தேடுதல்

யூபிலி ஆண்டிற்காகத் தயாராகும் உரோம் நகர் சாலைகள் யூபிலி ஆண்டிற்காகத் தயாராகும் உரோம் நகர் சாலைகள் 

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 - ஆணை மடல் பகுதி 5

திருப்பயணம் என்பது ஒவ்வொரு யூபிலி நிகழ்வின் அடிப்படைக் கூறுகளை வெளிப்படுத்துகின்றது. ஒரு பயணத்தை மேற்கொள்வது என்பது வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுதல் போன்றதாகும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

5. எதிர்நோக்கின் திருப்பயணிகள்

எதிர்நோக்கு மற்றும் பொறுமையிலிருந்து, கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு பயணம் என்பது தெளிவாகிறது. நமது எதிர்நோக்கை ஊக்கமூட்டவும் வலுப்படுத்தவும், நமது இலக்கை நோக்கிய பார்வையைக் கூர்மைப்படுத்தவும் இயேசுவுடனான ஒரு சந்திப்பு தேவை. 1300ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட முதல் யூபிலியானது கடவுளது மக்களின் ஆன்மிகத்தால் வழிநடத்தப்பட்ட அருளின் பாதை இந்த யூபிலி ஆண்டு என்பதை எடுத்துரைக்கின்றது. இக்காலத்தில் தூய கடவுளின் மக்கள் மீது பொழியப்பட்ட ஏராளமான ஆசீரை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது.

திருப்பயணம் என்பது ஒவ்வொரு யூபிலி நிகழ்வின் அடிப்படைக் கூறுகளை வெளிப்படுத்துகின்றது. இது தற்செயலானது அல்ல. ஒரு பயணத்தை மேற்கொள்வது என்பது வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுதல் போன்றதாகும். திருப்பயணங்கள் மேற்கொள்வோரின் பாதங்களானது, அமைதி மற்றும் துன்பத்தின் தன்மை, அதன் இன்றியமையாத தன்மையின் மதிப்பு போன்றவற்றை மீட்டெடுக்க பெரிதும் உதவுகிறது. வரவிருக்கும் எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஆண்டில் இந்த யூபிலியின் அனுபவத்தை உறுதியாகக் கண்டறிய அதன் பழமையான மற்றும் நவீன பாதைகளில் நடக்கத் தவறவேண்டாம்.

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்லுதல், எல்லைகளைக் கடத்தல், ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்குச் செல்லுதல், அங்குள்ள படைப்புக்கள் மற்றும் கலைகளை இரசித்தல் போன்றவற்றின் வழியாக பல்வேறு மக்களின்  அனுபவங்களையும் கலாச்சாரங்களையும் அறிந்துகொள்ளலாம். அவற்றை தங்களுக்குள் பொக்கிஷமாக வைத்திருக்கவும், செபத்தினால் நல்லிணக்கமான அழகை தங்களுக்குள் சுமந்து கொள்ளவும், இறைவன் நமக்கு செய்த அற்புதங்களுக்காக நன்றி சொல்லவும் இந்த யூபிலி ஆண்டில் நாம் அழைக்கப்படுகின்றோம். யூபிலி ஆண்டிற்கான ஆலயங்கள், வழித்தடங்கள் அனைத்தும் ஆன்மிகத்தின் சோலைகளாக, நமது நம்பிக்கைப் பயணத்தைப் புதுப்பித்து,  எதிர்நோக்கின் நீரூற்றுகளிலிருந்து நமது தாகத்தை தணிக்கச்செய்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2024, 13:36