தேடுதல்

தாவீதும் அப்சலோமும்  தாவீதும் அப்சலோமும்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 61-1, கடவுளுக்குத் தாவீதின் விண்ணப்பம்!

தாவீதைப் போன்று நாமும் கடவுள்மீது நம்பிக்கை கொண்டு நம்மை ஆட்டிப்படைக்கும் தீய சக்திகளிடமிருந்து விடுதலைபெற வேண்டுவோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 61-1, கடவுளுக்குத் தாவீதின் விண்ணப்பம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘கடவுளின் பிரமாணிக்கம்!’ என்ற தலைப்பில் 60-வது திருப்பாடலில் 6 முதல் 12 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவு செய்தோம். தாவீது அரசரைப் போன்று, நாமும் நமது இறைநம்பிக்கையை புதுப்பித்துக் கொண்டு புதிய வாழ்வைத் தொடங்க இறையருள் வேண்டி மன்றாடினோம். இவ்வாரம் 61-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். ‘பாதுகாப்புக்காக மன்றாடல்’ என்று தலைப்பிடபட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் எட்டு இறைவசனங்களைக் கொண்டுள்ளது. 'பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீதுக்கு உரியது' என்று அடைப்பு குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பாடல்  4, திருப்பாடல் 6, திருப்பாடல் 54, மற்றும் திருப்பாடல் 55 ஆகியவற்றில் இந்தத் திருப்பாடலின்  தலைப்பை நாம்  முன்பு பார்த்தோம், ஆனால் இங்கே சற்று வித்தியாசத்துடன் ஒரு தனி நபரின் தனிப்பட்ட பக்திக்கு ஏற்றவாறு இத்திருப்பாடல் அமைந்துள்ளது.

தாவீது அடிக்கடி பிரச்சனையில் சிக்குண்டு தவித்து வந்தார். இத்திருப்பாடலை எழுதத் தூண்டிய வாழ்க்கைச் சூழ்நிலைகள் நமக்குத் தெரியவில்லை. அவர் ஆட்சி அரியணைக்கு வந்த பிறகு இத்தகையதொரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது. காரணம், திருப்பாடல் 61-ல் உள்ளதைப் போல தாவீதிடமிருந்து அவரது மகன் அப்சலோம் அரச பதவியை கைப்பற்ற முயற்சித்தபோது, அவனிடமிருந்து தப்பி ஓடி சிரியாவிலும் பிறகு ஏதோமிலும் இருக்க நேர்ந்த வேளை இத்திருப்பாடலை அவர் எழுதியிருக்கலாம் என்றே விவிலியப் பேராசிரியர்கள் கருதுகின்றனர். காரணம், இத்தகைய வேளைகளில் அவர் மிகவும் சோகமாக இருந்தார். தன்னால் எதுவும் செய்ய முடியும் என்று அவர் நினைக்காததே இதற்குக் காரணம். இதைத்தான் “என் உள்ளம் சோர்வுற்றிருக்கின்றது; உயரமான குன்றுக்கு என்னை அழைத்துச் செல்லும்” (வச.2) என்று கடவுளிடம் கூறுகின்றார். மேலும் இந்தச் சூழலை அவர் எதிர்த்துப் போராடும் அளவுக்குத் தன்னிடம் வலிமை இருப்பதாக அவர் உணரவில்லை. இந்தவொரு இக்கட்டான சூழலில் தாவீது தனது உயிரை மாய்த்துக்கொள்ளவே விரும்பினார். ஆனாலும், இது தவறு, இது கடவுளுக்கு முற்றிலும் எதிரான செயல் என்று அவருக்குத் தெரியும், அதனால்தான் அவர் கடவுளிடம் உதவி கேட்டு மன்றாடினார். தாவீதைப் பொறுத்தவரை, தன்னைப் பாதுக்காக்கும் கேடயமாகவே கடவுளை அவர் உணர்ந்துகொண்டார். மேலும் பூவூலகின் முடிவைப் பற்றிய குறிப்பு இத்திருப்பாடலில் இருப்பதன் காரணமாக, இது அவரது மகன் அப்சலோமின் கிளர்ச்சியின் காலத்திலோ அல்லது யூப்ரதீசுக்கு அருகில் அவன் இராணுவப் புரட்சியை ஏற்படுத்த விரும்பிய வேளை, தாவீது இந்தத் திருப்பாடலை எழுதியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது (காண்க 2 சாமுவேல் 8:3-4).

