மெக்சிகோவில் மனித உரிமை அருள்பணியாளர் கொலை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
மெக்சிகோவில் பூர்வீகக் குடிமக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிவந்த இயேசு சபை அருள்பணியாளர் Marcelo Perez சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அந்த அமைதி வீரருக்காக உலக ஆயர் மாமன்றக் கூட்டம் தன் செபங்களை சமர்ப்பித்தது.
மெக்சிகோவின் San Cristóbal de Las Casasலிலுள்ள Cuxtitali பங்குதளத்தில் பங்குகுருவாக செயலாற்றிவந்த அருள்பணி மர்ச்செல்லோ அவர்கள், அக்டோபர் 20ஆம் தேதி ஞாயிறு திருப்பலியை நிறைவுச் செய்துவிட்டு தன் இல்லத்திற்கு வாகனத்தில் செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பூர்வீக இனமக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிவருவதுடன், பல எதிர்ப்பு ஊர்வலங்களையும் வழி நடத்தியுள்ள இந்த இயேசு சபை அருள்பணியாளர், பலமுறை தன் உயிருக்கு போதைப்பொருள் கடத்துவோரிடமிருந்து அச்சுறுத்தல்களையும் பெற்றுள்ளார்.
உலக ஆயர் மாமன்றத்தில் மெக்சிகோவிலிருந்து பங்குபெறும் அருள்சகோதரி María de los Dolores Palencia Gómez உரைக்கையில், அருள்பணி மர்ச்செல்லோ அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஆயர் மாமன்றத்தில் பங்குபெறும் அனைவரும் செபித்ததாகவும், அகில உலக திருஅவையுடனும் மெக்சிகோ மக்களுடனும் அவர்கள் தங்கள் ஒருமைப்பாட்டை வெளியிட்டதாகவும் தெரிவித்தார்.
அமைதியின் வீரராக செயல்பட்ட அருள்பணி மர்செல்லோ அவர்கள், மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் மக்கள் கலந்துரையாடல்களில் பங்குபெறவும், நீதிக்குமான உரிமை பெறவும் தொடர்ந்து உழைத்துவந்தார் என்றார் அருள்சகோதரி மரியா.
அருள்பணி மர்ச்செல்லோ பணிபுரிந்துவந்த மெக்சிகோவின் Chiapas பகுதி, போதைப்பொருள் கடத்தல், ஏழ்மை, வன்முறை, குழுக்களிடையே மோதல், ஆள்கடத்தல் ஆகியவைகளால் பெருமளவில் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்