தேடுதல்

ஆலயம் நோக்கிச் செல்லும் குழந்தையான மரியா ஆலயம் நோக்கிச் செல்லும் குழந்தையான மரியா 

நேர்காணல் - தூய கன்னி மரியா ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட விழா

ஆண் தலைப்பேறுகளையே ஆண்டவருக்கு அர்ப்பணித்து வந்த காலகட்டத்தில் இறைவன் தங்களது வேண்டுதல்களுக்குப் பரிசாகக் கொடுத்த குழந்தை மரியாவை அந்த இறைவனுக்கேக் காணிக்கையாக்க முன்வந்தனர் மரியாவின் பெற்றோர்களான தூய சுவக்கீன் மற்றும் அன்னா.
நேர்காணல் - அருள்பணி ஆன்றனி பிரான்சிஸ் (OMD)

மெரினா ராஜ் – வத்திக்கான்

இறைவனை நோக்கிய நமது திருஅவையின் பயணத்த்தில் நாம் விண்ணகத்தை அடையவதற்கான படகு அன்னை மரியா என்பார் தூய ஜெர்மானூஸ். ஆண் தலைப்பேறுகளையே ஆண்டவருக்கு அர்ப்பணித்து வந்த காலகட்டத்தில் இறைவன் தங்களது வேண்டுதல்களுக்குப் பரிசாகக் கொடுத்த குழந்தை மரியாவை அந்த இறைவனுக்கேக் காணிக்கையாக்க முன்வந்தனர் மரியாவின் பெற்றோர்களான தூய சுவக்கீன் மற்றும் அன்னா. நவம்பர் 21 அன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கும் தூய கன்னி மரியா ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட விழாவை முன்னிட்டு அவ்விழா பற்றியக் கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்தந்தை அருட்பணி ம. ஆன்றனி பிரான்சிஸ்.

அமராவதிவிளையைத் தனது சொந்த ஊராகக் கொண்ட அருள்பணி ஆன்றனி பிரான்சிஸ் (OMD) அவர்கள்,  இறையன்னை சபையைச் சார்ந்தவர். உரோமில் திருஅவை சட்டங்களில் மேற்படிப்பினைப் பயின்றவர். தற்போது இத்தாலியின் கம்பிதெல்லியில் உள்ள  Santa Maria in poortico பங்கு ஆலயத்தின் உதவிப்பங்குத்தந்தையாகவும் தனது சபையின் பொது ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றார். தந்தை அவர்களை அன்னை மரியா ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட விழா பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க அன்புடன் அழைக்கின்றோம்.

அருள்பணி ம. ஆன்றனி பிரான்சிஸ் (OMD)

நவம்பர் மாதம் 21 ஆம் நாளைத் திருஅவையானது புனித கன்னி மரியா கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றது. புதிய ஏற்பாட்டில் நற்செய்தி நூல்களிலோ, அல்லது பவுலடியார் கடிதங்களிலோ அல்லது வேறு எந்த நூலிலோ இந்த விழாவினைக் குறித்தக் குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனால் ஆறாம் நூற்றாண்டில் இருந்தே, இவ்விழா கிழக்குத் திருஅவைகளில் கொண்டாடப்பட்டதாக திருஅவை வரலாறு கூறுகின்றது.

புதிய ஏற்பாட்டு நூல்களில் குறிப்புகள் இல்லை என்றாலும் கூட apocryphal text என்று சொல்லப்படும் திருமுறைப் பட்டியலைச் சாராத நூல்களான யாக்கோபு நற்செய்தி மற்றும் மரியாவின் பிறப்பு நற்செய்தி என்ற நூல்களில் அன்னை மரியா எருசலேம் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்வானது குறிப்பிடப்பட்டுள்ளது. மரியாவின் பெற்றோராகிய புனித சுவக்கின் மற்றும் புனித அன்னா இருவரும் முதிர் வயது வரை குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தனர். ஆயினும் நம்பிக்கையோடு இறைவனிடம் மன்றாடி வந்தனர். வானதூதர் வழியாக மரியாவின் பிறப்பு இவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. மரியாளும் பிறந்தார். இதற்கு நன்றியாக குழந்தை மரியாவை எருசலேம் ஆலயத்திற்கு அழைத்துச்சென்று, அங்கு அவரைக் கடவுளுக்குக் காணிக்கையாக்கினார்கள். அதன்பிறகு மரியா தனது 12ஆவது வயது வரை ஆலயத்திலிருந்தார் என்று யாக்கோபு எழுதியுள்ளார்.

மரியாளின் மூன்றாம் வயதில் இந்த நிகழ்வு நடந்ததாகவும் மரியா ஆலயத்திலேயே கல்வி கற்றதாகவும் இறைவனின் அன்னையாகும் நிலைக்கு அவர் அங்கு தன்னை தயாரித்ததாகவும் மரியாவின் பிறப்பு நற்செய்தி என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பைசாண்டைன் பேரரசர் முதலாம் ஜஸ்டின் கிபி 543ஆம் ஆண்டு எருசலேம் ஆலயத்திற்கு அருகில் ஓர் ஆலயத்தை எழுப்பி அதை புனித கன்னி மரியாவிற்கு அர்ப்பணித்தார். அதுமுதல் இவ்விழா கிழக்கு திருஅவையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக ஒன்பதாம் நூற்றாண்டு முதலே மேற்கிலும் குறிப்பாக இத்தாலியின் தெற்குபகுதிகளிலும் கொண்டாடப்பட்டதோடு 1585ஆம் ஆண்டு திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் இவ்விழாவை  உரோமை திருவழிபாட்டு நாள்காட்டியிலும் சேர்த்தார்...

அன்னை மரியா ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட விழாவினைக் கொண்டாட இருக்கும் நாமும் இறைவனின் திருவுளத்திற்கு நம்மை அர்ப்பணித்து எல்லாம் உமது விருப்பப்படியே நிகழட்டும் என்ற எண்ணம் கொண்டு வாழ்பவர்களாக வாழ முயல்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 November 2024, 10:44