தடம் தந்த தகைமை – ஆகாசு அரசன் செலுத்திய எரிபலி
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஆகாசு எரிபலியும் உணவுப் படையலும் செலுத்தி, நீர்மப் படையலை வார்த்தான்; தனக்கென்று நல்லுறவுப் பலியின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மீது தெளித்தான். மேலும், அவன் ஆண்டவர் திருமுன் இருந்த வெண்கலப் பலிபீடத்தைக் கோவிலின் முன்புறமிருந்து அகற்றித் தன் பலிபீடத்திற்கும் ஆண்டவரின் இல்லத்திற்கும் இடையே வடபுறத்தில் வைத்தான். பிறகு, அரசன் ஆகாசு குரு உரியாவை நோக்கி. “பெரிய பலிபீடத்தின்மேல் காலை எரிபலியையும், மாலை உணவுப்படையலையும், அரசனின் எரிபலியையும், உணவுப் படையலையும், நாட்டு மக்கள் அனைவரின் எரிபலியையும் உணவுப் படையலையும் நீர்மப் படையலையும் செலுத்தி எரிபலிகளின் எல்லா இரத்தத்தையும் மற்றப் பலிகளின் எல்லா இரத்தத்தையும் அதன்மேல் தெளிப்பீர். வெண்கலப் பலிபீடம் திருவுளத்தை நான் அறிவதற்கென்று இருக்கட்டும்” என்றான். அரசன் ஆகாசு கட்டளையிட்டபடியே, அனைத்தையும் குரு உரியா செய்தார்.
அப்பொழுது, அரசன் ஆகாசு சக்கரத் தாங்கிகளைப் பிரித்துக் கொப்பரைகளை அவற்றினின்று அகற்றினான். வெண்கல நீர்த் தொட்டியைக் காளைகளினின்று அகற்றி, அதனைக் கல்தளத்தின்மீது வைத்தான். மேலும், அசீரிய மன்னனின் விருப்பத்திற்கிணங்க, ஆண்டவரின் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த அரியணை மேடையையும் வெளியிலிருந்த அரச நுழைவாயிலையும் அவன் அகற்றினான். ஆகாசு செய்த பிற செயல்கள், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன. ஆகாசு தன் மூதாதையரோடு துயில்கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் எசேக்கியா அரசர் ஆனார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்