இப்போது இத்திருப்பாடலின் முதல் 5 இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். முதலில் அவ்வார்த்தைகளை அமைதி நிறைந்த மனமுடன் வாசிக்கக் கேட்போம். "கடவுளே! என் கூக்குரலைக் கேளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாயும். பூவுலகின் கடைமுனையினின்று உம்மைக் கூப்பிடுகின்றேன்; என் உள்ளம் சோர்வுற்றிருக்கின்றது; உயரமான குன்றுக்கு என்னை அழைத்துச் செல்லும். ஏனெனில் நீரே என் புகலிடம்; எதிரியின்முன் வலிமையான கோட்டை. நான் உமது கூடாரத்தில் எந்நேரமும் தங்கியிருப்பேன்; உமது இறக்கைகளின் பாதுகாப்பில் தஞ்சம் புகுவேன். ஏனெனில், கடவுளே! நான் செய்த பொருத்தனைகளை நீர் அறிவீர்; உமது பெயருக்கு அஞ்சுவோர்க்குரிய உடைமையை எனக்குத் தந்தீர" .(வச. 1-5)

முதலில் "கடவுளே! என் கூக்குரலைக் கேளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாயும்” என்கிறார் தாவீது. தனது சொந்த மகன் அப்சலோமால் அவர் அனுபவிக்கும் துயரமும் வேதனையும் தாவீதின் இந்த வார்த்தைகளில் வெளிப்படுவதைப் பார்க்கின்றோம். மன்னர் சவுலால் தாவீது அனுபவித்து வந்த துயரங்களை நாம் நன்கு அறிவோம். இப்போது தனது மகனாலேயே அனுபவிக்கிறார். ஆனாலும் மனம் தளராத தாவீது இந்த நெருக்கடியான வேளையிலும் கடவுளை நோக்கிக் கூக்குரலிடுகின்றார். ஆக, தாவீதின் இந்த வார்த்தைகள் நமது நெருக்கடியான வேளையில் நாமும் கடவுளை நோக்கிக் குரலெழுப்பி மன்றாடலாம் என்ற நம்பிக்கையை நமக்குக் கொடுக்கிறது. நமது கடினமான காலங்களில் ​​நாம் அவரை நோக்கிக் கூப்பிடவும், அவருடைய பெயரை அறிக்கையிடவும் கடவுள் விரும்புகிறார் என்பதை இக்கணம் நாம் உணர்ந்துகொள்வோம்.

