தேடுதல்

அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவர் Timothy Broglio அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவர் Timothy Broglio   (Credits: Senior Airman Kristin High)

உண்மை, நீதி, அமைதியைத் தேட ஒன்றிணைந்து செயல்படுவோம்

பேராயர் திமோதி புரோக்லியோ : ஒருவரையொருவர் கருணையுடனும், மரியாதையுடனும், நாகரிகத்துடனும் நடத்த வேண்டிய கடமை அமெரிக்க திருஅவைக்கு உள்ளது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் வத்திக்கான்

கிறிஸ்தவர்கள் என்ற முறையிலும், அமெரிக்கர்கள் என்ற முறையிலும், பொதுக் கொள்கை விவகாரங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பதில் நாங்கள்  உடன்படவில்லை என்றாலும் கூட, ஒருவரையொருவர் கருணையுடனும், மரியாதையுடனும், நாகரிகத்துடனும் நடத்த வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது  என்று  கூறினார் அமெரிக்க கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர், பேராயர்  திமோதி புரோக்லியோ.

அமெரிக்க அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், மற்றும் அனைத்து நிலைகளிலும்  அமெரிக்க மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்காகவும் அமெரிக்க ஆயர் அனைவரின்  ஜெபங்களையும் வெளிப்படுத்தினார் பேராயர் புரோக்லியோ.

கத்தோலிக்க திருஅவை எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்திருக்கவில்லை என்றும், பொதுநலனை மேம்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்க ஆயர்கள் எதிர்பார்ப்பதாகவும் கூறினார் அமெரிக்க கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர்.

கருக்கலைப்புக்கான உரிமையை  கட்டுப்படுத்த அல்லது விரிவுபடுத்துவதற்கான மாநில அரசியலமைப்பு திருத்தங்களுக்கு 10 மாநிலங்களில் வசிப்பவர்கள் வாக்களித்துள்ள நிலையில், இன்னும்  பிறக்காத குழந்தைகள் உட்பட அனைத்து மக்களின் உரிமைகளையும் நிலைநிறுத்த அமெரிக்க ஆயர்கள் முயற்சி செய்வார்கள்  என்றும் பேராயர் புரோக்லியோ அவர்கள் கூறினார்.

இதற்கிடையே  வாஷிங்டன் பேராயர் ,கர்தினால் Wilton Gregory அவர்கள்  அமெரிக்க  தேசம் நிர்வாகத்தில் ஒரு புதிய திசையை எடுக்கத் தயாராகி வரும் நிலையில், நம்பிக்கை மற்றும் நல்லெண்ணம் கொண்ட மக்களாக, அனைவரும்  வீடுகளிலும்,  சமூகங்களிலும்,  தேசத்திலும் உண்மை, நீதி மற்றும் அமைதியைத் தேட ஒன்றிணைந்து செயல்பட அழைக்கப்பட்டுள்ளதை நினைவில் கொள்ளவேண்டும் என்றும் தனது செய்தியில் வெளியிட்டுள்ளார்.

இன்று சிலர் அமெரிக்க தேர்தல்களின் முடிவுகளால் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள் என்றும், மற்றவர்கள்  எதிர்காலம் குறித்த கவலையை அனுபவித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் கர்தினால்.

மேலும்,  முன்னோக்கிச் செல்லும் பாதை என்பது, ஒருவருக்கொருவர் மரியாதை செய்வதிலும்,  பொறுமை, கருணை, நம்பிக்கை மற்றும் ஜெபங்களை  இலவசமாக பகிர்ந்துகொள்வதிலும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் பேராயர் Wilton Gregory.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2024, 16:50