தேடுதல்

செபிக்கும் கரங்கள் செபிக்கும் கரங்கள் 

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – ஆணை மடல் பகுதி - 3

தூயஆவி திருஅவையின் பணியில் தனது வற்றாத உடனிருப்பால் மக்களுக்கு எதிர்நோக்கின் ஒளியை பரப்புகின்றார். அணையாத சுடராய் நம் வாழ்க்கைக்கு ஆதரவையும் உறுதியையும் தருகின்றார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அன்புக்குரியவர்களே யூபிலி ஆண்டு 2025-ஐ முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட ஆணைமடலில் உள்ள கருத்துக்கள் குறித்து அறிந்துகொண்டு வரும் நாம் இன்றைய நம் நிகழ்வில் கிறிஸ்துவின் அன்பிலிருந்து பிறப்பெடுக்கும் எதிர்நோக்கு குறித்து ஆணைமடலில் உள்ள எண் 3-இல் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் குறித்துக் காண்போம்.

எதிர்நோக்கு என்பது சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் அன்பில் இருந்து பிறக்கின்றது. பகைவர்களாக நாம் இருந்தாலும் சிலுவையில் அறையப்பட்ட இறைமகனாம் இயேசுவின் மரணத்தினால் நாம் அனைவரும் அவரோடு ஒப்புரவாகி அவருடைய வாழ்வால் சகோதர சகோதரிகளாக மீட்கப்படுகின்றோம். நம்பிக்கையால் உயிரூட்டப்பட்ட இயேவினுடைய வாழ்வு தூய ஆவியின் செயலால் புதுப்பிக்கப்பட்டு அசைக்க முடியாததாக எதிர்நோக்கால் வழிநடத்தப்படுகின்றது. தூயஆவி திருஅவையின் பணியில் தனது வற்றாத உடனிருப்பால் மக்களுக்கு எதிர்நோக்கின் ஒளியை பரப்புகின்றார். அணையாத சுடராய் நம் வாழ்க்கைக்கு ஆதரவையும் உறுதியையும் தருகின்றார்.

கிறிஸ்துவின் மீது கொண்டுள்ள அன்பினை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ எதிர்நோக்கு என்பது ஏமாற்றாது, ஏமாற்றமடையாது. கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது. எனவே எதிர்நோக்கு சிரமங்களுக்கு இடமளிக்காது. நம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்டு பிறரன்புச் செயல்களினால் ஊட்டமளிக்கப்படுகின்றது. நமது வாழ்க்கையில் நாம் முன்னேறிச் செல்ல உதவுகின்றது. எனவே தான் தூய அகுஸ்தீன் எந்தவிதமான வாழ்க்கையிலும் ஒருவரால் ஆன்மாவின் நம்பிக்கை அன்பு எதிர்நோக்கு இல்லாமல் வாழ முடியாது என்று எடுத்துரைக்கின்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 November 2024, 12:40