தேடுதல்

வீரமாமுனிவரின் சிலை - இடம் - சென்னை வீரமாமுனிவரின் சிலை - இடம் - சென்னை 

நேர்காணல் - தமிழ் முனிவர் வீரமாமுனிவரின் பிறந்த நாள்

தனது கருப்பு நிற அங்கியைக் களைந்து இந்திய துறவிகளைப்போல காவி உடையும் தலையில் தலைப்பாகையும் கையில் கோலும் கொண்டு வாழ ஆரம்பித்தார் வீரமாமுனிவர்.
நேர்காணல் - அருள்முனைவர் மரிய அருள் ராஜா சே. ச.

மெரினா ராஜ் – வத்திக்கான்

தமிழின் வேர்ப்பரப்பில் தன் பிறப்பை உறுதி செய்தவர். அயல்நாட்டவராக இருந்தாலும் அழகு தமிழின் அருமை உணர்ந்தவர். அதனை அற்புதமாக தன் படைப்புக்களில் வடித்தவர் வீரமாமுனிவர். திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி என்னும் நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர். இத்தாலியின் வெனீஸ் நகரில் 1680 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் நாள் பிறந்தவர் ஜோசப் கான்ஸ்டாண்டியுஸ் பெஸ்கி என்னும் இயற்பெயர் கொண்ட தமிழ்ப்புலவர் வீரமாமுனிவர். இளம் வயதிலேயே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய வீரமாமுனிவர் தனது 18ஆவது வயதில் கத்தோலிக்கக் குருவாக அழைப்புபெற்று தத்துவஇயல் இறையியல் பயின்றார். இவரது பணியார்வத்தால் கவரப்பட்ட ஆயர்கள் வெளிநாடுகளில் மறைப்பணி ஆற்றுவதற்காக இவரைத் தேர்ந்தெடுத்து 1710 ஆம் ஆண்டு இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பினர்.

அதே ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் கோவா துறைமுகப்பகுதியை வந்தடைந்த வீரமாமுனிவர் அங்கிருந்து கொச்சி, அம்பலக்காடு, திருநெல்வேலியின் புதுப்பட்டி, குருக்கல்பட்டி ஆகிய பகுதிகளில் ஒரு நில நாள்களும் வடக்கன்குளம், காமநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் இரண்டு ஆண்டுகளும் மறைப்பணியாற்றினார். இவ்விடங்களிலேயே தனது பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக்கொண்டு தனது கருப்பு நிற அங்கியைக் களைந்து இந்திய துறவிகளைப்போல காவி உடையும் தலையில் தலைப்பாகையும் கையில் கோலும் கொண்டு வாழ ஆரம்பித்தார். இந்தியாவில் மறைப்பணி ஆற்றும்போது வீரமாமுனிவர் தமிழ் மொழியைப் பயின்று, புலமை பெற்றதுடன் நிற்காமல், அம்மொழியில் பலசெய்யுள், உரைநடை, இலக்கண நூல்களையும், அகராதிகளையும் இயற்றித் தமிழ் அன்னையை அலங்கரித்துள்ளார். 1747-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் நாள் இம்மண்ணுலக வாழ்வைத் துறந்து விண்ணுலக வாழ்வை அடைந்த வீரமாமுனிவரின் தமிழ்ப்பணி காலத்தால் என்றும் அழியாதது.

வீரமாமுனிவரின் 344 ஆம் ஆண்டு பிறந்த நாளாகிய இன்று (08.11.2024) அவரைப் பற்றியும் அவரது தமிழ்ப்பணி பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொள்பவர் அருள்முனைவர். மரிய அருள் ராஜா சே.ச.  இயேசு சபை அருள்பணியாளரான அருள்முனைவர் மரிய அருள் ராஜா அவர்கள் தற்போது சென்னை லொயோலா கல்லூரியில் இயங்கிவரும் கலாச்சாரங்கள் மற்றும் சமயங்களுடனான உரையாடல் மையத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். சென்னையில் உள்ள அருள்கடல் இயேசுசபை இறையியல் கல்லூரியில் 20 ஆண்டுகளாக இறையியல் துறைத் தலைவராகவும், டெல்லியில் உள்ள வித்யஜோதி, புனேவில் உள்ள ஞானஜோதி, பெங்களுருவில் உள்ள புனித பேதுரு, புனித அல்போன்ஸ், வித்யாதீப் கல்லூரிகள், திருச்சி புனித பவுல் கல்லூரி மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களில், விவிலியம், இறையியல், சமயம் ஆகிய பாடங்களை 29 ஆண்டுகளாக்க கற்பித்து வருகின்றார்.

10 புத்தகங்களையும், 170 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் படைத்துள்ள இவர் பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டு பத்திரிக்கைகளிலும் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா, தென்கொரியா, பிலிப்பைன்ஸ், ஹாங்காங், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் உரையாற்றியும், மக்கள் இயக்கங்கள், மற்றும் விளம்புநிலை குழுக்களோடு தனது உரையாடலை தொடர்ந்து வருகின்றார். மேலும் இப்பணிகளோடு பல்வேறு பயிற்சிப்பட்டறைகளையும், ஆன்மிக வழிகாட்டுதல்களையும் வழங்கி வரும் தந்தை அவர்களை வீரமாமுனிவர் தமிழ்ப்பணி பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2024, 11:12