தேடுதல்

இயேசுவின் வார்த்தைகளை கைகளில் தாங்கி..... இயேசுவின் வார்த்தைகளை கைகளில் தாங்கி.....  (AFP or licensors)

விடை தேடும் வினாக்கள் – திட்டமிட்டுச் செயலாற்றல்

செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும் என்கிறார் வள்ளுவப்பெருந்தகை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, எதிரிகளோடு போரிட்டு எத்தகைய வழிமுறைகளைக் கையாண்டு வெற்றியைப் பெறவேண்டும் என்பது குறித்த இயேசுவின் இரு கேள்விகளை இன்றைய நம் ஒலிபரப்பில் நோக்குவோம். முதலில் வலியவரைக் கட்டினாலன்றி எப்படி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களைக் கொள்ளையிட முடியும்? (மத் 12:29) என்று இயேசு கேட்கும் கேள்வி குறித்து நோக்குவோம். எதையும் திட்டமிட்டுச் செய்யவேண்டும், முன்மதியுடன் செய்யவேண்டும் என இந்த உரையாடல் வழி இயேசு கூறவருகிறார் என எடுத்துக்கொண்டால், நமக்கு இன்னுமொரு சிறு உவமையும் இங்கு நினைவுக்கு வருகிறது. அதையும் இங்கு நோக்கிவிடுவோம்.  

“வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா? (லூக் 14:31)

இங்கு நாம், வெல்ல விரும்பும் இருவிதமான மனிதர்களைப் பற்றிப் பார்க்கிறோம். ஒருவர் அடக்க முடிந்தவராக இருக்கிறார். அதாவது, நம்மால் அவரை அடக்க முடியும். அவ்வாறு செய்தபின்னரே, அவரின் வீட்டினுள் நுழைந்து நமக்குத் தேவையானதை எடுக்க முடியும். இரண்டாவது, எதிரி நம்மைவிட படைபலம் உடையவர். அப்போது நாம் செய்யவேண்டியதெல்லாம், சமாதனமாகப் போவதுதான்.

இங்கு நமக்கு திருவள்ளுவரின் குறள் ஒன்று நினைவுக்கு வருகிறது.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல், என்ற குறள்தான் அது.

செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும் என்கிறார் வள்ளுவப்பெருந்தகை.

இன்று நாம் நோக்கவுள்ள இயேசுவின் வாழ்வு நிகழ்ச்சியில் இதனை பொருத்திப் பார்ப்போம். சென்ற இடமெல்லாம் அதிசயங்கள், புதுமைகள் செய்தவரை பல விமர்சனங்களுக்குத் தள்ளுகின்றார்கள். ஆனால் இயேசு எந்தவித விமர்சனங்களுக்கும் அடிமையாகவில்லை. புதுமைகள் செய்யும் போது யார் இந்த வல்லமையைக் கொடுத்தது என்றும், அதிகாரத்தோடு போதித்த போது இவன் பெற்றோார் யார் என நமக்குத் தெரியாதா? என்றும், நோய்களைக் குணமாக்கும் போது எந்த அதிகாரத்தால் இவ்வாறு செய்கின்றாய் என்றும், பேய்களை ஓட்டும் போது எப்படி இந்த வல்லமை? என்றும் விமர்சனங்கள் எழுப்புகின்றார்கள்.

‘பேய்களின் தலைவன் பெயல்செபுலைக்கொண்டே பேய்களை ஓட்டுகிறான்’ என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். இயேசுவின் பதிலோ, அவர்மீதுள்ள குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஓர் அரசன் தன்னுடைய வீரர்களைப் பயன்படுத்தி தன்னுடைய அரசை விரிவுபடுத்தத்தான் முயற்சி எடுப்பான். தன்னுடைய வீரர்களைக் கொல்வது தன்னையே அழிப்பதற்கு சமம் என்பதைப் புரியாதவன் எப்படி அரசனாக இருக்க முடியும்?. அப்படி இருக்கும்போது பேய்களின் அரசை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிற பெயல்செபூலைக்கொண்டு எப்படி அவனுக்கு உதவிசெய்கிற தீய ஆவிகளை அழிக்க முடியும்? என்பதுதான் இயேசுவின் கேள்வி.

"தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது" என்பதை இயேசு ஆணித்தரமாக வெளியிடுகிறார். முதலில் வலியவனைக் கட்டினால் தான் அவன் வீட்டிலிருந்து பொருட்களைக் கொள்ளையிட முடியும். சாத்தானின் தலைவன் பெயல்சபூல் வலிமையானவன். அந்த வலியவனை நான் கட்டிவிட்டேன் என சூசகமாக இயேசு தெரிவிக்கிறார். சாத்தானின் தலைவனைக் கொண்டு நான் காரியம் சாதிக்கவில்லை. அவனை அடக்கி வைத்துவிட்டு, நான் காரியம் சாதிக்கிறேன். அதாவது, அந்த வலியவனை விட நான் வலியவன் என்கிறார் இயேசு.

