தேடுதல்

உக்ரைன் மக்கள் உக்ரைன் மக்கள்  (AFP or licensors)

உக்ரைன் மக்களின் மறுவாழ்விற்காக உழைக்கும் அமைப்புக்கள்

1991 ஆம் ஆண்டு முதல் உக்ரைனில் பணியாற்றி வரும் சலேசிய சபையானது, உக்ரைனின் Lviv, Vynnyky, Kiev மற்றும் Dnipro ஆகிய இடங்களில் உள்ள அமைப்புக்களுடன், நாட்டின் கிழக்குப் பகுதிகளில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இத்தாலிய காரித்தாஸ் அமைப்பு மற்றும் வளர்ச்சி மேம்பாட்டிற்கான இத்தாலிய நிறுவனம் இணைந்து பல பயிற்சிகளையும், வேலை வாய்ப்புக்களையும் அதனால் கிடைக்கும் நிதி உதவிகொண்டு சில நலவாழ்வு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

S.U.P.E.R. எனப்படும் (Support Ukrainian Population for Emergency and Rehabilitation) உக்ரைன் மக்களுக்கான அவசரநிலை மறுவாழ்வு திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கும் திட்டமானது இத்தாலி, உக்ரைன், ஸ்பேஸ், போல்தவா, காமியன்ஸ்கே, கார்கீவ் பகுதிகளின் காரித்தாஸ் அமைப்பினர் மற்றும் சலேசிய சபையினர் ஆகியோரால் நடத்தப்படுகின்றது.

உக்ரைன் மக்களுக்கான மறுவாழ்வு நிதியாக 19 இலட்சம் யூரோக்களானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்தப்பட்ட நிலையில், போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவைப்படும் அவசரநிலை உதவி, நலவாழ்வு, கல்வி மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்ட 14 திட்டங்களின் வழியாக 20,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு AICS எனப்படும் வளர்ச்சி மேம்பாட்டிற்கான இத்தாலிய நிறுவனம் காரித்தாஸ் அமைப்புடன் இணைந்து உதவி வருகின்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இவ்வமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமையல் கலைக்கான பயிற்சியில் உள்நாட்டில் புலம்பெயர்ந்த 60 இளைஞர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். பல்வேறு சமையல் கலை பயிற்சிகளைப் பெற்ற அவர்களில் பலர் வேலைவாய்ப்புக்களையும், நிரந்தர வேலை பெறுவதற்கான பயிற்சிநிலை பணியாளர்களுக்கான வேலைவாய்ப்புக்களையும் பெற்று வருகின்றனர்.

1991 ஆம் ஆண்டு முதல் உக்ரைனில் பணியாற்றி வரும் சலேசிய சபையானது, உக்ரைனின் Lviv, Vynnyky, Kiev மற்றும் Dnipro ஆகிய இடங்களில் உள்ள அமைப்புக்களுடன், நாட்டின் கிழக்குப் பகுதிகளில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. அவர்களின் முன்முயற்சிகளில், 70 பாதிக்கப்பட்டக் குழந்தைகளைக் கொண்ட "போக்ரோவா" குடும்ப இல்லம், 200 மாணவர்களைக் கொண்ட ஒரு தொழிற்கல்வி பள்ளி மற்றும் 450 மாணவர்களைக் கொண்ட உயர்நிலைப் பள்ளி ஆகியவையும் அடங்கும்.

மேற்கு உக்ரைனில் உள்ள மிகப்பெரிய உட்புற விளையாட்டு வளாகமான "அரேனா போஸ்கோ" விளையாட்டு அரங்கமும் சலேசிய சபையினரால் நடத்தப்படுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2024, 16:18