திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 - ஆணை மடல் பகுதி 6
மெரினா ராஜ் – வத்திக்கான்
2025 ஆம் ஆண்டு யூபிலி ஆண்டானது கடந்த ஆண்டுகளில் இறைவனிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட அருளின் அடையாளமாக அதன் தொடர்ச்சியாகக் கொண்டாடப்பட இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு மார்ச் 15 அன்று நற்செய்தியின் முக்கிய அறிவிப்பான இறைத்தந்தையின் இரக்கத்தை ஒவ்வொரு நிலையிலுள்ளவர்களும் அறிந்துகொள்ளவேண்டும் எதிர்கொள்ளவேண்டும் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக இரக்கத்தின் ஆண்டானது சிறப்பிக்கப்பட்டது. இப்போது புதிய யூபிலி ஆண்டு வந்துவிட்டது. இந்த புதிய யூபிலி ஆண்டில் கிறிஸ்துவின் மீட்பின் உறுதியான நம்பிக்கையை இதயத்தில் தூண்டுகின்ற கடவுளது அன்பின் வாழ்க்கை அனுபவத்தை வழங்குவதற்காக மீண்டும் புனிதக் கதவை திறக்க இருக்கின்றோம். தனது 33 ஆவது வயதில் தனது உயிரை நமது மீட்பிற்காக அர்ப்பணித்த இயேசுவின் பாடுகள் மற்றும் உயிர்ப்பை நினைவுகூறும் வருகையில் 2033 ஆம் ஆண்டு மீட்பின் இரண்டாயிரமாம் ஆண்டு யூபிலியை நாம் கொண்டாட இருக்கின்றோம். செயலில் வெளிப்பட்ட நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உழைப்பையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் பெற்றுள்ள மனவுறுதியையும் நம் தந்தையாம் கடவுள்முன் இவ்வாண்டில் நினைவுகூருகின்றோம்.
இந்த யூபிலி ஆண்டானது முழு திருஅவைக்கும் அருளின், எதிர்நோக்கின் உறுதியான அனுபவமாக இருக்க முடியும் என்ற உறுதியுடன், வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பெருங்கோவில் புனிதக் கதவு டிசம்பர் 24 கிறிஸ்து பிறப்பு பெருவிழா நள்ளிரவு திருப்பலியின்போது திறக்கப்பட உள்ளது. அதற்குப்பின் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை புனித யோவான் இலாத்தரன் பசிலிக்காவில் உள்ள புனிதக் கதவானது திறக்கப்பட உள்ளது. நவம்பர் 9 (2024) அன்று இப்பெருங்கோவிலின் 1700 ஆவது ஆண்டு நிறைவானது கொண்டாடப்பட்டது. 2025ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று தூய மேரி மேஜர் பெருங்கோவிலில் உள்ள புனிதக் கதவும், 2025 ஆம் ஆண்டு ஜனவரி 5 தூய பவுல் பெருங்கோவில் புனிதக் கதவும் திறக்கப்பட உள்ளது. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 29 அன்று பிற தலத்திருஅவை கர்தினால்கள், ஆயர்கள் அந்தந்த தலத்திருஅவைகளில் உள்ள திருத்தலங்கள் மற்றும் பேராலயங்களில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றி யூபிலி ஆண்டினைத் துவக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுக்கின்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்