தேடுதல்

சிறப்பு செய்யப்படும் மொர்த்தக்காய் சிறப்பு செய்யப்படும் மொர்த்தக்காய்  

தடம் தந்த தகைமை : மொர்தக்காய்க்கு மன்னர் சிறப்புச் செய்தல்!

மொர்தக்காயை புரவியின் மீது அமர்த்தி, நகர் வீதிகளில் வலம் வரச் செய்து, “இதுவே அரசர் தாம் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்குச் செய்யும் சிறப்பாகும்” என்று அவருக்கு முன்பாய் அறிவிக்கப்படுமாறு செய்தான் ஆமான்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தன்னைத்தான் மன்னர் சிறப்புச் செய்ய விரும்புகிறார் என்று உள்ளத்தில் நினைத்துக்கொண்ட ஆமான் மன்னரை நோக்கி, “மன்னர் தாம் மரியாதை செய்ய விரும்பும் ஒருவருக்கென, மன்னர் அணிகின்ற ஆடைகளும், அமர்கின்ற புரவியும், தலையில் சூடும் மகுடமும் கொண்டுவரப்பட வேண்டும். அந்த ஆடைகளும் புரவியும் அரசரின் தலைமை அதிகாரிகளுள் சிறந்த உயர்குடிமகன் ஒருவரிடம் ஒப்படைக்கப்படவேண்டும். மன்னர் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்கு அவர் அந்த ஆடைகளை அணிவித்து, புரவியின்மீது அமர்த்தி, அவரை நகர் வீதிகளில் வலம் வரச் செய்து, ‛இதுவே அரசர் தாம் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்குச் செய்யும் சிறப்பாகும்!’ என, அவருக்கு முன்னால் அறிவிக்கவேண்டும்” என்று பதிலளித்தான். உடனே மன்னர் ஆமானை நோக்கி, “ஆடைகளையும் புரவியையும் விரைவாய்க் கொணர்ந்து நீ கூறியவாறே அரசவாயிலில் நிற்கும் யூதராகிய மொர்தக்காய்க்குச் செய், நீ கூறியவற்றில் எதையும் விட்டுவிடாதே” என்று கூறினார். அவ்வாறே, ஆமான் ஆடைகளையும் புரவியையும் கொணர்ந்து, மொர்தக்காய்க்கு அந்த ஆடைகளை உடுத்துவித்து, புரவியின் மீது அமர்த்தி, நகர் வீதிகளில் வலம் வரச் செய்து, “இதுவே அரசர் தாம் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்குச் செய்யும் சிறப்பாகும்” என்று அவருக்கு முன்பாய் அறிவிக்கப்படுமாறு செய்தான்.

இதற்குப்பின் மொர்தக்காய் அரச வாயிலுக்குச் சென்றார். ஆமானோ புலம்பிக்கொண்டு, தன் தலைக்கு முக்காடிட்டுத் தன் வீட்டிற்கு விரைந்தான். ஆமான் தன் மனைவி செரேசு, நண்பர்கள் அனைவரிடமும் தனக்கு நேரிட்ட அனைத்தையும் கூறினான். உடனே அந்த ஆலோசகர்களும் அவன் மனைவி செரேசும் அவனை நோக்கி, “யூத குலத்தினனாகிய மொர்தக்காய்க்கு முன்பாக நீ வீழ்ச்சியுறத் தொடங்கிவிட்டாய். நீ அவனை எதிர்த்து நிற்க மாட்டாய்; அவனுக்கு முன்பாய் முற்றிலும் வீழ்வது திண்ணம்” என்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 November 2024, 12:10