இளையோருக்காக குரல் கொடுக்கும் காங்கோ கர்தினால்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
நாட்டின் அரசியலைப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்ற நோக்கத்தில் நேரத்தையும் சக்தியையும் பணத்தையும் விரயமாக்கிக் கொண்டிருக்கும் காங்கோ நாட்டில் இளையோர் குறித்து எவரும் கவலைப்படாததால் அவர்களின் வாழ்வு பாதிக்கப்படுகிறது என கவலையை வெளியிட்டார் அந்நாட்டு கர்தினால் Fridolin Ambongo Besungu.
காங்கோ அரசுக்கும் மக்களின் தேவைக்கும் இடையே மிகப்பெரிய அளவில் இடைவெளி உள்ளது என்ற கவலையை வெளியிட்ட, Kinshasa பேராயர், கர்தினால் Besungu அவர்கள், அனைவரின் முழுக்கவனமும் அரசியலமைப்பு திருத்தம் குறித்தே இருப்பதால் இளையோரின் வாழ்வு பலியிடப்படுவதைப்பற்றி எவரும் கவலைகொள்ளவில்லை என்றார்.
கைவிடப்பட்ட இளையோரைக் குறித்து கவலைப்படாமல், அரசியலைப்பு மாற்றம் குறித்த முயற்சிகளுக்கு அனைத்தையும் வீணாக்கிவருவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்ற கர்தினால், எவ்வித பொய்யான வாக்குறுதிகளுக்கும், வெற்று மாயைகளுக்கும் தங்களை இழக்கவேண்டாம் என்ற விண்ணப்பதையும் இளையோரிடம் விடுத்தார்.
கடந்த அக்டோபரில் காங்கோ அரசுத் தலைவர் Félix Tshisekedi அவர்கள் அரசியலமைப்பு திருத்தத்திற்கென ஓர் அவையை உருவாக்கினார்.
இருமுறைகளே ஒருவர் அரசுத்தலைவராக இருக்கலாம் என்ற அரசியலமைப்பு விதியை மாற்றுவதே இதன் நோக்கமாகும்.
மூன்றாவது முறையாக அரசுத்தலைவராக போட்டியிட அரசியலமைப்பு திருத்தம் வழியாக Tshisekedi முயன்று வருவதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்