தேடுதல்

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் 29வது மாநாட்டிற்குத் தயாரிப்பு காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் 29வது மாநாட்டிற்குத் தயாரிப்பு  

காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா வின் 29வது மாநாடு

வறுமை மற்றும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டு வர பணியாற்றும் கத்தோலிக்க சமூக நீதி அமைப்புகளின் ஒரு குடை தளமாக, வளர்ச்சி ஒருமைப்பாட்டிற்கான பன்னாட்டு ஒத்துழைப்பு அமைப்பு உள்ளது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் வத்திக்கான்

நவம்பர் 11 முதல்  22 வரை  அஸர்பைஜானின் பாகுவில் நடைபெறவுள்ள,  காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் 29வது மாநாட்டிற்கு உலகத் தலைவர்கள் அனைவரும்  ஒன்று கூட இருக்கிறார்கள்.

பசுமை இல்ல வாயு உமிழ்வை வெகுவாக குறைப்பதன் வழியாக காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கும், அனைவருக்கும் நிலையான மற்றும் சரிநிகரான எதிர்காலத்தை வழங்குவதற்கும் 2015 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ்  மேற்கொள்ளப்பட்ட உறுதிப்பாடுகளை ஒருங்கிணைக்கவும், விரிவுபடுத்தவும் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், ஆர்வலர்கள், அறிவியலாளர்கள் என அனைவரும் ஒன்றிணைவார்கள் என கூறப்பட்டுள்ளது.

அஸர்பைஜானில் நடைபெறவுள்ள இந்த 29வது மாநாடு, பிரேசிலில் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் 30வது மாநாட்டிற்கு முன்னதாக பல முக்கியமான பிரச்சனைகளுக்கு  தீர்வு காண உள்ளது.

காலநிலை மாற்றத்தால் விகிதாச்சார அடிப்படையில் பாதிக்கப்படுகிற, மற்றும் காலநிலை மாற்றத்தை  திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கான வளங்கள் இல்லாத வளரும் நாடுகளுக்கு நிதியளிப்பது குறித்த விவாதம் அம்மாநாட்டின்  மையப் புள்ளியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரழிவு தரும் காலநிலை தாக்கங்களைத் தவிர்ப்பதற்கான கூட்டு முயற்சியில் தங்கள் குறிக்கோள்களை  உயர்த்துவதன் வழியாக காலநிலை மாற்றத்திற்கு தகுந்த அர்த்தமுள்ள  நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாநாட்டில் பேசப்படும்.

இந்த மாநாட்டில் பங்குபெறும் கத்தோலிக்க சமூக நீதி அமைப்பான CIDSE என்ற, வளர்ச்சி ஒருமைப்பாட்டிற்கான பன்னாட்டு ஒத்துழைப்பு அமைப்பு, வறுமை மற்றும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், நியாயமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு நிலையான மாற்றுகளை மேம்படுத்துவதற்கும் ஊக்கப்படுத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற (COP28) 28வது மாநாட்டில் மதப்பிரதிநிதிகள் வழங்கிய பங்களிப்பின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடைபெறவுள்ள மாநாடு காலநிலை சவால்களை எதிர்கொள்வதில் மதங்களின் பங்கை வலுப்படுத்துவதற்காக உலகளவில் 11 வெவ்வேறு மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 97 குழுக்களின் பங்கேற்பும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளரும் நாடுகளின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளைக் கருத்தில் கொண்டு, காலநிலை நெருக்கடி  மற்றும் பிரச்சனைக்கேற்ப போதிய  நிதி குறித்த நியாயமான மற்றும்  புதிய  இலக்கை ஒப்புக்கொள்வதே இந்த 29வது மாநாட்டின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்.

காலநிலை மாற்றம் தொடர்புடைய, ஐ.நா.வின் இந்த 29வது மாநாடு,  கடந்த மாநாட்டில்  முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, இழப்பு மற்றும் சேத நிதியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 November 2024, 14:18