இரண்டாவதாக, “என் உள்ளம் சோர்வுற்றிருக்கின்றது; உயரமான குன்றுக்கு என்னை அழைத்துச் செல்லும். ஏனெனில் நீரே என் புகலிடம்; எதிரியின்முன் வலிமையான கோட்டை” என்கிறார் தாவீது. இங்கே குன்று என்பது கடவுள் வாழும் உறைவிடத்தைக் குறிக்கிறது. அதுமட்டுமன்றி, சுனாமி போன்ற ஆபத்துக் காலங்களில் நாம் உயரமான இடத்திற்கு ஏறிச்சென்று அதாவது, மலைக்குன்றுகளின்மேல் ஏறிச்சென்று தப்பித்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. ஆக, நமது வாழ்வில் ஆபத்துகள் நம்மை நெருங்கும்போது மலைகளைத் தனது உறைவிடமாகக் கொண்டிருக்கும் கடவுளை நோக்கி நாம் கூக்குரலிடும் வேளை கடவுள் மனமிரங்கி நம்மைக் காப்பார் மற்றும் சோர்வுற்ற நம் உள்ளங்களைத் தேற்றுவார் என்பது உறுதியாகின்றது. ஏனென்றால் நமது எதிரியின்முன் கடவுளே வலிமையான கோட்டையாகவும் திகழ்கின்றார். இதன் அடிப்படையில்தான் தாவீது மேற்கண்ட வார்த்தைகளைக் கூறி இறைவேண்டல் செய்கிறார். இறுதியாக, "நான் உமது கூடாரத்தில் எந்நேரமும் தங்கியிருப்பேன்; உமது இறக்கைகளின் பாதுகாப்பில் தஞ்சம் புகுவேன்" என்று உரைக்கின்றார் தாவீது. தனது மகன் அப்சலோம் தனக்கு எதிராக வெகுண்டெழுந்தபோதும், அவனையும் அவனது நண்பர்களையும் போர்கொண்டு அழித்தொழிக்க எண்ணாமல், தான் நம்பியிருக்கும் கற்பாறையாம் கடவுளிடம் மட்டுமே சரணடைகின்றார். அவர்மீது மட்டுமே ஆழமான நம்பிக்கை கொள்கின்றார். மேலும் "கடவுளே! நான் செய்த பொருத்தனைகளை நீர் அறிவீர்; உமது பெயருக்கு அஞ்சுவோர்க்குரிய உடைமையை எனக்குத் தந்தீர" என்கின்றார். இங்கே பொருத்தனைகள் என்பது விண்ணப்பங்கள், வேண்டுதல்கள் என்றும் நாம் பொருள்கொள்ளலாம்.

ஒருநாள் கடைக்காரரிடம் ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி, “உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு கிடைப்பாரா” என்று கேட்டான் சிறுவன் ஒருவன். உடனே அவன் கையில் இருந்த நாணயத்தைத் தட்டிவிட்ட அக்கடைக்காரர் சிறுவனை அங்கிருந்துத் துரத்திவிட்டார். சிறுவனும் அந்த நாணயத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடையாக சென்று ஒரு ரூபாய்க்கு இறைவன் வேண்டுமென்று கேட்டுக்கொண்டே சென்றான். பல கடைக்காரர்கள் அவனை விரட்டி விட்டாலும் மனம் தளராத அச்சிறுவன் அங்கிருந்த ஒரு பெரிய கடைக்குச் சென்று கடை உரிமையாளரிடம், “உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு எனக்குக் கொடுங்கள்” என்று கேட்டான். உடனே கோபமடைந்த அந்தக் கடைக்காரர் அவனை இழுத்துக் கொண்டு போய் வெளியே தள்ளி விட்டார். அப்போது அங்கு   வந்துகொண்டிருந்த ஒரு விலையுயர்ந்த சொகுசு காரின் முன்னே சென்று விழுந்தான் அந்தச் சிறுவன். உடனே அந்த கார் நிறுத்தப்பட்டது. நல்ல வேளை அவனுக்கு அடியேதும் படவில்லை. அப்போது அந்த காரில் இருந்து இறங்கிய பெரியவர் அந்தச் சிறுவனை பார்த்து, “உனக்கு என்ன ஆயிற்று” என்று கேட்டார். அவன் அவரிடம் நடந்ததை, கூறி பின்னர் அவரிடமே, தன்னுடைய ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி, “உங்களிடம் இறைவன் இருந்தால் இந்த ஒரு ரூபாயை வைத்து கொண்டு அவரை எனக்குக் கொடுக்க முடியுமா” என்று கேட்டான். அதற்கு அந்தப் பெரியவர், “ஒரு ரூபாய்க்கு இறைவனை வாங்கிச் சென்று அவரை வைத்து நீ என்ன செய்யப் போகிறாய்” என்று கேட்டார்.  அதற்கு அச்சிறுவன், “எனக்கு எல்லாமே என் தாய் தான். சாப்பாடு ஊட்டுவது முதல் தாலாட்டுப் பாடி என்னைத் தூங்க வைப்பது வரை என் தாய் தான். தற்போது அவர் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் உன் தாயை இறைவன் தான் காப்பாற்ற முடியும் என்று கூறி விட்டனர். அதனால்தான் என்னிடம் உள்ள ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா என்று தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினான். அதற்கு அந்தப் பெரியவர், “உனக்கு ஒரு ரூபாய்க்கு இறைவன் தானே வேண்டும், நான் தருகிறேன்” என்று கூறி, ஒரு கடிதம் எழுதி, அதை ஒரு உறையுள் போட்டுக் கொடுத்து, “இதனை கொண்டு போய் உன் தாய் அனுமதிக்கப்பட்டுள்ள  மருத்துவமனையில் இந்தப் பெயர்கொண்ட மருத்துவரிடம் கொடு” என்று கூறி அனுப்பி வைத்தார். சிறுவனும் அவ்வாறே நேராக மருத்துவமனைக்குச் சென்று அந்த மருத்துவரைக் கண்டு அந்த உறையை கொடுத்தான்.  அதனைப் பிரித்துப் பார்த்த மருத்துவர், மருத்துவமனையின் நிறுவனர் தன் கைப்பட எழுதிய  அந்தக் கடிதத்தைக் கண்டு அதிர்ந்து போய் உடனே அந்தத் தாய்க்கு தீவிர உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, அந்தச் சிறுவனின் தாயைக் காப்பாற்றினார்.

