தடம் தந்த தகைமை - ஏன் ஐயம் கொண்டாய்?
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய் (மத் 14:31) என இயேசு பேதுருவிடம் கேட்டார்.
பேதுரு ஒரு களங்கமில்லாச் சீடர். தன் மனதில் பட்டதைப் பட்டெனச் சொல்லும் பண்பு கொண்டவர். இயேசுதாம் கடல்மீது நடக்கிறார் எனத் தெரிந்ததும் தானும் நடக்க அனுமதி கேட்டு நடக்கத் தொடங்கினார். அவ்வாறு நடக்கும் வேளையில் இரு எண்ண அலைகள் அவரது இதயத்துள் உயரமாய் எழுந்தன. 1) மீண்டும் சுழற்றிய காற்று அலை 2) வருபவர் இயேசுதானா என்ற ஐயம் கவ்விய மாற்று அலை. இரண்டும் சேர்ந்து பேதுருவை மூழ்கடிக்க முனைந்தன.
வாழ்க்கை வெற்றி தோல்விகளால் நிரப்பப்பட்ட புத்தகம். பல நேரங்களில் நாம் வெற்றியை எளிதாக ஏற்றாலும், தோல்வி, ஏமாற்றம், எதிர்ப்பு, பழிப்பு, அவமதிப்பு, இழப்பு, பிரிவு, துரோகம் என்பவை எதிர்படுகையில் விரக்திக் கடலில் வீழ்ந்து போகிறோம். ‘எல்லாம் முடிந்துவிட்டது, எனக்கென யாருமில்லை, இனி வாழ்வு கேள்விதான்’ என்றெல்லாம் எண்ணிக்கொள்கிறோம். எவைதாம் நிகழினும் கைதூக்க ஒருவர் காத்து நிற்கிறார் என்பதை நினைக்க மறக்கிறோம். தன்னில், பிறரில் நம்பிக்கை கொள்ளாதவரே நாத்திகர். சந்தேகத்தைப் போல் விரைவாய் வளரும் விருட்சம் வேறில்லை.
இறைவா! என்னுள் வாழும் உம்மை அவ்வப்போது அல்ல, எப்போதும் நம்பி பணிப்பயணம் தொடர பலம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்