தேடுதல்

அமைதிக்காக அறைகூவல் விடுக்கும் பெண்கள் (கோப்புப் படம்) அமைதிக்காக அறைகூவல் விடுக்கும் பெண்கள் (கோப்புப் படம்)  (AFP or licensors)

இந்தியாவின் மணிப்பூரில் மீண்டும் வன்முறை!

இந்தியாவின் மணிப்பூரில் இரு இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் அமலாக்கத்தை அக்டோபர் 1 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு மாநில அரசு நீட்டித்துள்ளது

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் பூர்வகுடியின குக்கி மற்றும் மெய்தி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த ஓராண்டாக இடம்பெற்று வந்த வன்முறை ஓரளவு அமைதியடைந்திருந்த வேளை, மீண்டும் வன்முறை வெடித்துள்ளதாக Fides செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மேற்கு மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நவம்பர் 12, புதன்கிழமை நேற்று ஆயுதமேந்திய குழுவினருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்ததை அடுத்து காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று அச்செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

மேலும் ஆயுதங்கள் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்த நிலையில் நவம்பர் 12 அன்று, பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் குக்கி இனத்தைச் சேர்ந்த பதினொரு பேர் கொல்லப்பட்டனர், இதில் இரண்டு காவல் படை அதிகாரிகளும் காயமடைந்தனர் என்றும் அச்செய்திக் குறிப்பு கூறுகின்றது.

இதுகுறித்து இச்செய்தி நிறுவனத்திடம் கருத்துத் தெரிவித்த மாநிலத் தலைநகரான இம்பாலின் பேராயர் லினஸ் நெலி, அவர்கள், இந்தத் தீர்வு தற்காலிகமானது என்றும் வன்முறை சாம்பலுக்குள் எரிகிறது’ என்றும்  குறிபிட்டுள்ள அதேவேளை, பேச்சுவார்த்தையிலும், அமைதியை ஏற்படுத்துவதிலும் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுவதே தீர்க்கமான நடவடிக்கையாக அமையும் என்றும் கூறியுள்ளார். 

கடந்த வாரம் பூர்வகுடிப் பெண்  ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதில் இருந்து மாவட்டத்தில் பதற்றம் உருவாகியுள்ளது என்றும், இதற்கு காரணம் மெய்தி இன குழு உறுப்பினர்கள் தான் என்றும் குற்றம் சுமத்தப்பட்டது. மறுநாள், இதற்குப் பழிவாங்கும் நோக்கில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.

கடந்த சில நாள்களாக, மலைகளின் புறநகர்ப் பகுதிகளிலும், இம்பால் பள்ளத்தாக்கிலும் கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் நடந்தன என்றும், இரு இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் அமலாக்கத்தை அக்டோபர் 1 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு மாநில அரசு நீட்டித்துள்ளது என்றும் உரைக்கின்றது அச்செய்திக் குறிப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 November 2024, 14:31