தேடுதல்

வெடிகுண்டு விபத்துக்களுக்கு நியாயம் கேட்டு போராட்டம் வெடிகுண்டு விபத்துக்களுக்கு நியாயம் கேட்டு போராட்டம்  (AFP or licensors)

இரத்தினபுரி ஆயர் : புதிய அரசு வழி புதிய நம்பிக்கை பிறந்துள்ளது

இலங்கையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்கள் குறித்த முழு விசாரணையும் இடம்பெறும் என புதிய அரசுத்தலைவர் உறுதியளித்திருப்பது நல்லதோர் அடையாளம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

2019 உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்கள் குறித்த முழு விசாரணையும் இடம்பெறும் என புதிய அரசுத்தலைவர் உறுதியளித்திருப்பது நல்லதொரு அடையாளம் எனவும், நீதிக்கான நம்பிக்கையுடன் வருங்காலத்தை உற்றுநோக்குவதற்கு இது உதவுகிறது எனவும் உரைத்தார் இரத்தினபுரி ஆயர் Peter Antony Wyman Croos.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி இலங்கையில் மூன்று கோவில்களும் மூன்று சொகுசு தங்கும் விடுதிகளும் வெடிகுண்டுகளால் தாக்கப்பட்டு 279 பேர் உயிரிழந்தது குறித்த விசாரணைகள் புதிய அரசுத்தலைவர் Anura Kumara Dissanayake அவர்களின் உத்தரவின்பேரில் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது குறித்து நம்பிக்கையை வெளியிட்ட ஆயர் குரூஸ் அவர்கள், நீதிக்கான இந்த முயற்சிகளுடன், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதார சக்தியை அதிகரிக்கவும், நாட்டு பொருளாதாரத்தை முன்னேற்றவும் புதிய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

நீண்டகால திட்டங்களில் கவனம் செலுத்தும் அதேவேளை, ஏழைமக்களின் வறுமையை உடனடியாகப் போக்க உதவும் குறுகியக் காலத்திட்டங்களையும் புதிய அரசு செயல்படுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார் இரத்தினபுரி ஆயர்.

வெடிகுண்டு தாக்குதல்கள் தொடர்புடைய அனைத்து விடயங்களும் ஆராயப்பட்டு அது குறித்த விசாரணை அறிக்கையும், நடவடிக்கைகளுக்கான பரிந்துரையும் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்ற இலங்கை வெளியுறவு அமைச்சர் Vijitha Herath அவர்கள், குற்றம் செய்தவர்கள் எவரும் சட்டத்திலிருந்து தப்ப முடியாது என தெரிவித்தார்.

வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளான மூன்று கோவில்களில் ஒன்றான நெகம்போ புனித செபஸ்தியார் கோவிலுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட புதிய அரசுத்தலைவர் அநுரா திஸ்நாயக்கே அவர்கள், வெடிகுண்டு தாக்குதல்கள் குறித்த முழு விசாரணைகளும் மீண்டும் துவக்கப்படும் என்று உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 October 2024, 14:53