கொரியாவில் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு
ஜெர்சிலின் டிக்ரோஸ் வத்திக்கான்
கொரியாவில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கொரிய கத்தோலிக்க ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் தனது ஆட்சியின் முதல் எதிரி தென் கொரியா என்று கூறியதிலிருந்து பதட்டங்கள் உருவாகியுள்ள சூழலில், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆயுத மோதல்களை கைவிட தென் மற்றும் வட கொரியாவில் உள்ள தலைவர்களுக்கு கொரிய கத்தோலிக்க ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொரிய தீபகற்பத்தின் வானம் இப்போது வெறுப்பின் இருண்ட மேகங்களால் சூழப்பட்டுள்ளது என்றும், இந்த இருண்ட மேகங்கள் ஆயுத மோதலின் பெருமழையாக மாறக்கூடும் என்ற அச்சத்திலும் கவலையிலும் மக்கள் இருக்கிறார்கள் என்றும் கொரிய ஆயர்களின் தேசிய நல்லிணக்கத்திற்கான சிறப்புக் குழு நவம்பர் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொரிய மக்கள் இயேசு அறிவித்த அமைதியின் அர்த்தம் மற்றும் படிப்பினைகளை மீண்டும் ஒருமுறை தியானிக்க வேண்டும் என்று ஆயர்கள் கேட்டுக்கொண்டதோடு, அதிகரித்து வரும் பதட்டச் சூழலை கொரிய கத்தோலிக்க திருஅவை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், கொரிய மண்ணில் ஆயுத மோதல்கள் ஏற்படாது என்ற உறுதியான நம்பிக்கையில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
நாட்டின் தென் மற்றும் வட பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் அமைதியாகவும் ஒன்றிப்புடனும் வாழவும், ஒருவர் மற்றவரை அடக்கியாள மோதல்களை பயன்படுத்துவதைவிட, ஒருவருக்கொருவருடனான நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்றும், வெறுப்பு மற்றும் மோதலின் தீய சுழற்சியை நாம் நிறுத்தி, தற்போதைய மோதல் சூழ்நிலையை மனிதாபிமான அடிப்படையில் தீர்க்க வேண்டும் என்றும் கொரிய ஆயர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஒரு வறண்ட வயலில், ஒரு சிறிய தீப்பொறி கூட ஒரு பெரிய நெருப்பாக பரவக்கூடும் என்பதால், மோதல்களைத் தவிர்க்குமாறு இரு நாடுகளின் தலைவர்களுக்கும் கொரிய ஆயர்கள் வேண்டுகோள் விடுப்பதாக இவ்வறிக்கை கூறுகிறது.
போரில் ஈடுபட்டுள்ள இரஷ்ய நாட்டிற்கு வடகொரிய படைகள் அனுப்பப்பட்டுள்ளது என்ற செய்தி மற்றும், உக்ரைனுக்கு தென் கொரிய அரசின் ஆயுத ஆதரவு குறித்து உலக நாடுகள் கவலை கொண்டுள்ளது என்று மேலும் அறிக்கை கூறுகிறது.
இரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும், மற்றும், இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் போர்கள், ஏழைகளுக்கும், பலவீனமானவர்களுக்கும் அதிக துன்பங்களை ஏற்படுத்துவதுடன், அந்நாட்டு மக்களுக்கு பெரும் சேதத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி வருவதை ஆயர்கள் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், அந்த அறிக்கையில் கொரிய மக்கள் இப்போது அமைதியை எதிர்பார்ப்பது கடினம் என்று நம்பிக்கையிழந்த நிலையில் உள்ளனர் என்றும், மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை விசுவசிக்கும் திருஅவை ஒருபோதும் நம்பிக்கையை இழப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளனர் ஆயர்கள்.
இவ்வாறு அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை, போரின் அச்சத்தை வெல்ல துணிவை அளிக்கிறது என்றும், மோதல் தருணங்களில் கூட அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் பாதையை தேர்வு செய்ய அனுமதிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஒரு காலத்தில் ஒன்றுபட்ட நாடாக இருந்த கொரியா 1945 இல் இரண்டாம் உலகப்போரின் முடிவுக்குப் பிறகு இரண்டாக பிரிக்கப்பட்டு, இன்றளவும் பிரிவினை தொடர்ந்து வருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்