தேடுதல்

டெல்லியில் காற்று மாசுபாடு டெல்லியில் காற்று மாசுபாடு   (ANSA)

காற்று மாசுபாட்டு நெறிமுறைகளுக்கு இந்திய தலத்திருஅவை ஆதரவு!

காற்று மாசுபாடு குறித்த இந்த வழிகாட்டுதல் மிகவும் தாமதமாக வந்தாலும், குழந்தைகள் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதால் இந்த நெறிமுறைகள் மிகவும் பாராட்டத்தக்கது அருள்பணியாளர் மரிய சார்லஸ்

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

குளிர்காலத்தில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையை எட்டியதை தொடர்ந்து, நவம்பர் 18 முதல் பள்ளிகளை ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்ற இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அரசுத் தலைவர்கள் எடுத்த முடிவை அருள்பணி மரிய சார்லஸ் அவர்கள் வரவேற்றுள்ளதாக யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மோசமடைந்து வரும் நச்சு புகை, உலக நலவாழ்வு அமைப்பு பரிந்துரைத்ததை விட 60 மடங்கு அதிகமாக அதிகரித்துள்ளது என்றும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தவிர அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நிறுத்தப்படும்  என்றும்  டெல்லி முதல்வர் அதிஷி நவம்பர் 17 அன்று  அறிக்கை ஒன்றில்  தெரிவித்துள்ளார்.

காற்று மாசுபாடு குறித்த இந்த வழிகாட்டுதல் மிகவும் தாமதமாக வந்தாலும், குழந்தைகள் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதால் இந்த நெறிமுறைகள்  மிகவும் பாராட்டத்தக்கது என்று இந்திய ஆயர் பேரவையின்  கல்வி மற்றும் கலாச்சார பணிக்குழு  செயலர் அருள்பணி மரிய சார்லஸ் அவர்கள் கூறியுள்ளார்.

காற்று மாசுபாட்டை எதிர்கொள்ளவதற்கான  தீர்வைக் கண்டுபிடிப்பதில்  அரசு   கவனம் செலுத்தும் என்று  நம்பிக்கை தெரிவித்ததோடு இதன்வழியாக  காற்று மாசுபாட்டின் இந்தக் கடினமான சூழ்நிலையிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற முடியும் என்றும் யூக்கான் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் அருள்பணி சார்லஸ்.

தேசியத் தலைநகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 30 இலட்சத்திற்கும்  அதிகமான மக்கள் வாழ்கின்றனர் என்றும், குளிர்காலத்தில் அதிக காற்று மாசுபாடு காரணமாக உலக நகரங்களில் தொடர்ந்து டெல்லி முதலிடத்தில் உள்ளது என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் காற்று மாசுபடுவதற்கு விவசாயிகள் கிராமப்புறங்களில் பயிர் கழிவுகளை எரிப்பதே காரணம் என்றும், வாகனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மின்சாரம் தயாரிக்க நிலக்கரியை எரிப்பதும் காற்று மாசுபாட்டிற்கு ஒரு காரணமாகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காற்று மாசுபாட்டினை எதிர்கொள்ள சமாளிக்க வலுவான கூட்டு நடவடிக்கைத் தேவை என்று வலியுறுத்தியுள்ளார் முதல்வர் அதிஷி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2024, 15:24