இயேசு பேய் ஓட்டும் நிகழ்வுகளை நாம் ஆழமாக பார்த்தோமானால், அவர் சடங்குகளின் முடிவில் பேயை விரட்டவில்லை, மாறாக, அதிகாரத்தின் குரலில் அதை விரட்டினார். காரணம் அவர் ஏற்கனவே பேய்களின் தலைவனைக் கட்டி விட்டார். எப்போது அவர் பேய்களின் தலைவனைக் கட்டினார் என்றால், அது பாலை நிலத்தில் அவருக்கு ஏற்பட்ட சோதனைகளை வென்றபோது நிகழ்ந்தது. அன்றே அவர் சாத்தான் என்ற வலியவனைக் கட்டியதால்தான், இன்று அது நமக்கு ஒரு பாடமாகிறது. இயேசுவின் வலிமையின் துணைகொண்டு நம் உள்மன சாத்தனை நாம் கட்டவேண்டும் என நமக்குக் கற்பிக்கப்படுகிறது. மேலும், இறையாட்சியைப் போதிக்க வந்த இயேசுவே இறையாட்சியிலிருந்து பிளவுபட்டவராக தீய ஆவியால் வழிநடத்தப்பட்டால் இறையாட்சி நிலைக்காது என்றும், தாம் செய்வது கடவுளின் கரத்தால் என்றும், தம் செயல்கள் வழியாக இறையாட்சி இங்கே வருகிறது என்றும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறார் இயேசு.

நன்மைத்தனத்திற்கு எதிராகச் செல்லும் தீயோர், தங்களுக்குள்ளாக சண்டையிட்டுக் கொள்வதை நிச்சயம் விரும்ப மாட்டார்கள். குழப்பம் விளைவிப்பதும், மற்றவர்களுக்குள்ளாக சண்டையைத் தூண்டிவிட்டு குளிர்காய்வதும் தான் அவர்கள் வேலை. அனைவரும் கெட்டது செய்வார்களே ஒழிய, யாரும் நல்லது செய்ய முன்வர மாட்டார்கள். அப்படி செய்தால், அழியப்போவது தாங்கள் தான் என்பதை அவர்கள் அறியாதவர் அல்ல. அப்படி இருக்கும்போது, பெயல்செபூலே தீய ஆவிகளை அழிக்க துணைபோவாரா?

வாழ்க்கை என்பது நன்மைக்கும், தீமைக்கும் இடையேயான போராட்டம். பலர் வாழ்வில் இதனைப் பார்க்கிறோம். பலர் இதில் மடிந்துதான் வெற்றி வாகைச் சூடியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக, இயேசு சபைத்துறவி ஸ்டேன் சாமி அவர்கள், பழங்குடி மக்களுக்காக போரட்டம் நடத்திய போது, அரசியலில் குதிக்க இத்தகைய மந்திர வேலைகளைச் செய்கின்றார் என்று சிலர் விமர்சனம் செய்தது உண்மை. ஆனால், உண்மையில் நடந்தது என்ன? இறுதி வரை போராடி சிறையில் அடைபட்டு உயிர் நீத்தார். எல்சல்வதோர் நாட்டு பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்களின் வாழ்வும் இத்தகையதே. எதிர்ப்புக்களைக் கண்டு அஞ்சாமல் துணிந்து போராடவேண்டும் என இவர்களைப் போன்ற கிறிஸ்தவர்களுக்கு தைரியம் எங்கிருந்து வந்தது? போராட்டங்களையும், தடைகளையும் தாண்டிச்செல்வதில்தான் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது என்பதை நமக்குக் கற்றுத் தந்த இயேசுவிடமிருந்து அது வந்தது.

அன்பு நெஞ்சங்களே, பெரும்படையுடன் வரும் அரசனை எதிர்க்க சிறு படை வைத்திருக்கும் எந்த அரசனும் துணியமாட்டான் என ஒரு சிறு உவமை வழியாக இயேசு கூறுவதைப் பற்றி இங்கு காண்போம். இருபதாயிரம் பேருடன் வரும் எதிரியை பத்தாயிரம் பேரைக்கொண்டு எதிர்க்க முடியாது என்று சிந்திக்கும் அரசன், தம் தூதரை அனுப்பி அமைதிக்கு வழிகோலமாட்டாரா என கேள்வி கேட்கின்றார் இயேசு.

முன்மதி என்பது இறையாட்சியின் ஒரு மதிப்பீடு. இறையாட்சிக்கு உட்படுவோர் அந்தப் பண்பைப் பெற்றிருக்க வேண்டும். முன்மதி என்பது விழிப்புணர்வு, அறிவாற்றல், ஞானம், எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை, திட்டமிடுதல் போன்றவற்றின் கலவை. எப்போதும் தயாராக இருக்கும் நேர்த்தி.