அதன் பின்னர் முக்கிய மருத்துவர்கள் புடை சூழ மருத்துவமனையின் நிறுவுநர், அதாவது அந்தப் பெரியவர் உயிர் பிழைத்த சிறுவனின் தாயைக் காண வந்தார். அவர்களைப் பார்த்த தாய், மருத்துவ செலவைப் பற்றி நினைத்து, என்ன ஆகுமோ என அச்சத்தில் உறைந்து இருந்தாள். அந்த ஏழைத் தாயிடம் வந்த அந்தப் பெரியவர், "கவலை படாதீர்கள் அம்மா, உங்கள் சிகிச்சைக்கான அனைத்துத் தொகையையும் உங்கள் மகன் செலுத்தி விட்டான்" என்றார். இதைக் கேட்டதும்  அதிர்ந்துபோன அந்தத் தாய் தன் அருகே தூங்கிக்கொண்டிருந்த தன் மகனைப் பார்த்தாள். மேலும் தொடர்ந்து பேசிய  பெரியவர், "செலவு போக மீதித் தொகையை உங்கள் மகனை படிக்க வைப்பதின் மூலம் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்றார். தாய் மிகவும் பயந்து போய் அவரிடம் காரணத்தைக் கேட்டபோது அவர், "உங்கள் மகனின் கடவுள் மீதான நம்பிக்கை மற்றும் அவரைப் பெற்றே தீருவேன் என்ற விடா முயற்சியும் தான் நான் உங்களுக்கு இந்தச் சேவையை செய்ய காரணம்" என்று கூறினார்.

தாவீது கொடிய எண்ணம் கொண்ட தனது மகன் அப்சலோமிடமிருந்து தனது நாட்டையும் மக்களையும் காப்பாற்ற தன்னை சிறுபிள்ளையாகிக்கொண்டு கடவுளிடம் முறையீடு செய்வது நம் மனங்களை நெகிழ்ச்சியடையச் செய்கிறது. இத்தகையதொரு நம்பிக்கையை நாமும் கொண்டு நம்மை ஆட்டிப்படைக்கும் தீய சக்திகளிடமிருந்து விடுதலைபெற இந்நாளில் இறைவனிடம் இறையருள் வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2024, 14:40