புனித சவேரியார் திருவுடல் மக்களின் பார்வைக்கென வைக்கப்பட்டுள்ளது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
16ஆம் நூற்றாண்டின் இஸ்பானிய மறைபோதகர் புனித பிரான்சிஸ் சவேரியாரின் திருவுடல் மக்களின் பார்வைக்கென கீழே இறக்கி வைக்கப்பட்டுள்ள முதல் நாள் கொண்டாட்டங்களில் பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
உலக மரபுரிமைச் சொத்தாக ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கோவாவின் பாம் ஜீசஸ் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ள புனித பிரான்சிஸ் சவேரியாரின் உடல் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கீழே இறக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கென வைக்கப்படும் நிகழ்வில் நவம்பர் 21, வியாழக்கிழமையன்று 12,000க்கும் மேற்பட்ட விசுவாசிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஆன்மீக நிகழ்வுக்கான தலைப்பாக ‘இயேசுவின் நற்செய்தியின் தூதுவர்கள் நாம்’ என்பது எடுக்கப்பட்டுள்ளதைப் பற்றிக் குறிப்பிட்ட கோவா கர்தினால் Filipe Neri Ferrão அவர்கள், தன் வாழ்நாளில் இயேசுவின் நற்செய்தியை பரப்ப புனித பிரான்சிஸ் சேவியர் உழைத்ததுபோல் நாமும் உழைக்கவேண்டும் என அழைப்புவிடுத்தார்.
ஜப்பானுக்கு அருகிலுள்ள சன்சியான் தீவிலிருந்து மலுக்கா வழியாக கொண்டுவரப்பட்ட புனித பிரான்சிஸ் சவேரியாரின் உடல் கடந்த நான்கு நூற்றாண்டுகளாக அழியாமல் இருந்துவருகிறது.
1552ஆம் ஆண்டு ஜப்பான் அருகில் உள்ள தீவில் அடக்கம் செய்யப்பட்டு அதற்கு அடுத்த ஆண்டு ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்காக தோண்டப்பட்டபோது அது அழியாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கோவாவில் வைக்கப்பட்டிருக்கும் இந்த உடல் 1782ஆம் ஆண்டிலிருந்து, அதாவது அவர் இறந்து 230 ஆண்டுகளுக்குப்பின் முதன் முதலாக மக்களின் பார்வைக்கென திறந்து வைக்கப்பட்டது.
நவம்பர் 21ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த புனித உடல், 45 நாட்களுக்கு அதாவது ஜனவரி 5ஆம் தேதிவரை வைக்கப்படுகின்றது.
2014ஆம் ஆண்டு இது திறந்து வைக்கப்பட்டபோது 55 இலட்சம் பேர் இதனை தரிசிக்க வந்ததாகவும், இவ்வாண்டு இவ்வெண்ணிக்கை 80 இலட்சமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தலத்திருஅவை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்