்ந்துப் பார்த்தோமானால்,  எப்போதெல்லாம் நீதி நியாயம் ஒடுக்கப்படுகின்றதோ, தார்மீக நெறிமுறைகள் குறைவுபடுகின்றனவோ அப்போதெல்லாம்  ஒரு சீர்த்திருத்தவாதி சமூகத்தில் தோன்றிய வண்ணமே இருப்பார். அவர்களின் குரலுக்கு நாம் செவிமடுக்கிறோமா என்பது அடுத்த கேள்வி.

வீட்டைச் சுத்தம் செய்வது போல் நம் மனதையும் அடிக்கொருமுறை சுத்தம் செய்யக் கோரப்படுகிறோம், ஏனெனில், நம் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்து நம் வாழ்க்கையை நடத்துவது எதுவோ, அதனுடனான தொடர்பை நாம் தொலைத்து வருகிறோம். முதலில், இயற்கையுடனான நம் பிணைப்பு இந்த நவீன உலகில் அறுந்துவிட்டது. அடுத்து, சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியில் குடும்பங்களை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிய நிலை. வேலை வேலை என்று ஓடி, சரியான நேரத்தில் உணவுண்ணாமல் உடம்பைக் கெடுத்துக் கொள்கிறோம். வயிறு சுத்தமாக இல்லையென்றால் மனதளவில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனால்தான் மன அழுத்தம், மனச் சோர்வு உள்ளிட்டவைகள் ஏற்படுகின்றன. எனவே, எவ்வளவுக்கெவ்வளவு சரியான நேரத்திற்கு நன்றாக சாப்பிடுகிறோமோ அதே அளவு நம் வாழ்வும் சிறப்பாக இருக்கும். இதையெல்லாம் கடைபிடித்தாலே நாம் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் ஆரோக்கியமானவராக இருக்க முடியும் என்பது உண்மையிலும் உண்மை.

உடலும் மனமும் பிரிக்க முடியாதவை. உடல் கண்ணுக்கு தெரியும் மனம், மனம் கண்ணுக்கு தெரியாத உடல் என்று கூறுவர். ஏனெனில், ஒன்றில் ஏற்படும் மாற்றம் மற்றொன்றில் பிரதிபலிக்கும். எனவே மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நிச்சயம் தொடர்புண்டு. நம் மனதில் ஏற்பட்ட மாற்றம், பிறகு வேதியியல் மாற்றமாக ஹார்மோன் சுரக்கப்படுகிறது. இந்த வேதியியல் மாற்றம் காரணமாக உடல் வேகமாக இயங்க தொடங்குகிறது. இதன் மூலம் மனதில் ஏற்படும் மாற்றமானது உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உணரமுடிகிறது.

மனம் என்பது நமது ஒவ்வொரு செல்லிலும் இருக்கிறது. நாம் மற்றவர்களை நேசிக்கும் மனமுடையவராக இருக்கு போது நமது செல்கள் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று நேசிக்கின்றன, ஒருங்கிணைந்து செயலாற்றுகின்றன. நாம் பிறரை வெறுப்பவராக மாறும்போது, நம் செல்களிலும் அதே மனநிலை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு செல்லும் மற்றொரு செல்லை வெறுக்கிறது. செல்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற மறுக்கிறது என்கிறது அறிவியல். ஆகவே, நாம் நற்சிந்தனைகளை வளர்த்துக்கொளும்போது, பிறரை நேசிப்பது, மன அழுத்தம் ஏற்படாதவாறு வாழ்க்கை சூழலை அமைத்துக் கொள்ளுதல்,  நோய்கள் குறித்தான பயத்தை விடுவது, நோய் குணமாகும் என்ற நம்பிக்கையோடு இருப்பது, நடந்ததை நினைத்து மீண்டும் மீண்டும் நினைத்து வருந்தாமல் இருப்பது போன்றவை இயல்பாகவே நம்மில் குடிகொள்ளும்.

ஆகவே, மனதை பாதிக்கும் செயல்களை தவிர்க்க முயல்வோம். அப்போது, உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும், தன் குணமாக்கும் ஆற்றலை புரிந்துகொள்ளும், மேலும், மனம் சமநிலையில் இருக்கும்.

மனிதன் உயர்வதற்கும் தாழ்வதற்கும் உள்ளம்தான் காரணம். நேர்மையான உள்ளம் கொண்டவன் நேரிய வழியில் செல்கின்றான், நற்பண்புகளையும் உயர்ந்த குணங்களையும் தன்னுள் வளர்த்துக் கொள்கின்றான். அதைத்தான் இயேசுவும், உள்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். உள்புறம் சுத்தமாக இருந்தால் வெளிப்புறம் தன்னிலையிலேயே சுத்தமாகிவிடும் எனத் தெரிவிக்கிறார். இயேசுவின் வார்த்தைகளுக்கு மீண்டுமொருமுறை செவிமடுக்க அழைப்புவிடுக்கிறோம்,

``பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன. அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா! உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்''

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 October 2024, 15:10