தடம் தந்த தகைமை - பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும்...
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று, (மத் 5:28) என்றார் இயேசு.
ஆணாதிக்கத்தின் உச்சத்தில் புரண்டு கொண்டிருந்தது யூத சமூகம். பெண்களைத் தூய்மையற்றவர்களாகவும் தீட்டானவர்களாகவும் கருதியது. பெண் பிறப்பைப் பாவப்பிறப்பாக, இழிபிறப்பாகப் பார்த்தது. பெண், குழந்தை பெறும் கருவியேயன்றி வேறு எப்பொறுப்புக்கும் தகுதியில்லாதவர் எனத் தரம் தாழ்த்தி வைத்தது. ஆணும் பெண்ணும் சேர்ந்து தவறிழைத்தாலும் பெண்ணே தண்டிக்கப்படும் அவலம் அங்கே ஆதிக்கம் செலுத்தியது. அதற்குச் சட்டங்களும் துணைபோயின என்பதுதான் துயரச் செய்தி.
ஓர் ஆண் ஒரு பெண்ணை எதுவும் செய்யலாம், எப்படியும் நடத்தலாம் என்ற எதேச்சதிகார எண்ணம் உலா வந்தக் காலச்சூழலில் இயேசுவின் விபசாரம் பற்றிய விடுதலைப் போதனை ஆணாதிக்கத்தின் மீது விழுந்த சம்மட்டி அடி. பெண் இறைஞானத்தின் மறுவடிவம். அவள் சமூகத்தில் சமமாக நடத்தப்படவில்லையெனில் அதன் சரித்திரப் பக்கங்கள் கறுப்பாக இருக்கும். பெண்ணை இழிவாக நடத்தும் செயல், சொல், பார்வை
எல்லாமே விபசாரத்தின் இதர வடிவங்களே. பெண் இல்லையேல் மண்ணுமில்லை, விண்ணுமில்லை, ஒன்றுமில்லை.
இறைவா! ஆணினம் அடக்கத் துடித்த பெண்ணினம் வழியாகவே உம் மீட்பு அரங்கேறியது, அரங்கேறிக்கொண்டிருக்கிறது. ஆண் என்ற மமதையை அடக்கி வாசிக்க அருள் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்