இயேசுவின் சீடர்கள் முன்மதி உடையோராய் விளங்க வேண்டும் என்பதற்காகவே பத்து கன்னியர்களின் உவமையை இயேசு சொன்னார். அறிவிலிகள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள். ஆனால், போதுமான எண்ணெய் எடுக்கவில்லை. பத்துக் கன்னியர்களில் முன்தயாரிப்போடும், அறிவுத் தெளிவோடும், முன்மதியோடும் செயல்பட்ட ஐந்து கன்னியர்கள் மட்டுமே மணமகனைக் காணும் பேறு பெறுகிறார்கள். ஆனால் அறிவிலிகளோ அவ்வாய்ப்பினை இழந்து விடுகிறார்கள். ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களைப் பணிக்கென அனுப்புகிறபோதுகூட, ”ஓநாய்களிடையே ஆடுகளைப் போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்பைப்போல முன்மதியுடையவர்களாக இருங்கள்” என்கிறார் (மத் 10:16). வஞ்சகமும், பொய்யும் நிறைந்த இவ்வுலகில் இயேசுவின் சீடர்களாய் இருக்கவேண்டும் என்றால் முன்முதி என்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது. இங்கு இயேசு கூறும் சிறு உவமையிலும் இதைத்தான் பார்க்கிறோம். வெற்றிபெற முடியாதென்றால், முன்மதியோடு, சமாதானக் கொடியைத் தூக்க வேண்டும். திட்டமிடல் என்பது வெற்றிக்கான ஒரு சிறந்த முதலீடு, எதிர்பாரா சவால்களை  சந்திக்க தயார்படுத்திக் கொள்வது,  கனவை நனவாக்குவதற்கான ஒரு  தொடக்கம்.   திட்டமிடல் மூலம் உழைப்பு வீணாவது தவிர்க்கப்படும். முயற்சிக்கு உண்டான  அதிகபட்ச பலன் கிடைக்கும்.

சிந்தித்துப் பார்த்து திட்டமிடல் என்பது, இருக்கும் இடத்தில்  ஆரம்பித்து அடைய வேண்டிய இடத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு வரைபடம்.   முதலில் குறிக்கோளைக் கட்டம் கட்டமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.   முதன்மையான  குறிக்கோள் உயிர் மூச்சுப் போல ஒவ்வொரு செயலிலும் இழையோடிக்  கொண்டிருக்க வேண்டும்.  திட்டத்தின் ஒவ்வொரு பகுதியும் அந்த தலைமைக்  குறிக்கோளை அடையும் படிக்கற்களாக அமைய வேண்டும். பெரும் எதிரியை எதிர்த்துப் போராட முனைபவன் தன் படைபலனை முதலில் சிந்தித்துப் பார்ப்பான். மிகச்சிறந்த வீரனும், தன்னம்பிக்கையுடவனுமாக இருந்தால் துணிந்து போராடி வெற்றியும் பெறுவான். ‘‘மாபெரும் படை கொண்ட முகாலையர்களை என்னால் வெல்ல முடியுமா?’’ என்று சிவாஜி கேட்டேபாது, அவரது தாயும், சுவாமி இராமதாசரும் சொன்ன வார்த்தை, ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’ என்பதுதான்.

சிவாஜியின் கோட்டையின் முன் முகலாயர் படை பெரும் கடலென நின்றபோது, போரைத் தவிர்க்க விரும்பினால், சிவாஜி நிராயுதபாணியாக பேச்சு வார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுத்தார் தளபதி அப்சல்கான். தனிமையில் சென்று, எதிரியைக் கொன்று, தலைவன் இல்லாத படைகளைப் மராட்டிய சேனை பந்தாட வழிவகுத்தார் சத்ரபதி  சிவாஜி. 1680ஆம் ஆண்டு மரணமடையும் வரையில், சிவாஜியைத் தோல்வி என்பது நெருங்கவே இல்லை. ஆனால், எல்லார் வாழ்விலும் அது நடப்பதில்லை. தன்னைவிட பெரிய படையுடன் வருபவரை தோற்கடிக்கவே முடியாது என்பது திண்ணமாகத் தெரிந்தால், சமாதானமாகப் போவதுதான் உத்தமம். ஏனெனில் அது மன்னனின் புகழுக்கு இழுக்காக இருக்கலாம், ஆனால் மக்களை அழிவிலிருந்து காப்பாற்ற உதவும். உண்மையான மன்னர் அதற்குத்தான் முதலிடம் கொடுப்பார்.

இங்கு இயேசு கூறும் முன்மதியும் இதுதான். வலியவனை முதலில் கட்டு. அதன்பின் நீ சுதந்திரமாக செயல்பட முடியும்.  பெரும்படையுடன் வரும் மன்னரை உன்னால் வெல்லமுடியாது என சிந்திக்கும்போது, அழிவைத் தவிர்க்கும்பொருட்டு சமாதானமாகப் போக முயல்வது உலக வழக்கு. ஆனால், ஒரு நாளும் தீயவனோடு சமாதனமாகப் போகவோ, உடன்பாடு காணவோ இயேசு கற்பிக்கவேயில்லை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2024, 16:14