தடம் தந்த தகைமை : சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு......
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ “முட்டாளே” என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார். “அறிவிலியே” என்பவர் எரி நரகத்துக்கு ஆளாவார் (மத் 5:22) என்கிறார் இயேசு.
மனிதம் மிக மதிப்பிற்குரியது. அதை மாண்போடு பேண வேண்டிய கடமை எல்லாருக்கும் உரியது. இயேசு சுட்டும் சினம் சிறிதான கோபமோ, முறைப்போ, முணுமுணுப்போ, சிணுங்கலோ அல்ல. இது சாதாரண கோப உணர்வைப் புறந்தள்ளி வெறுப்பை உமிழ்வது. இத்தகு வெறுப்புமூட்டும் சின உணர்வே கொலை புரியத் தூண்டுகிறது. இச்சினம் கொலை
செய்வதைவிடக் குறைந்ததல்ல என்கிறார் கி.பி. 90-ல் வாழ்ந்த எலியேசார் என்ற யூதப் போதகர்.
இக்கொடுஞ்சினமே பிறரைத் தீர்ப்பிடுகிறது. முட்டாள் என்றும் அறிவிலி என்றும் சொல்லி பிறரது மாண்பை மட்டம் தட்டுகின்றது. ஏனெனில் கடுஞ்சொல் ஒவ்வொன்றும் காயப்படுத்துவதோடன்றி ஒருவரது வாழ்வையே காணாமல் போகச் செய்கின்றது. “தீயினாற் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே நாவினாற் சுட்ட வடு” என்ற வள்ளுவப்
பெருந்தகையின் குறள்மொழியையும் இதயத்துள் குறிப்போம். சினமும் சீற்றமும் நம் மனதைக் கனமாக்கும்.
இறைவா! சினம் சிறிது வேண்டும். அதைச் சீற்றமாய் வெளிப்படுத்தாமல் வாழ வழிகாட்டும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்